'அண்ணன் அரசியல், தம்பி சினிமா' என முடிவானது எப்படி? விஜயகாந்த் இளைய மகன் பேட்டி

    • எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தேமுதிக முன்னாள் தலைவர் விஜயகாந்துக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் விஜயபிரபாகரன் அரசியலை கவனிக்க, இளைய மகன் சண்முகபாண்டியன் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என சிவகார்த்திகேயனை வைத்து மூன்று படங்களைக் கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிக்கும் படம் கொம்புசீவி. இப்படம் இன்று (டிசம்பர் 19) வெளியாகியுள்ளது

கடந்த 1996ஆம் ஆண்டு காலகட்டத்தில் தேனி பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி இது எடுக்கப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் பேசிய சண்முகபாண்டியன் தெரிவித்தார்.

அண்ணன் அரசியல், தம்பி சினிமா - முடிவானது எப்படி?

கேள்வி: உங்கள் வீட்டில் அரசியலுக்கு அண்ணன், சினிமாவுக்கு தம்பி என்று முடிவானது எப்படி?

பதில்: எதையும் திட்டமிட்டுச் செய்யவில்லை. சிறு வயதில் அண்ணன் சற்று கூடுதல் எடையுடன் இருந்தார். அதைக் குறைத்துவிட்டு சினிமாவில் நடிக்க யோசித்திருக்கலாம். அதனால் முதலில் சினிமாவுக்கு வந்தேன். திடீரென அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அண்ணன் அரசியலுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை.

குழந்தைகளுக்கு படிப்பு முக்கியம். கல்லுாரி படிப்பு முடியும் வரை மகன்களுக்கு சினிமா ஆசை வந்துவிடக்கூடாது என்பதில் அப்பா தெளிவாக இருந்தார். குழந்தை நட்சத்திரமாக நடிக்க எங்களுக்கு சில வாய்ப்புகள் வந்தன. பெரியண்ணாவில் கூட அண்ணனை நடிக்க கேட்டார்கள். ஆனால், அது வேண்டாம், படிப்பைத் தொந்தரவு செய்யக் கூடாது என அப்பா மறுத்துவிட்டார். ஆனால், நான் அதிகம் படிக்கவில்லை.

வாஞ்சிநாதன், வல்லரசு, வானத்தைப் போல போன்ற அப்பாவின் படப்பிடிப்புகளுக்கு போயிருக்கிறேன். அதெல்லாம் நினைவில் இருக்கிறது. மற்றபடி, எங்களுக்கு அவர் சினிமா ஆசையை வளர்க்கவில்லை. பிறகு நான் வளர்ந்தவுடன் சகாப்தம் படத்தில் ஹீரோ ஆக்கினார். சினிமாவில் அவர்தான் எனக்கு குரு.

விஜயகாந்த் கற்றுத் தந்த பாடங்கள்

கேள்வி: உங்களுக்கு அப்பா அறிவுரைகள், பரிந்துரைகள் கொடுத்து இருக்கிறாரா?

பதில்: 'நேரத்திற்குச் செல்ல வேண்டும். அனைவரையும் மதிக்க வேண்டும், பணத்தை வீணாக்ககூடாது, யாரையும் காயப்படுத்தக்கூடாது' என்று நிறைய அறிவுறுத்துவார்.

நடிப்பைப் பொருத்தவரை, இயக்குநர்கள், சக நடிகர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்துவார். கேமரா முன்பு எப்படி இருக்க வேண்டுமென சில டிப்ஸ்களை கொடுத்திருக்கிறார். நடிகர்களின் கண்ணைப் பார்க்காமல், காதைப் பார்த்து நடித்தால் கேமரா ஆங்கிளுக்கு செட்டாகும் என்றும் கூறியுள்ளார்.

கேள்வி: அவரது சிறு வயது போராட்டங்கள் பற்றிக் கூறியுள்ளாரா?

பதில்: தனது கஷ்டங்கள் குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது, அவர்கள் மகிழ்ந்திருக்க வேண்டும் எனக் கருதிய நபர் அவர். ஆனால், சினிமாவில் ஆரம்பக் காலத்தில் அவர் சந்தித்த சிரமங்கள் குறித்து அம்மா கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் அவருடன் சில ஹீரோயின்கள் நடிக்க மறுத்தது, பல பட வாய்ப்புகள் பறிபோனது, நிறைய அவமானப்பட்டது ஆகியவற்றைப் பற்றி அம்மா கூறுவார். நான் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது அப்பாவின் மன உறுதி, போராட்ட வாழ்க்கை எனக்கு வழிகாட்டியாக இருந்தது.

முதலில் ஒரு படம் கைவிடப்பட்டபோது மிகவும் உடைந்து போனேன். எனக்கு எத்தனையோ படங்கள் பாதியில் கைவிடப்பட்டுள்ளது. போராடித்தான் வர வேண்டுமென்று அப்பா ஆறுதல் கூறினார். அது மனரீதியாக என்னைத் தயார்படுத்தியது. அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது அவரை நாங்கள் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டோம்.

அவருக்கு நகைச்சுவைப் படங்கள், நல்ல பாடல்களைக் காண்பிப்போம். அவரைச் சுற்றி எந்தவித எதிர்மறை விஷயங்களும் வரக்கூடாது, அதன் விளைவாக அவர் மனம் வருந்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

'அப்பாவே ஒரு நடிப்பு பல்கலைக் கழகம்'

கேள்வி: பொன்ராம் படங்களில் நகைச்சுவை துாக்கலாக இருக்குமே! கொம்பு சீவி திரைப்படம் எப்படி?

பதில்: எங்கள் குடும்பத்தில் அனைவருமே அவரது படங்களுக்கு ரசிகர்கள். மறைந்த என் பாட்டிகூட அவரது படங்களை, பாடல்களை விரும்பிப் பார்ப்பார். அப்பாவுக்கு ஊதா கலரு ரிப்பன் பாடல் மிகப் பிடிக்கும்.

நானும் இதுவரை நகைச்சுவை படங்களில் நடித்தது இல்லை. அவர் எனக்கு கதை சொன்னபோது மகிழ்ச்சியடைந்தேன். கொம்பு சீவியிலும் நகைச்சுவை களைகட்டும். என் மாமாவாக சரத்குமார் நடித்துள்ளார். நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த ராணியின் மகன் தார்ணிகா இதில் ஹீரோயின்.

நகைச்சுவை தவிர கதையிலும் ஒரு முக்கியமான விஷயத்தை கூறியுள்ளோம். அப்பாவின் நானே ராஜா, நானே மந்திரியில் நகைச்சுவை களைகட்டியிருக்கும். இன்றும் அந்தக் காட்சிகள் பேசப்படுகின்றன. கொம்புசீவியில் நானும் இன்னும் முரட்டுத்தனமாக நடித்து நகைச்சுவை செய்துள்ளேன். இந்தக் கதை 1990களில் நடப்பதால், செல்போன், வயர், டவர் இதெல்லாம் இல்லாமல் படப்பிடிப்பு நடந்ததால் சிரமப்பட்டோம்.

கேள்வி: நீங்கள் முறைப்படி சினிமாவுக்காக என்னவெல்லாம் கற்றுக் கொண்டீர்கள்?

பதில்: நான் சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்தேன். இந்தியாவிலோ, வெளியூரிலோ, வெளிநாட்டிலோ உள்ள திரைப்படக் கல்லூரியில் நடிப்பு கற்கவில்லை. ஆனால், எங்கள் வீட்டிலேயே நடிப்பு சொல்லிக் கொடுக்க ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறதே! அப்பா படங்களைப் பார்த்து ரசித்து, நடிக்கத் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் சில நாட்கள் கேமரா முன்பு நிற்க பயமாக இருக்கும். சரியாக நடித்துள்ளோமா என்றும் உடல் எடை காரணமாகவும் சில மனக் குழப்பங்கள் எழும். ஆனால், அடுத்தடுத்து அனுபவங்களைப் பெற்றதால் துணிச்சலாக கேமராவின் முன் நிற்கிறேன். எனக்கு வரும் கதைகளை குடும்பத்துடன் அமர்ந்து ஆலோசிக்கிறேன். அவர்களின் கருத்தை, ஆலோசனைகளைக் கேட்டு நடிக்கிறேன். நான் என்ன செய்தாலும் அதற்கு அப்பாவுடன் ஓர் ஒப்பீடு வரும். அதை மீறி நான் வென்று காட்ட வேண்டும்.

'மாமா வேடத்தில் நடிக்கும் சரத்குமார்'

கேள்வி: இந்தப் படத்தில் உங்களுடன் சரத்குமார் நடிப்பதாகக் கூறினீர்கள். அவரும் உங்கள் அப்பாவும் நண்பர்களாயிற்றே!

பதில்: ஆம், தன்னைப் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் படத்தில் அப்பா நடிக்க வைத்ததைப் பற்றிப் பல இடங்களில் பேசியுள்ளார். நடிகர் சங்கத்தில் அப்பாவுடன் பணியாற்றியுள்ளார். அந்த வகையில், இந்தப் படத்தில் என்னுடம் பாசமாகப் பழகினார்.

நாங்கள் சாப்பாட்டைப் பரிமாறிக் கொள்வோம். உடற்பயிற்சி விஷயத்தில் நிறைய அறிவுரைகளை வழங்கினார். அவரது கெட்-அப், கதாபாத்திரம், படத்திற்குக் கூடுதல் பலம்.

கேள்வி: காதல் காட்சிகளில் ஏதேனும் சவால்கள் இருந்தனவா? பாடல் காட்சிகள் நன்றாக வந்துள்ளதா?

பதில்: ரொமான்ஸ் எப்படி வருமோ என்று தயங்கினேன். முதலில் கதாநாயகியிடம் பேசி, நட்பாகப் பழகி, என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டேன். அதனால், கேமரா முன்பாக வெட்கம், தயக்கம் வரவில்லை. கதைப்படி, நான் முரட்டுத்தனமானவன். கதாநாயகி ஒரு போலீஸ்.

எங்களுக்கு இடையிலான சண்டைகள், மோதல், காதல் ஆகிய காட்சிகள் நன்றாக வந்துள்ளன. எனக்கு நடனமான மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் அதற்கேற்ற வாய்ப்புகளும் கிடைத்தன. யுவன் சங்கர் ராஜா நல்ல பாடல்களைக் கொடுத்துள்ளார்.

கேள்வி: இளையராஜா ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்று பேச்சுகள் வந்தனவே!

பதில்: ஆம். அப்பாவின் படங்களுக்கு அவர் கொடுத்த ஹிட் பாடல்களை எளிதில் மறக்க முடியாது. நான் சினிமாவில் அறிமுகமான சகாப்தம் படத்தில் கார்த்திக் ராஜா இசையமைத்தார். படைத் தலைவனுக்கு இளையராஜா இசை. இந்தப் படத்தில் யுவன்.

அவரது குடும்பத்தில் உள்ள மூவருடனும் பணியாற்றிவிட்டேன். சிறு வயதில் அப்பா முன்பாக நடனமாடியதைக்கூட யுவன் மலரும் நினைவுகளாகக் குறிப்பிட்டார். இரு குடும்பத்திற்கும் பல ஆண்டுக்கால நட்பு இருக்கிறது. இப்போது இந்தப் படத்திலும் இளையராஜா ஒரு முக்கியமான அம்மா சென்டிமென்ட் பாடலை பாடிக் கொடுத்துள்ளார். அதே பாடலில் சில வரிகளை யுவனும் பாடியுள்ளார்.

தேமுதிக, அரசியல், சினிமா

கேள்வி: பொன்ராம் இயக்கிய 3 படங்களில் ஹீரோவாக நடித்தவர் சிவகார்த்திகேயன். அவர் கொம்புசீவி பார்த்துவிட்டாரா?

கேள்வி: அவர் பராசக்தி பட வேலைகளில் பிஸி. விரைவில் பார்ப்பார் என்று நம்புகிறேன். அம்மா படம் பார்த்துவிட்டு முதலில் கேலி செய்தார். பின்னர் உனக்கு இது வெற்றியைக் கொடுக்கும் என்று நம்பிக்கையளித்தார்.

கேள்வி: உங்களைப் பற்றி, அப்பாவை பற்றிப் பேசும்போது, உங்கள் அண்ணன் விஜயபிரபாகரன் அடிக்கடி மேடைகளில் அழுதுவிடுகிறாரே!

பதில்: நான் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அப்பாவை கவனித்துக் கொண்டதை, அதற்காக சினிமா வாய்ப்புகளை மறுத்ததை அவர் நன்கு அறிவார். நாங்கள் வீட்டில் மிகவும் நெருக்கமாக இருக்க மாட்டோம்; பாசத்தைப் பொழிய மாட்டோம். ஆனால், நான் வெற்றிபெற வேண்டும் என்பதில் அவருக்கு அக்கறை அதிகம். அதனால், சற்று உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிவிடுவார்.

கேள்வி: தேமுதிக கட்சியை, அரசியல் நிலவரத்தை கவனிக்கிறீர்களா?

பதில்: எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. வீட்டில் யாராவது அரசியல் பேசினால்கூட, அதில் கவனம் செலுத்தாமல் போன் பார்க்கத் தொடங்கிவிடுவேன். அடுத்து ஒரு படத்தில் காதல் நகைச்சுவை கதையில் நடிக்கிறேன். அரசியல் சட்டயர் கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் அப்பாவின் படங்களை ரீமேக் செய்ய வேண்டுமென்ற ஆசை உண்டு. இப்படியாக சினிமாவில்தான் நான் கவனம் செலுத்துகிறேன்.

கேள்வி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு காலகட்டத்தில் சமூக ஊடகங்களால் ட்ரோல் செய்யப்படுவது, மீடியா விமர்சனங்களுக்கு உள்ளாவது ஆகியவற்றை எதிர்கொண்டாரே?

பதில்: ஆம். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு ஒருவரும் ஒரு வார்த்தைகூட தவறாகப் பேசவில்லை. அவரது நல்ல குணங்களை, உழைப்பைக் கொண்டாடினார்கள். அவர் உயிருடன் இருந்தபோது இந்த மனநிலை வந்திருந்தால், அவர் அரசியல் வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு