சேப்பாக்கம் மைதானத்தில் கேகேஆரின் இந்த பௌலர்களை சிஎஸ்கே சமாளிப்பது ஏன் கடினம்?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், பாபா இந்திரஜித்
- பதவி, கேகேஆர் முன்னாள் வீரர்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கடைசி 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அவர்கள் எடுத்த ஒரு புள்ளியும் ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் வந்தது.
சூப்பர் கிங்ஸோ தொடர்ந்து 3 தோல்விகளுக்குப் பிறகு ஒருவழியாக வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலுமே பிரச்னைகள் இருந்த நிலையில், தற்போது அவை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகத் தொடங்கியிருக்கின்றன.
முதல் மூன்று போட்டிகளும் தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது காம்பினேஷன் சரியாக அமைந்திருக்கிறது. அது எதிர்பார்த்த முடிவை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
சூப்பர் கிங்ஸுக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை
கடந்த போட்டியில் சூப்பர் கிங்ஸ் பௌலிங்கில் செய்த மாற்றங்கள் அணிக்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தன. அறிமுக வாய்ப்பு பெற்ற குர்ஜப்னீத் சிங் அந்த செம்மண் ஆடுகளத்தில் நன்கு பவுன்ஸ் ஏற்படுத்தினார். டெத் ஓவர்களில் அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் மிடில் ஓவர்களில் நன்கு பந்துவீசினார்.
அதேபோல், அகீல் ஹொசைன் பவர்பிளேவில் ஓரளவு ரன்களை கட்டுப்படுத்தினார். பவர்பிளேவில் ஸ்பின்னரை இரண்டு ஓவர்கள் பயன்படுத்தினால் ஓவர்டன், குர்ஜப்னீத் போன்ற உயரமான வேகப்பந்துவீச்சாளர்களை மிடில் ஓவர்களில் அதிகம் பந்துவீசவைக்க முடியும். அந்தக் கட்டத்தில் சுழற்பந்துவீச்சை நன்றாக ஆடும் பேட்டர்களுக்கு எதிராக வேகப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த முடியும் என்பது சூப்பர் கிங்ஸுக்கு ஒரு சாதகமான அம்சம். இது சூப்பர் கிங்ஸ் பௌலிங் யூனிட்டுக்கு புத்துணர்வு கொடுக்கும்.
பேட்டிங்கைப் பொறுத்தவரை சாம்சன் ஃபார்முக்கு வந்திருப்பது அணியைப் பெருமளவு பலப்படுத்தும். ஒரு அணி சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் எப்போதுமே அவர்களின் டாப் 3 பேட்டர்களில் இருவராவது சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். முந்தைய போட்டிகளில் ஆயுஷ் மாத்ரே தான் ஓரளவு சீராக ரன் சேர்த்தார். ஆனால், இப்போது சஞ்சு சாம்சனும் ரன் சேர்க்கத் தொடங்கியிருப்பது பேட்டிங்கை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். சூப்பர் கிங்ஸுக்காக முதல் பெரிய இன்னிங்ஸை ஆடியிருக்கும் சாம்சனின் நம்பிக்கை இதனால் அதிகரித்திருக்கும். அது ருதுராஜ் கெய்க்வாட் உள்பட மற்ற பேட்டர்களுக்குமே கூட நம்பிக்கை கொடுக்கும்.
அதேசமயம் சூப்பர் கிங்ஸ் இன்னும் கொஞ்சம் வேகமாக விளையாடியிருக்க வேண்டும் என்ற வாதங்களையும் பார்க்க முடிகிறது. 20-30 ரன்கள் அதிகமாக எடுத்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், முந்தைய போட்டிகளின் சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும். பெருமளவு பின்தங்கியிருந்த ஒரு அணி உடனடியாக வேகம் காட்ட முடியாது. அந்த கூடுதல் ரன்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே போயிருந்தால், சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க வேண்டிய சூழ்நிலையும் வந்திருக்கும். அதனால், இந்த கட்டத்திலேயே அப்படி ஆடவேண்டியதில்லை. ஓரளவு அவகாசம் கொடுக்கலாம். அணி நன்கு செட் ஆன பிறகு அப்படியான ஆட்டத்தைக் கையில் எடுக்கலாம். மற்றபடி சூப்பர் கிங்ஸ் பேட்டர்கள் ஆடிய விதம் நம்பிக்கை கொடுப்பதாகவே இருந்தது.
பேட்டிங், பௌலிங் மட்டுமல்லாமல் சூப்பர் கிங்ஸின் ஃபீல்டிங்கிலுமே கூட முன்னேற்றம் தென்படுகிறது. இது மிகவும் நல்ல விஷயம். அணிக்கு உத்வேகம் கொடுக்கும்.

பட மூலாதாரம், ANI
நைட் ரைடர்ஸுக்கு எல்லாமே பிரச்னை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரை அவர்களுக்கு எல்லாமே பிரச்னையாகத்தான் சென்றிருக்கிறது. அவர்கள் பந்துவீச்சு எதிர்பார்க்காத சிக்கல்களை சந்தித்தது. குறிப்பாக வேகப்பந்துவீச்சு. பல வீரர்கள் காயமடைந்தனர். அணியில் ஆடிய வீரரும் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டது. இப்படியாக அவர்களின் வேகப்பந்துவீச்சு கடுமையாக பாதிக்கப்பட்டது.
நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அங்கும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. கேமரூன் கிரீன், ரமன்தீப் சிங், ரிங்கு சிங் போன்றவர்களிடமிருந்து இன்னும் ஒரு நல்ல பங்களிப்பு கிடைக்கவில்லை.
ரிங்கு சிங் இம்முறை அணியின் துணை கேப்டனாக இருக்கிறார். சீனியர் வீரராக விளங்குகிறார். அதனால், அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும். அந்த கூடுதல் எதிர்பார்ப்பு அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கலாம். முன்பு அவர்கள் கோப்பை வென்றபோது அவர்களின் பேட்டிங் அதீத பலம் கொண்டு விளங்கியது. அதில் அவர் ஒரு ஃபினிஷர் ரோல் செய்தார். ஆனால், தற்போது இவரது ரோலும் அணியில் மாறியிருக்கிறது. அணியின் ஃபார்ம் மோசமாக இருக்கிறது எனும்போது நிச்சயம் அது கூடுதல் நெருக்கடியாகத்தான் இருக்கும்.
அந்த அணியின் வேகப்பந்துவீச்சு சுமாராக இருக்கிறது. டெத் பௌலிங்கில் பிரச்னை இருக்கிறது. அணியின் முன்னணி ஸ்பின்னர் ஃபார்மில் இல்லை... இப்படியிருக்கும் போது வேறொரு துறை கூடுதலாக செயல்பட்டாக வேண்டும். கேகேஆர் பேட்டிங் அந்தப் பொறுப்பை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்களால் அடிப்படை எதிர்பார்ப்பையே நிறைவேற்ற முடியாத நிலை தான் இருக்கிறது.
இப்படியொரு நிலையில் தான் மதீஷா பதிரானா அணியில் இணையப்போகிறார் என்ற செய்தி வருகிறது. அவர் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் நேரடியாக அவரை பிளேயிங் லெவனில் களமிறக்க வேண்டும். அவரது வருகை நிச்சயம் வேகப் பந்துவீச்சில் சற்று நம்பிக்கை கொடுக்கும். அதேசமயம் அவருக்கு நிறைய சவால்களும் காத்திருக்கின்றன. அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பந்துவீச வருகிறார். அணியின் சூழ்நிலை, அதனால் ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பு அனைத்தையும் கருத்தில் கொண்டால் அவருக்கும் நிறைய நெருக்கடி இருக்கும்.
ஆனால், ஓரளவு பழக்கப்பட்ட சென்னை மைதானத்தில் களமிறங்குகிறார் பதிரானா. நிச்சயம் தன் அணிக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அவர் முயற்சி செய்வார். அதேசமயம், அவரை சரியாகப் பயன்படுத்துவதும் முக்கியம். அவரது 2 அல்லது 3 ஓவர்களை டெத் ஓவர்களில் பயன்படுத்த வேண்டும். மீதமிருக்கும் 1 அல்லது 2 ஓவர்களை முக்கியமான மிடில் ஓவர்களில் பயன்படுத்த வேண்டும். அவரை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் போட்டியின் முடிவில் தாக்கம் ஏற்படுத்தும்.

பட மூலாதாரம், ANI
சொந்த மண்ணில் ஃபார்முக்கு வருவாரா வருண்?
சுழற்பந்துவீச்சில் தரமான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஃபார்ம் கேள்விக்குறியாக இருக்கிறது. குறிப்பாக வருண் சக்கர்வர்த்தியின் ஃபார்ம். அவரது பந்துவீச்சில் நான் எந்த டெக்னிக்கல் பிரச்னைகளையும் பார்க்கவில்லை. இது முழுக்க ஒரு உளவியல் சார்ந்த சிக்கலாகவே பார்க்கிறேன். வருணின் நம்பிக்கை சற்று அடிபட்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது நீங்கள் உறுதியாக செயல்படுவதில் பிரச்னை இருக்கும்.
நல்ல ஃபார்மில், நம்பிக்கையோடு இருக்கும்போது, 'இங்கு தான் பந்துவீசப் போகிறேன். இப்படித்தான் பந்துவீசப் போகிறேன்' என்ற தெளிவு இருக்கும். அதுவே ஃபார்மில் இல்லாதபோது அந்தத் தெளிவு இருக்காது. நிறைய குழப்பங்கள் இருக்கும். அப்படித் தெளிவு இல்லாமல் பந்துவீசும்போது பந்து சரியாக விழாது. அதுதான் நடக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
அதுமட்டுமல்லாமல் பேட்டர்கள் வருணின் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவர் பந்துவீச்சில் 'அட்டாக்கிங் கிரிக்கெட்' ஆடுகிறார்கள். வருணுக்கு எதிராக டிஃபன்ஸிவாக ஆடும்போது அவர்கள் விக்கெட்டுகளைக் காப்பாற்றிக் கொள்ள முடிவதில்லை. அதனால், அடித்து ஆடுவதுதான் வருணுக்கு எதிராக சரியான அணுகுமுறை என்று அதைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள். நம்பிக்கை சற்று குறைவாக இருக்கும்போது, பேட்டர்கள் அவரை அடித்து ஆடுவது வருணுக்கு கூடுதல் பிரச்னைகளை ஏற்படுத்திவிட்டது.
வருண் தன்னுடைய அடிப்படைக்குச் செல்லவேண்டும். இன்று டி20 கிரிக்கெட்டில் எல்லா பௌலர்களுமே அடிவாங்கத்தான் போகிறார்கள். அதனால், அதை அவர் ஏற்றுக்கொண்டு, தன்னுடைய சிறந்த பந்துகளை வீசவேண்டும். அப்படியான பந்துகள் வீசும்போது பேட்டர்கள் அடித்தால் பரவாயில்லை. அதன்பிறகு ஓரிரண்டு விக்கெட்டுகள் வந்தாலும், அவரால் முழுமையாக தன் சிறந்த ஃபார்முக்குத் திரும்ப முடியும். அதனால், வருண் அதைச் செய்ய வேண்டும்.
வருண் ஏற்கனெவே ஒரு போட்டியில் ஆடாமல் வெளியே அமர்ந்திருக்கிறார். ஒரு மனநிலை மாற்றம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படியான ஒரு மாற்றம் நீங்கள் நன்கு பழகிய ஒரு இடத்தில் கிடைக்கலாம். அதற்கு ஏற்ற தருணமாக சேப்பாக்கத்தில் நடக்கும் இந்தப் போட்டி இருக்கலாம். அவருடைய ஹோம் கிரவுண்ட் இது. ஐபிஎல், டிஎன்பில் என அனைத்து போட்டிகளிலும் இங்கே அவர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவரை தன்னுடைய சிறந்த ஃபார்முக்கு எடுத்துவரக் கூடிய ஒரு சிறந்த இடம் இருக்குமென்றால் அது இதுவாகவே இருக்கும்.

பட மூலாதாரம், ANI
கேகேஆரின் இந்த பௌலர்களை சிஎஸ்கே சமாளிப்பது ஏன் கடினம்?
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை கொல்கத்தா ஸ்பின்னர்களை சஞ்சு சாம்சன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன். அவர் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நிச்சயம் சிறப்பாக செயல்படுவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், சிஎஸ்கே அணிக்கு சவால் தர கொல்கத்தாவின் அனுபவ ஸ்பின்னர்கள் நிச்சயம் தனித் திட்டங்களோடு வருவார்கள்.
அதுமட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தின் பவுண்டரி எல்லைகள் பெரியவை. ஸ்கொயர் பவுண்டரிகள் மிகவும் பெரியவை. அப்படியிருக்கும் போது சாம்சன் அந்த ஸ்பின்னர்களை எப்படி ஆடுவார் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன். இந்த யுத்தம் இந்தப் போட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































