காணொளி: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதிய இறுதிப்போட்டியின் முக்கிய தருணங்கள்

காணொளிக் குறிப்பு, மகளிர் உலகக் கோப்பை: சாதித்துக் காட்டிய இந்திய அணியின் சிறப்பான தருணங்கள்
காணொளி: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதிய இறுதிப்போட்டியின் முக்கிய தருணங்கள்

ஒருபுறம் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்த இந்தியா... மறுபுறம் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த தென்னாப்பிரிக்கா. இதுவரை சாம்பியன் பட்டத்தை ருசிக்காத இரு அணிகளும் அதற்காக மல்லுக்கட்டினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு போட்டிதான் மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் நடந்து முடிந்திருக்கிறது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய ஓப்பனர்கள் ஷெஃபாலி வெர்மா, ஸ்மிருதி மந்தனா இருவருமே இன்னிங்ஸை சிறப்பாகத் தொடங்கினார்கள்.

வழக்கத்துக்கு மாறாக ஆட்டத்தின் முதல் பந்தை ஸ்மிருதி மந்தனா எதிர்கொண்டார். வழக்கமாக அவருடன் ஓப்பனராக களமிறங்கிய பிரதிகா ராவல் தான் முதல் பந்தை எதிர்கொண்டு வந்தார். அரையிறுதியில் கூட ஷெஃபாலி தான் முதல் பந்தை சந்தித்தார். ஆனால், இந்த முறை மரிசான் காப் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை ஸ்மிருதி எதிர்கொண்டார்.

இறுதிப் போட்டிக்கு முன் பிபிசி தமிழிடம் பேசியிருந்த சென்டர் ஆஃப் எக்சலன்ஸை சேர்ந்த பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன், "மரிசான் காப் வீசும் இன்ஸ்விங் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். அத்தகைய பந்துகள் வழக்கமாக வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சிக்கல் விளைவிக்கும். அதிலிருந்து ஷெஃபாலியைக் காக்க ஸ்மிருதி இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல், முதல் ஓவரில் எவ்வித ரிஸ்க்கும் எடுக்காமல் அதை மெய்டனும் ஆக்கினார்.

ஸ்மிரிதி அவ்வளவு பாதுகாப்பாக இன்னிங்ஸைத் தொடங்க, தன் வழக்கமான பாணியில் இன்னிங்ஸை ஆரம்பித்தார் ஷெஃபாலி. அயபோங்கா காகா வீசிய முதல் பந்தையே பௌண்டரிக்கு விரட்டி தன் ரன் கணக்கைத் தொடங்கினார்.

நான்காவது ஓவருக்குப் பிறகு இவர்கள் இருவருமே அதிரடியைக் கையில் எடுத்தார்கள். இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க பௌலர்கள் தடுமாறினர். 18வது ஓவரில் ஆறாவது பௌலராக டிரையானை முயற்சித்து பார்த்தது தென்னாப்பிரிக்கா. அதற்கு உடனடி பலனும் கிடைத்தது.

43 ரன்கள் எடுத்திருந்த ஸ்மிருதி மந்தனா கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்திருந்தது இந்த தொடக்க ஜோடி.

வழக்கமாக அதிக பந்துகளை தூக்கி அடிக்கும் ஷெஃபாலி வர்மா, இறுதிப் போட்டியில் கூடுதல் கவனத்துடன் விளையாடினார். பந்துவீச்சாளரை பொறுத்து அவரது அணுகுமுறை இருந்ததையும் பார்க்க முடிந்தது. உறுதியோடு விளையாடிய ஷெஃபாலி வர்மா ஒருநாள் போட்டிகளில் மூன்று ஆண்டுகள் கழித்து அரைசதம் அடித்தார். சதம் அடிப்பார் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சீரான இடைவெளியில் விக்கெட் விழ நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி ஷர்மா அரைசதம் அடித்தார். 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்தியா 298 ரன்கள் எடுத்தது

299 ரன் என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கியது தென்னாப்பிரிக்கா. நிதானமாக ஆடிய தென்னாப்பிரிக்கா முதல் 5 ஓவர்களில் 18 ரன்களே அடித்திருந்தது. பின் மெல்ல வேகம் கூட, 8.4 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது தென்னாப்பிரிக்கா.

கேப்டன் வோல்ஃபார்ட் மற்றும் பிரிட்ஸ் கூட்டணியை அமஞ்சோத் கவுர் ரன் அவுட் மூலம் உடைத்தார். அடுத்து வந்த பாஷ், டக் அவுட் ஆகி வெளியேறினார். மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வோல்ஃபார்ட், சுனே லீஸ் ஜோடி இந்திய பந்துவீச்சை சிறப்பாகக் கையாண்டது. இருவருமே அதிரடியாக ஆடி ரன் விகிதம் குறையாமலும் பார்த்துக்கொண்டனர். பின் அந்தக் கூட்டணியை ஷெஃபாலி வர்மா உடைத்தார். ஆனால், ஷெஃபாலியின் வேட்டை அதோடு நிற்கவில்லை. அடுத்த ஓவரின் முதல் பந்தில் அனுபவ வீராங்கனை மரிசான் காப்பின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

ரன் எடுக்க தடுமாறிக் கொண்டிருந்த ஜாஃப்டாவை தீப்தி ஷர்மா வெளியேற்றினார். ஆனால், மறுபுறம் அணியின் கேப்டன் வோல்ஃபார்ட் கடுமையாக போராடினார். 96 பந்துகளில் சதம் அடித்தும் அசத்தினார்.

தென்னாப்பிரிக்கா இலக்கை மெல்ல நெருங்க நெருங்க இந்திய ரசிகர்களின் இதயம் படபடக்க ஆரம்பித்தது. கடைசி 9 ஓவர்களில் 79 ரன்கள் தேவை, நான்கு விக்கெட்டுகள் கைவசம். ஆட்டம் யாருக்கு சாதகமாக திரும்பப் போகிறது என்ற உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தீப்தி ஷர்மா பந்துவீச்சில் தென் ஆப்ரிக்க கேப்டன் வோல்ஃபார்ட் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் டிரையான் விக்கெட்டையும் காலி செய்தார் தீப்தி ஷர்மா.

இரண்டு விக்கெட்டுகளே எஞ்சியிருந்ததால் டி க்ளெர்க், காகா ஜோடி நிதானத்தை கடைபிடிக்க, மறுபுறம் தேவைப்படும் ரன் ரேட் விகிதம் ஏறிக்கொண்டே இருந்தது. நெருக்கடியில் தென்னாப்பிரிக்கா திணறிக் கொண்டிருந்த நேரத்தில் மிக காஸ்ட்ஸியான ஒரு ஓவரை வீசினார் ஶ்ரீ சரணி. 5 பந்துகளில் 14 ரன்கள் விட்டுக்கொடுக்க கடைசி பந்தில் ரன் அவுட்டானார் காகா. அதற்கு அடுத்த ஓவரிலேயே டி க்ளெர்க்கும் கேட்ச் கொடுத்து வெளியேற 246 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆட்டமிழந்தது. முதல் முறையாக சாம்பியன் மகுடத்தை சூடிய இந்திய மகளிர் அணி மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைத்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு