You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலிய துப்பாக்கிச் சூடு - சஜித் அக்ரம் இந்திய பாஸ்போர்டில் பிலிப்பின்ஸ் சென்றாரா?
சிட்னியின் பிரபலமான போண்டை கடற்கரையில் நடைபெற்ற யூதர்களின் ஹனுக்கா நிகழ்வின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு நடந்து இரண்டு நாட்களாகியும், இது தொடர்பான பல கேள்விகள் உள்ளன.
இந்த நிலையில், தாக்குதல் நடத்திய இரண்டு நபர்களும் நவம்பர் மாதம் பிலிப்பின்ஸுக்கு வந்ததாக பிலிப்பின்ஸ் குடிவரவுப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ஆஸ்திரேலிய காவல்துறை தற்போது விசாரித்து வருகிறது.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சஜித் அக்ரம் இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி தங்கள் நாட்டுக்குப் பயணம் செய்ததாகவும், அவரது மகன் நவித் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டில் பிலிப்பின்ஸுக்கு வந்ததாகவும் பிலிப்பின்ஸ் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
சிட்னியில் தாக்குதல் நடத்திய இரண்டு துப்பாக்கி ஏந்திய நபர்கள், நவம்பர் 1ஆம் தேதி பிலிப்பின்ஸுக்கு வந்து, நவம்பர் 28ஆம் தேதி திரும்பிச் சென்றதாக பிலிப்பின்ஸ் குடிவரவுப் பணியகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
பிலிப்பின்ஸில் எங்கு சென்றனர்?
குடிவரவுப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் டானா சான்டோவாலின் கூற்றுப்படி, 50 வயதான சஜித் அக்ரம் இந்திய பாஸ்போர்ட்டிலும், அவரது 24 வயது மகன் நவித் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டிலும் பயணித்துள்ளனர்.
இருவரும் பிலிப்பின்ஸில் உள்ள டாவோவுக்கு செல்லவிருப்பதாகவும், அதன் பிறகு ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு திரும்புவதாகவும் தெரிவித்ததாக டானா சாண்டோவால் கூறினார்.
டாவோ என்பது பிலிப்பின்ஸின் முக்கியமான தெற்குத் தீவான மின்டானோவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பரந்த பெருநகரமாகும். மின்டானோவின் மத்திய மற்றும் தென்மேற்குப் பகுதிகளின் வறுமையான பகுதிகளில் இஸ்லாமிய ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருவதாக அறியப்படுகிறது.
இதற்கிடையில், அந்த இருவரும் பிலிப்பின்ஸில் இருந்தபோது, "ராணுவ பாணியிலான பயிற்சியை" பெற்றதாக வெளியான செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லை என்று பிலிப்பின்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் 'ஐ.எஸ் சித்தாந்தத்தால் தூண்டப்பட்டது' போலத் தெரிவிதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசி தெரிவித்துள்ளார்.
'ஐ.எஸ் சித்தாந்தத்தால் தூண்டப்பட்டது'
ஆஸ்திரேலிய பிரதமரின் அலுவலகம், ஏபிசி சிட்னிக்கு அல்பனீஸ் அளித்த வானொலி நேர்காணலில் இருந்து சில பகுதிகளைப் பகிர்ந்தது.
அல்பனீஸ் இந்த நேர்காணலில், "இது ஐ.எஸ் சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது," என்று கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதலை அவர் "துல்லியமானது, திட்டமிடப்பட்டது மற்றும் இரக்கமற்றது" என்று விவரித்தார்.
ஆஸ்திரேலியா, ஐ.எஸ் குழுவை 2014ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்தது.
துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்டவர்களின் வாகனத்தில் இருந்து ஐ.எஸ் குழுவின் கொடி எனச் சொல்லப்படும் கொடி கையகப்படுத்தப்பட்டு இருப்பதாக காவல் ஆணையர் மால் லான்யோன் தெரிவித்தார்.
வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க அவர் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிக் கேட்கப்பட்டபோது, ஆஸ்திரேலிய பிரதமர், தனது அரசாங்கம் முதலில் அவற்றை சட்டவிரோதமாக்க நாடாளுமன்றத்தில் மசோதாவை கொண்டு வரும் என்று கூறினார்.
இதுவரை கிடைத்துள்ள அனைத்து தகவல்களும் துப்பாக்கி ஏந்திய இரண்டு பேரும் தனியாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் காட்டுவதாக பிரதமர் அல்பனீஸ் கூறினார்.
சிட்னி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை யூத சமூகத்தினர் மீது நடந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய இருவரும் சமீபத்தில் பிலிப்பின்ஸுக்கு சென்றிருப்பதாக காவல் ஆணையர் மால் லான்யோன் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் ஏன் அங்கு சென்றார்கள், அவர்களின் நோக்கம் என்ன, அங்கு அவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள் என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
'ஆயுத உரிமம்'
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் காவல் ஆணையர் மால் லான்யோன், திங்கள்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில், சஜித் அக்ரமிடம் வேட்டையாடுவதற்கான துப்பாக்கி உரிமம் இருந்ததாகவும், அவர் ஒரு துப்பாக்கி கிளப்பின் உறுப்பினராக இருந்ததாகவும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் டோனி பர்கேவின் கூற்றுப்படி, சஜித் அக்ரம் 1998ஆம் ஆண்டு மாணவர் விசா மூலம் ஆஸ்திரேலியா வந்தார். 2001ஆம் ஆண்டில் அவரது விசா பார்ட்னர் விசாவாக மாற்றப்பட்டது, பின்னர் அவருக்கு ரெசிடண்ட் ரிட்டர்ன் விசா கிடைத்தது.
இதுவரை நடந்தது என்ன?
- ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போன்டை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) உள்ளூர் நேரப்படி மாலை 6:47 மணிக்கு யூத சமூகத்தின் ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தை குறி வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
- இந்தத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
- துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம்சாட்டப்படும் இருவர், தந்தை- மகன் என்றும், சஜித் அக்ரம் (50) மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் (24) என்றும் உள்ளூர் ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளன. சஜித் காவல்துறையின் பதில் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், காயமடைந்த நவீத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- இது ஒரு 'யூத எதிர்ப்பு பயங்கரவாதச் சம்பவம்' என்று ஆஸ்திரேலியப் பிரதமர் விவரித்துள்ளார். அத்துடன், துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
- சம்பவ இடத்தில் இருந்த 43 வயதான அகமது அல் அகமது என்பவர், துப்பாக்கிச்சூடு நடத்திய இரு நபர்களில், ஒருவரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்த ஆயுதத்தைப் பறித்தார். அவரது செயலுக்காகப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அவருக்காக 10 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது.
- இந்தச் சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் இருவரும் பிலிப்பின்ஸ் நாட்டிற்குச் சென்றது குறித்து ஆஸ்திரேலிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சஜித் அக்ரம் இந்திய பாஸ்போர்ட்டையும், அவரது மகன் நவீத் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டையும் பயன்படுத்தி பிலிப்பின்ஸ் நாட்டிற்குப் பயணம் செய்ததாக மணிலாவில் உள்ள குடிவரவு அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
- துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்படும் சஜித் அக்ரம் (50) இந்தியாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என்று தெலங்கானா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
- இந்தத் தாக்குதல் "இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) அமைப்பின் சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது" என ஆஸ்திரேலியப் பிரதமர் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு