காணொளி: கத்தாரில் நடந்த தாக்குதல் குறித்து உலக தலைவர்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, கத்தாரில் இஸ்ரேல் நடத்தியிருக்கும் தாக்குதல்
காணொளி: கத்தாரில் நடந்த தாக்குதல் குறித்து உலக தலைவர்கள் கூறுவது என்ன?

கத்தாரில் இஸ்ரேல் நடத்தியிருக்கும் தாக்குதல் மீண்டும் மத்திய கிழக்கு பிராந்தியத்தை பதற்றத்துக்குள் தள்ளியுள்ளது. தோஹாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இத்தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது.

மறுபுறம், இந்த தாக்குதலை கண்டித்துள்ள கத்தார், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் இந்த தாக்குதலால் தான் மகிழ்ச்சியடையவில்லை எனக் கூறினார்.

சௌதி உட்பட பல்வேறு நாடுகளும் இஸ்ரேலின் செயலை கண்டித்துள்ளன. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

நியாயமான தாக்குதல் : இஸ்ரேல்

செப்டம்பர் 9ஆம் தேதி இஸ்ரேல் கத்தார் தலைநகர் தோஹாவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தங்களின் ஐந்து உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்தது. ஆனாலும், தங்கள் பேச்சுவார்த்தை குழு பிரதிநிதிகளை கொல்லும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியடைந்துள்ளது எனவும் ஹமாஸ் கூறியது.

அக்டோபர் 7 தாக்குதலுக்கு நேரடி பொறுப்பானவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் கூறுகிறது. இது முற்றிலும் நியாயமான தாக்குதல் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

உறுதியான பதிலளிக்கப்படும்: கத்தார்

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள கத்தார், இது சர்வதேச சட்டங்களின் அப்பட்டமான விதிமீறல் எனவும், கோழைத்தனமான தாக்குதல் எனவும் கண்டித்துள்ளது.

தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஜெருசலேம் நகர மையத்தில் கூடிய சில இஸ்ரேலியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆனாலும், இந்த தாக்குதலால் இஸ்ரேல் பணயக்கைதிகளின் நிலை குறித்துக் கவலையும் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு கண்டனம்

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தான் மகிழ்ச்சி அடையவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் முன்னெப்போதும் இல்லாத அளவு விரிவடைந்துள்ள நிலையில், இது சர்வதேச அழுத்தத்தை மேலும் அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் தாக்குதலை சௌதி அரேபியா "கொடூரமான இஸ்ரேலியத் தாக்குதல்" எனக்கூறி கண்டித்தது.

இஸ்ரேலின் கொடூரமான ஆக்கிரமிப்பையும், சகோதரத்துவ நாடான கத்தாரின் இறையாண்மையை இஸ்ரேல் வெளிப்படையாக மீறியதையும் "வன்மையாகக் கண்டிப்பதாக" கூறிய சௌதி வெளியுறவு அமைச்சகம், "அதன் ஒருமித்த ஆதரவை கத்தாருக்கு வழங்குவதாகவும்" தெரிவித்தது.

இஸ்ரேல் தொடர்ந்து இவ்வாறு நடந்துகொள்வது மிகவும் ஆபத்தானது என்றும், இது சர்வதேச சட்டத்தின் கொள்கைகள் மற்றும் அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் மீறுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தது.

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூட இந்தத் தாக்குதலைக் கண்டித்து, இது "கத்தாரின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான அப்பட்டமான மீறல்" எனக் கூறினார்.

"நோக்கம் எதுவாக இருந்தாலும் இந்தத் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கூறினார்.

பிரிட்டன் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் "பிராந்தியத்தில் மேலும் பதற்றம் அதிகரிக்கும்" அபாயம் இருப்பதாக எச்சரித்தார். மேலும் காஸாவில் போர் நிறுத்தம் செய்து பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

போப் லியோ செய்தியாளர் சந்திப்பில், "முழு சூழ்நிலையும் மிகவும் தீவிரமானது" என்று கூறினார்.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் முக்கிய மத்தியஸ்தராக கத்தர் தன்னை முன்னிறுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் இஸ்ரேலில் இந்த தாக்குதல், போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை பாதிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு