You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பள்ளியில் சத்துணவு செய்ய விடாமல் தடுக்கப்பட்ட தலித் பெண் - 7 ஆண்டுக்கு பிறகு நீதி கிடைத்தது எப்படி?
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
''உன்னை 2006-லேயே துரத்தி விட்டோமே, இப்போது எதற்கு திரும்பி வந்தாய்? நீ சமைத்து எங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதா?" எனக் கூறி என்னைக் கையைப் பிடித்து இழுத்து தள்ளிவிட்டு, பாத்திரங்களை எடுத்து வீசி, என்னை மாற்றாமல் பள்ளிக்கூடத்தைத் திறக்க விடமாட்டோம் என்று மூடிவிட்டனர்!''
கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தனக்கு நேர்ந்ததை பிபிசியிடம் இப்படி விவரித்தார் பாப்பாள்.
திருப்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராகப் பணி செய்து வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த பாப்பாளுக்கு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த வன்கொடுமை தொடர்பான வழக்கில் நவம்பர் 28 அன்று தீர்ப்பு வந்தது.
அவரைப் பணி செய்யவிடாமல் தடுத்த பிற சமுதாயத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பணியில் சேர்ந்ததில் இருந்து 'ஊர் ஊராக துரத்தப்பட்ட' பாப்பாள்
பாப்பாளுக்கு கடந்த 2006ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்ட சமையலராக கந்தாயிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் பணியில் சேர நியமன ஆணை வழங்கப்பட்டது. அங்கு அவர் பணியில் சேரச் சென்றபோது, சமையல் செய்வதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை.
''நீ சமைத்தால் எப்படி பிற சாதிக் குழந்தைகள் சாப்பிடுவார்கள்' என்று சொல்லி சமையல் செய்யவிடாமல் ஊர்த் தலைவர் தடுத்துவிட்டார். பின்பு சில நாட்கள் துாய்மைப் பணி செய்தேன். அதன் பிறகு, அதிகாரிகளிடம் கூறியபோது, திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளிக்குப் பணி மாறுதல் கொடுத்தனர்.
இங்கே வந்தபோது அப்போதிருந்த பஞ்சாயத்துத் தலைவர் கணவர் பட்டியலினத்தைச் சேர்ந்த நான் சமைத்தால் பிற சமூகத்தினரின் குழந்தைகள் சாப்பிட முடியாது என்று கூறி கையைப் பிடித்து வெளியே தள்ளினார்'' என்று அப்போது நடந்ததை பிபிசி தமிழிடம் விளக்கினார் பாப்பாள்.
அதற்குப் பின்பு ஒச்சாம்பாளையம் அரசுப் பள்ளிக்கு பாப்பாளை மாற்றியுள்ளனர். அந்தப் பள்ளி, பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியிலேயே இருப்பதோடு, அங்கு பட்டியலின மக்களின் குழந்தைகள் மட்டுமே படிப்பதால் அங்கே 12 ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பணி செய்ததாகக் கூறுகிறார் பாப்பாள்.
ஆனால், தினமும் இதற்காக 15 கி.மீ. பேருந்தில் பயணம் செய்துள்ளார். சில நாட்களில் ஒரு பேருந்தைத் தவறவிட்டால் இரு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டிய நிலை இருந்துள்ளது.
''தினமும் பேருந்துக்குச் செலவாகும். அதுமட்டுமின்றி கடுமையான கால் வலியுடன் சென்றேன். கடந்த 2018ஆம் ஆண்டில் திருமலைக்கவுண்டன்பாளையம் துவக்கப் பள்ளியில் பணியாற்றிய சமையலர் ஓய்வு பெற்றுவிட்டதால் அந்தப் பள்ளிக்கு மாற்றித் தரும்படி கேட்டேன்.
வட்டார வளர்ச்சி அலுவலர் அதற்கான உத்தரவை வழங்கினார். அங்கே சேர்ந்தபோது ஏற்கெனவே பிரச்னை செய்தவர்கள் மீண்டும் தடுத்தனர். அதன் பிறகு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாற்ற உத்தரவிட்டனர்'' என்று விளக்கினார் பாப்பாள்.
கடந்த 2018 ஜூலை 17 அன்று, அங்கு பணியில் சேர பாப்பாள் சென்றபோதுதான், பெரியளவில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அவர் சமையல் செய்ய முயன்றபோது, திருமலைகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிற சாதியினர் பலரும் வந்து, அவரை சமையல் செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அன்று பணி செய்யாமல் பாப்பாள் திரும்பியுள்ளார். மறுநாளுக்குள் அவரை மாற்றாவிட்டால் பள்ளியைத் திறக்கவிட மாட்டோம் என்று கூறி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அன்று நடந்ததை பிபிசி தமிழிடம் விளக்கிய பாப்பாளின் கணவர் பழனிசாமி, ''என் மனைவியை வேலை செய்யவிடாமல் தடுத்ததால் வேறு வழியின்றி, ஊடகங்களுக்குத் தகவல் கொடுத்தோம். மறுநாள் பள்ளிக்கு முன்பாகப் பிற சமூகத்தினர் 300 பேர் வரை கூடிவிட்டனர்.
பள்ளிக்குள் வந்து பாத்திரங்களை எடுத்து வீசி, என் மனைவியை பொது இடத்தில் திட்டினர். பாப்பாளை இடம் மாற்றாமல் பள்ளியைத் திறக்கவிட மாட்டோம் என்று பள்ளியையே மூடிவிட்டனர்'' என்றார்.
அன்று நடந்த பல்வேறு நிகழ்வுகளையும் இருவரும் விவரித்தனர். சேவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அதைப் பதிவு செய்யவில்லை என்றனர். அதன் பின்பே, தகவலறிந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பெரியார் திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட 26 அமைப்பினர் வந்து, பாப்பாளுக்கு ஆதரவாகப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் மாநில செயலாளரும் பட்டியலின உரிமை செயற்பாட்டாளருமான கனகராஜ், ''வழக்கே பதிவு செய்யாமல் இருக்கவே சேவூர் போலீசார் முயற்சி செய்தனர். பல்வேறு அமைப்புகளின் கூட்டுப் போராட்டத்தால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பள்ளியை மூடி பிற சமுதாயத்தினர் போராடியபோது, அவர்களுக்கு ஆதரவாக பாப்பாளை உடனே ஒச்சாம்பாளையம் பள்ளிக்கு இடமாறுதல் செய்து பிடிஓ மீனாட்சி உத்தரவிட்டார். அதனால் அவரையும் வழக்கில் சேர்க்கப் போராடியதால் குற்றம் சாட்டப்படும் நபராக அவர் சேர்க்கப்பட்டார்'' என்றார்.
"பள்ளியை மூடி போராட்டம் நடந்தபோது, அப்போதிருந்த தலைமை ஆசிரியருக்கு வாட்ஸ்ஆப் மூலமாக பாப்பாளுக்கான பணி இடமாறுதலை பிடிஓ வழங்கியதாக" தெரிவித்தார் இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றிய பாண்டியன்.
அதைக் காண்பித்தும் பள்ளியைத் திறக்கவிடாததால், அதை அச்சடித்துக் காண்பித்த பின்பே பள்ளியைத் திறக்க அவர்கள் அனுமதித்ததாகக் கூறினார்.
அமைப்புகள் தீவிரமாகப் போராடிய பிறகு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இடமாறுதல் உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பின் 2018 ஜூலை 20 அன்றுதான் பள்ளியில் பாப்பாள் சமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீர்ப்பில் 6 பேருக்கு தண்டனை - 25 பேர் விடுவிப்பு
இந்த நிலையில் கடந்த நவம்பர் 28ஆம் தேதியன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு மொத்தம் 94 பக்கங்களைக் கொண்டது.
குற்றம் சாட்டப்பட்ட 36 பேரில், பணி இடமாறுதல் உத்தரவு வழங்கியதற்காக, கடைசியாகச் சேர்க்கப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்து, அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளார்.
வழக்கில் தொடர்புடைய 4 பேர் உயிரிழந்துவிட்டனர். மீதமிருந்த 31 பேரில் 25 பேர் மீதான குற்றம் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர்த்து, பழனிசாமி, சக்திவேல், சண்முகம், வெள்ளிங்கிரி, மாராங்காட்டு ராசு என்ற துரைசாமி, சண்முகத்தின் மனைவி சீதாலட்சுமி ஆகிய 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், 2 ஆண்டுகளுக்கு முன்பு, பாப்பாள் மீது அப்போதிருந்த தலைமை ஆசிரியர் சசிகலா புகாரின்பேரில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாப்பாள் சமைத்து, பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் சாப்பிட்ட சத்துணவில் பல்லி இருந்ததாகக் கூறப்பட்ட அந்தப் புகார் தொடர்பான வழக்கு, தற்போது அவினாசி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அதோடு, ''பள்ளியை மூடியதற்கான சாதிப் பிரச்னையை மறைத்து, பாப்பாள் மிகவும் காரமாகச் சமைப்பதால் தங்கள் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுவதால் அவரை மாற்றும் வரை பள்ளிக்கு எங்கள் குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்று 29 குழந்தைகளின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி ஓர் ஆவணம் தயாரித்தனர். ஆனால் அதை வழக்கில் காண்பிக்கவில்லை'' என்றார் வழக்கறிஞர் பாண்டியன்.
மேலும் பேசிய அவர், ''காவல்துறை சார்பில் பல ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஆசிரியர் உள்பட அரசு ஊழியர்கள் பலரும் இதில் பிறழ் சாட்சிகளாகிவிட்டனர்.
அதனால் பாதிக்கப்பட்டவர் தரப்பில் இருந்த ஆவணங்களை வைத்தே வழக்கில் வாதத்தை முன்வைத்தோம். பாப்பாள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பவானி மோகனின் வாதம் பெரிதும் உறுதுணையாக இருந்தது'' என்றார்.
வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டபோது, 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதிருந்த நீதிபதியால் சமபந்தி நடத்தும் ஒரு சமரச முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதை பாப்பாள் விவரித்தார்.
''பாப்பாள் சமைத்தால் நீங்கள் சாப்பிடுவீர்களா என்று நீதிபதி கேட்டதற்கு சரி என்று கூறிவிட்டனர். ஆனால், அவர்கள் வேறு ஆளை வைத்து சமைத்துச் சாப்பிட்டனர். நான் குழந்தைகளுக்கு மட்டும் சமைத்தேன். எனது சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பா.மோகன், 'அவர்களே சமைத்து அவர்களாகவே சாப்பிட்டது எப்படி சமபந்தி ஆகுமென்று' கேட்டதால் அந்த சமபந்தியையும் நீதிமன்றம் ஏற்கவில்லை'' என்றார் பாப்பாள்.
கடந்த நவம்பர் 28ஆம் தேதியன்று இந்த வழக்கில் தீர்ப்பு வந்தபோது, பல்வேறு கட்சியினரும், பட்டியலின அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் பாப்பாளுக்கு மாலை அணிவித்து, திருமலைகவுண்டன்பாளையத்தில் ஊர்வலமாக அழைத்து வந்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆனால் இந்த வழக்கில் தாங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கவில்லை என்று வழக்கில் ஆஜரான பாப்பாளின் வழக்கறிஞர் பவானி பா.மோகன் மற்றும் அரசு வழக்கறிஞர் பாண்டியன் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
''கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து பாப்பாள் பட்டியலினத்தவர் என்பதற்காகப் பல பள்ளிகளில் இருந்து துரத்தப்பட்டுள்ளார். அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதில் பிடிஓ உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் தங்கள் பணியைச் செய்யாமல் பிற சமுதாயத்தினருக்கு ஆதரவாக தவறுகள் செய்துள்ளனர். சமூகரீதியான போராட்டம் வலுத்த பிறகே, வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த அதிகாரிகள் யாருமே தண்டிக்கப்படவில்லை'' என்றார் மூத்த வழக்கறிஞர் பவானி பா.மோகன்.
மேலும் பேசிய அவர், ''சமையல் செய்யும் ஓர் அரசு ஊழியரைத் தடுப்பதைவிட வன்கொடுமை வேறில்லை. அந்த வகையில் இதை கோகுல்ராஜ், சங்கர்–கெளசல்யா, கண்ணகி–முருகேஷ் போன்ற (ஆணவக் கொலை) வழக்குகள் போல முக்கியமான வழக்காக நாங்கள் பார்க்கிறோம். தண்டனை இன்னும் கடுமையாக இருந்திருக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து. அதனால் நாங்கள் மேல் முறையீடு செய்வோம்'' என்றார்.
பள்ளியில் தற்போது என்ன நிலவரம்?
இந்த வழக்கில் தீர்ப்பு வந்த பின்பு, திருமலைகவுண்டன்பாளையத்தில் பிபிசி தமிழ் நேரில் களஆய்வு செய்தது.
கடந்த 2018 ஜூலையில் இந்தச் சம்பவம் நடந்தபோது, இந்த இரு பாலர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்தது. தற்போது சுற்றிலும் சுவர் கட்டப்பட்டு கதவு போடப்பட்டுள்ளது.
ஏராளமான வகுப்பறை கட்டமைப்புடன் பள்ளி இருந்தாலும் மொத்தம் 35 பேர் மட்டுமே படிப்பதாகவும், 4 நிரந்தர ஆசிரியர்களும், பகுதி நேர ஆசிரியர்கள் இருவரும் பணியாற்றுவதாக பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியம் தெரிவித்தார்.
அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரும் இங்கு படிப்பதாகவும், அனைவருமே தற்போது சத்துணவு சாப்பிடுவதாகவும் சத்துணை அமைப்பாளர் (பொறுப்பு) ராஜாமணி கூறினார். பள்ளிக்குள் பாப்பாள் சமைப்பதையும், அதை அனைத்து மாணவர்களும் சாப்பிடுவதையும் நேரில் காண முடிந்தது.
''பிரச்னைக்கு முன்பு 85 குழந்தைகள் படித்து வந்தனர். நான் இங்கு சமையல் செய்கிறேன் என்பதற்காகவே சாதி பார்த்து பலரும் தங்கள் குழந்தைகளை இங்கிருந்து அழைத்துச் சென்று வேறு பள்ளிகளில் சேர்த்துவிட்டனர்.
என்னால் பள்ளிக் குழந்தைகளுக்கும் சாதியைப் பற்றித் தெரிந்துவிட்டதே என்பதுதான் என் வருத்தம். இந்தத் தீர்ப்பால் தவறு செய்தவர்கள் பலருக்குத் தண்டனை கிடைத்துள்ளது. ஆனால், சாதிய பாகுபாடு பல வழிகளில் இன்னமும் நீடிக்கிறது'' என்றார் பாப்பாள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு