'விடுமுறை முடிந்து திரும்புகையில் கர்ப்ப பரிசோதனை' - விடுதி மாணவிகள் புகாரின் பின்னணி
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள ஓர் அரசு பழங்குடியினர் விடுதியில் தங்கியுள்ள பல மாணவிகள், விடுமுறை முடிந்து விடுதிக்குத் திரும்பும்போது, சிறுநீரை வைத்துச் செய்யப்படும் கர்ப்பப் பரிசோதனைக்குத் தாங்கள் உட்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மகாராஷ்டிராவின் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையால் நடத்தப்படும் ஓர் அரசு விடுதியில் தங்கியுள்ள கல்லூரி மாணவியான சினேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பிபிசி மராத்தியிடம் பேசியபோது, "நாங்கள் ஏன் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்? நான் முதலாம் ஆண்டு கல்லூரிப் படிப்புக்கு வந்ததில் இருந்தே, இதைச் செய்யவில்லையெனில் விடுதியில் தங்க அனுமதிக்கப்பட மாட்டோம் என்று மேடம் கூறி வருகிறார்," என்று தெரிவித்தார்.
ஆஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும், "ஏழு அல்லது எட்டு நாட்கள் விடுப்பில் சென்று திரும்பும்போது, நாங்கள் சிறுநீர் கர்ப்பப் பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும்," என்றார்.
அவருடன் இருந்த மற்றொரு மாணவியான ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), "விடுமுறை முடிந்து மாணவிகள் வீட்டிலிருந்து திரும்பும் போதெல்லாம் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இது பற்றி விடுதி சார்பில்தான் எனக்குத் தெரிவிக்கப்பட்டது," என்றார்.
மேற்கொண்டு பேசிய அவர், "அதைச் செய்யாமல் அவர்கள் உடல் தகுதிச் சான்றிதழ் வழங்குவதில்லை. இதற்கென்றே ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதைப் பின்பற்றிய பின்னரே உடல் தகுதிச் சான்றிதழை வழங்குகிறார்கள்," என்றும் தெரிவித்தார்.
விடுமுறைக்குப் பிறகு தங்களிடம் உடல் தகுதிச் சான்றிதழ் கேட்கப்படுவதாகவும், தாங்கள் கர்ப்பப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவதாகவும் இந்த மாணவிகள் கூறுகின்றனர்.
அரசு விதிமுறைகளின்படி, விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு கர்ப்பப் பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமில்லை. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்தச் செயல்பாடுகளை மாணவிகள் மிகவும் 'அவமானகரமானது' என்று விவரிக்கின்றனர்.
"நாங்கள் இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளோம். ஆனால், அதற்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை," என்கிறார் சினேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு மாணவி, தான் பலமுறை இந்தப் பரிசோதனைகளைச் செய்துள்ளதாகக் கூறினார். கிட்டத்தட்ட அனைத்து மாணவிகளுமே இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தனர்.
"இந்தச் சூழல் மாணவிகளின் கல்வியைப் பாதிப்பது மட்டுமின்றி, மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது," என்கிறார் ஆஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
மேற்கொண்டு பேசிய அவர், "இது நிறுத்தப்பட வேண்டும். இதைப் பார்க்கும் மக்கள் எங்களை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். 'திருமணமாகாத நாங்கள் ஏன் இந்தப் பரிசோதனையைச் செய்கிறோம்?' என்ற கேள்வியுடன் நோக்குகிறார்கள்," என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள ஆசிரமப் பள்ளி ஒன்றில், மாணவிகளுக்கு கட்டாய கர்ப்பப் பரிசோதனை செய்யப்படுவதை பெற்றோர் ஒருவர் உறுதிப்படுத்தினார். அது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று விசாரித்தபோது, அங்கிருந்த ஒரு மருத்துவரும் அவரிடம் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார்.
அங்கு படிக்கும் ஒரு மாணவியின் தாயார் இதுகுறித்துக் கூறுகையில், "மாதவிடாய் ஏற்படும் மாணவிகள் மட்டுமே மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மருத்துவப் பரிசோதனைக்கு ஒரு கிட் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கருவி மூலம் சிறுநீர் பரிசோதிக்கப்படுகிறது. பின்னர், அதில் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என எது வருகிறதோ அதை படிவத்தில் குறிப்பிடுகிறார்கள்," என்று விவரித்தார்.
மேலும் பேசிய அவர், "இதில் அரசுக்கும் சில பொறுப்புகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் இந்தப் பரிசோதனையைச் செய்ய 150-200 ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. அந்தச் செலவை ஒவ்வொரு முறையும் பெற்றோர்தான் ஏற்க வேண்டியுள்ளது," என்றார்.
இது தொடர்பாகத் தகவல் பெறுவதற்காக, நாங்கள் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றோம்.
அங்கு, பெயரைக் குறிப்பிட விரும்பாத நிலையில் பேசிய மருத்துவர் ஒருவர், "ஆசிரமப் பள்ளியின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் கர்ப்பப் பரிசோதனைக் கருவிகளைக் கொண்டு வருகிறார்கள். அதன் முடிவுகள் எங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் ஆசிரமப் பள்ளியின் படிவத்திலும் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆசிரமப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை மாணவிகள் படிக்கின்றனர்," என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பழங்குடியினர் மேம்பாட்டு ஆணையம் செப்டம்பர் 30ஆம் தேதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அரசு விடுதிகளில் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின்போது, மாணவிகளை கர்ப்பப் பரிசோதனை செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்று அந்த அறிக்கை அறிவுறுத்தியது.
இது தொடர்பாகப் பேசிய திட்ட அதிகாரி பிரதீப் தேசாய், "நாங்கள் எந்தப் பெண்ணையும் கர்ப்பப் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்கவில்லை," என்று தெளிவுபடுத்தினார்.
ஆனால், இவை ஒருபுறம் இருந்தபோதிலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தாங்கள் கர்ப்பப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியிருந்ததாகப் பல மாணவிகள் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்துப் பேசிய பழங்குடியினர் மேம்பாட்டு ஆணையர் லீனா பன்சோத், "இதுபோன்ற எவ்விதப் பரிசோதனையும் நடத்தப்படக் கூடாது என்று பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது. அப்படிப்பட்ட கட்டாயம் எங்கும் இல்லை," என்று கூறினார்.
புனே மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரியான மருத்துவர் நாகநாத் எம்பல்லே, "சிறுநீர் கர்ப்பப் பரிசோதனை நான்கு மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக" கூறினார். மேலும், அதற்கு முன்னதாக, "மாணவிகள் விடுதியில் இருந்து வீட்டிற்குச் செல்லும்போது அந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ளும்படி கேட்கப்பட்டதாக" அவர் தெரிவித்தார்.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



