You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனடா: ஜஸ்டின் ட்ரூடோ விசா விதிகளை கடுமையாக்கியது ஏன்? கனேடிய மக்களின் கவலை என்ன?
- எழுதியவர், நதீன் யூசிஃப் மற்றும் ஜெசிகா மர்ஃபி
- பதவி, பிபிசி நியூஸ், டொரண்டோ
பல தசாப்தங்களாக கனடா வெளிநாட்டினரைக் கைநீட்டி வரவேற்கும் ஒரு நாடாகத் தன்னை முன்னிறுத்தி வந்தது. தனது மக்கள்தொகையை அதிகரிக்கவும் தொழிலாளர் எண்ணிக்கையில் உள்ள இடைவெளிகளை நிரப்பவும், உலகெங்கிலும் மோதல்களுக்கு அஞ்சி வெளியேறும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்ட குடியேற்றக் கொள்கைகளை அது கடைப்பிடித்து வந்தது.
ஆனால் சமீபகாலமாக, அரிதாகி வரும் சமூக சேவைகள், அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் கட்டுப்படியாகாத வீட்டுவசதி ஆகியவை தொடர்பாக கனேடிய மக்களின் கவலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கனடாவில் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க விரும்புவதாக சமீபத்திய மாதங்களாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி வருகிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் கனேடிய அடையாளத்தின் முக்கிய அங்கமாகப் பன்முக கலாசாரத்தை முன்வைத்துப் போட்டியிட்ட ட்ரூடோவிற்கும், அந்தத் திசையில் இயங்கி வந்த அந்நாட்டிற்கும் இதுவொரு பெரிய மாற்றம்.
அவரது அரசு பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கு மாபெரும் குடியேற்ற இலக்குகளை நம்பியுள்ளது.
ட்ரூடோ கூறியது என்ன?
விமர்சனங்கள் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் ஆதரவு மதிப்பீடுகளுக்கு மத்தியில் பிரதமர் ட்ரூடோ, ’தனது அரசு தவறான கணக்கீடுகளைச் செய்துவிட்டதாகவும், பொது உள்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து பராமரிக்க கனடா மக்கள்தொகை வளர்ச்சியை "நிலைப்படுத்த வேண்டும்" என்றும் இப்போது கூறுகிறார்.
வியாழனன்று ட்ரூடோ மற்றும் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர், இதுவரையிலான மிகக் கடுமையான குடியேற்றக் குறைப்புகளை முன்வைத்தனர். அதாவது 2025இல் நாட்டிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட இருக்கும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் 21 சதவீதத்தைக் குறைத்துள்ளனர்.
தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களை உள்ளடக்கிய கனடாவின் தற்காலிக குடியுரிமை திட்டங்களுக்கான மாற்றங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொள்கையில் தனது மாற்றத்தை விளக்கிய ட்ரூடோ, "கனேடியர்கள் தங்கள் குடியேற்ற அமைப்பு குறித்துப் பெருமிதம் கொள்வதாக" கூறினார்.
"இது நமது பொருளாதாரத்தை உலகம் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு ஆக்கியுள்ளது. இவ்வாறு நாம் வலுவான, பன்முகத்தன்மை கொண்ட சமூகங்களை உருவாக்குகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால், தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க கோவிட்-19 தொற்றுநோய் காலகட்டத்திற்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான தற்காலிக குடியிருப்பாளர்களை நாட்டில் அனுமதித்தபோது தனது அரசு "சமநிலையை ஓரளவு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை" என்று ட்ரூடோ ஒப்புக்கொண்டார்.
மேலும் இப்போது கனடாவின் குடியேற்ற அமைப்பை "நிலைப்படுத்த" வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் கூறினார்.
குறையும் மக்கள் ஆதரவு
கனடாவில் குடியேற்றத்திற்கான மக்கள் ஆதரவு குறைந்து வரும் நிலையில் அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 1977ஆம் ஆண்டு முதல் குடியேற்றம் குறித்த கனேடிய மக்களின் அணுகுமுறைகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் ’என்விரானிக்ஸ் கழகம்’ செப்டம்பர் மாதம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.
கடந்த கால் நூற்றாண்டு காலகட்டத்தில் தற்போது முதன்முறையாக, ’அதிக குடியேற்றம்’ இருப்பதாகப் பெரும்பான்மையானோர் கூறுவதாக அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
மக்கள் மனப்பான்மையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் முக்கியமாக வீட்டு வசதி பற்றாக்குறை பற்றிய கவலைகளால் இயக்கப்படுவதாக அந்தக் கழகம் கூறியது. ஆனால் பொருளாதாரம், அதிக மக்கள் தொகை மற்றும் குடியேற்ற அமைப்பு எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதும் பெரிய காரணிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அபாகஸ் டேட்டா கருத்துக் கணிப்பாளர் டேவிட் கோலெட்டோ, "குடியேற்றம் தொடர்பான ஒருமித்த கருத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை. பிரச்னையின் அளவு மிகப் பெரியது,” என்று கூறினார்.
"ஒருமித்த கருத்து இப்போது உடைந்துவிட்டது. அடுத்த ஆண்டு மத்திய மற்றும் மாகாண அரசியலில் இது மிக முக்கியமான விவகாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
கனடாவின் பன்முக கலாசாரம்
கனடா புலம்பெயர்ந்தோரைப் பெரிதும் வரவேற்கும் ஒரு நாடாகவே உள்ளது. உலகளவில் அகதிகள் மீள்குடியேற்றத்தில் அது முன்னணியில் இருப்பதாகத் தரவுகள் காட்டுகின்றன. மேலும் கடந்த 50 ஆண்டுகளில் புதியவர்களை மதிக்கும் நாடு என்ற நற்பெயரையும் அது உருவாக்கியுள்ளது.
கடந்த 1988இல் நிறைவேற்றப்பட்ட கனேடிய பன்முக கலாசார சட்டம், கனடாவின் அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது. அதன் பன்முக கலாசார பாரம்பரியம் அரசியலமைப்பிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
"கனேடிய மக்களின் மனப்பான்மை 1990களின் பிற்பகுதியில் இருந்து குடியேற்றத்திற்கு ஆதரவாக உள்ளது" என்று டொரண்டோ பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான மைக்கேல் டோனெல்லி பிபிசியிடம் கூறினார்.
மக்கள் புலம்பெயர நினைக்கும் 10 சிறந்த நாடுகளில் கனடா குடியேற்றத்தைப் பற்றி மிகவும் நேர்மறையான பார்வையைக் கொண்டுள்ளது என்று 2019ஆம் ஆண்டில் பியூ(Pew) ஆராய்ச்சி அறிக்கை சுட்டிக்காட்டியது.
கனடாவின் வாக்காளர்களில் புலம்பெயர்ந்தோர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனவே, குடியேற்றத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதில் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இது தடையாக இருப்பதாக பேராசிரியர் டோனெல்லி கூறினார்.
கட்டுப்பாடற்ற இடப்பெயர்வு காரணமாகப் பல நாடுகள் அனுபவிக்கும் பிரச்னைகள் கனடாவில் இல்லை என்றே சொல்லலாம். அதன் புவியியல் அமைப்பே இதற்குக் காரணம். மூன்று திசைகளில் பெருங்கடல்கள் மற்றும் தெற்கே அமெரிக்காவால் அந்த நாடு சூழப்பட்டுள்ளது. அதன் குடியேற்ற நடவடிக்கைகள் ஒழுங்குமுறையும், வெளிப்படைத் தன்மையும் கொண்டவை என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
மாறிவரும் சூழல்
ஆனால் இந்த நேர்மறையான உணர்வுகள் கடந்த சில ஆண்டுகளில் மாறிவிட்டதாகக் கூறுகிறார் பேராசிரியர் டோனெல்லி.
கனடாவிற்கு வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதே இதற்கான ஒரு காரணம்.
சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2022 முதல் 2023 வரை கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக சர்வதேச கல்விக்கான கனேடிய பணியகம் தெரிவிக்கிறது. அதேநேரம், கடந்த ஐந்து ஆண்டுகளில் கனடாவில் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனேடிய அரசாங்கத்தின் தவறான கணக்கீடுகள் காரணமாக கனடாவின் குடியேற்ற அமைப்பு அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக, மக்களிடையே வளர்ந்து வரும் உணர்வு இதற்கான மற்றொரு காரணி என்று பேராசிரியர் டோனெல்லி கூறினார்.
கடந்த 2016இல் மெக்சிகோவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவைகளை கனடா நீக்கியதை அடுத்து புகலிடக் கோரிக்கைகள் அதிகரித்தன. எனவே, கனடா இந்த ஆண்டின் தொடக்கத்தில் விசா கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க வேண்டிய நிலைக்கு ஆளானது.
சில சர்வதேச மாணவர்கள் தங்களுடைய தற்காலிக விசாவை பயன்படுத்தி நாட்டில் நிரந்தர புகலிடம் கோருவதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதை "அபாயகரமானது" என்று அமைச்சர் மார்க் மில்லர் அழைத்தார்.
இந்தச் சம்பவங்களும் மற்ற விஷயங்களும், குடியேற்றத்தின் மீதான கட்டுப்பாட்டை அரசு இழந்துவிட்டதாக மக்களை நினைக்க வைத்துள்ளது" என்றார் பேராசிரியர் டோனெல்லி.
நாடு முழுவதும் வீட்டுவசதி நெருக்கடியால் கனேடியர்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நிலவும் வீடுகளின் பற்றாக்குறை காரணமாக வாடகையும் வீட்டு விலைகளும் அதிகரித்துள்ளன.
"அதிக எண்ணிக்கையில் (புதியவர்கள்) உள்ளே வருவதையும், வீட்டுப் பற்றாக்குறையையும் மக்கள் பார்க்கிறார்கள். அதன் விளைவாக, வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் வருவதுதான் இதற்கு நேரடியான காரணம் என்று முடிவு செய்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
கனடாவில் குடியேற்றம் தொடர்பாக சில இனரீதியிலான எதிர்ப்பு வாதங்கள் காணப்பட்டாலும், கனேடியர்களின் இந்த மாறும் அணுகுமுறைகள், ஐரோப்பிய நாடுகளிலோ அல்லது அண்டை நாடான அமெரிக்காவிலோ காணப்படும் உணர்வுகளால் இயக்கப்படவில்லை என்று பேராசிரியர் டோனெல்லி குறிப்பிட்டார்.
மாறாக, கனடாவின் குடிவரவு செயல்முறை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தால் இது தூண்டப்படுகிறது.
"'இது எங்கள் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது என்ற தோற்றத்தைக் கொடுக்க ட்ரூடோ அரசு முயல்கிறது," என்று பேராசிரியர் டோனெல்லி மேலும் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)