காணொளி - 'பிரதமரின் புதிய இல்லம்' - பிபிசி கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அரசு

காணொளி - 'பிரதமரின் புதிய இல்லம்' - பிபிசி கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அரசு

இந்திய தலைநகரின் மைய பகுதி, பிரமாண்டமான வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்திற்கு தயராகி வருகிறது. பழைய கட்டடங்களுக்கு பதிலாக, புதிய நாடாளுமன்ற கட்டடம், அமைச்சகங்களுக்கு உயரமான கட்டடங்கள் உள்ளிட்ட டஜன் கணக்கான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும் நரேந்திர மோதி அரசு தொடங்கிய மாபெரும் 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பிரிட்டிஷ் கால வடிவமைப்பில் உருவான இந்த பகுதியை மறுவடிவமைக்கும் இந்த திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டது. 2026-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், நிர்வாகத்தையும் மேம்படுத்தும் என அரசு கூறுகிறது

ஆரம்பத்தில், இந்த முழுத் திட்டத்திற்கான ஒரு தோராயமான செலவுத்தொகையை அரசு அறிவித்தது. அது ரூ.20,000 கோடி. சமீபத்தில், இந்த திட்டத்தின் செலவு அதிகரித்துள்ளதாக அரசு நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டது. ஆனால் அது எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதைக் கூறவில்லை.

இதுகுறித்து எந்த தகவலும் இல்லாததால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தோம். அதில் பிரதமரின் இல்லம், இதுபோன்ற அலுவலகங்கள் மற்றும் துணை ஜனாதிபதியின் புதிய வளாகம் ஆகியவற்றின் கட்டுமான செலவுகளைக் கேட்டோம்.

மேலும், முழு சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கான மொத்த செலவு விவரங்களையும் அரசிடம் கேட்டோம்.

பல மாதங்கள் இதை பின் தொடர்ந்த பிறகு,சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை கவனிக்கும் மத்திய பொதுப் பணித்துறையிடமிருந்து, நாங்கள் இரண்டு கடிதங்களைப் பெற்றோம். இந்தப் பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் இணைந்து கவனித்து வருகிறது.

அரசு வழங்கிய இந்த பதில்களில் இருந்து மூன்று முக்கிய விஷயங்கள் தெரிய வருகின்றன:

முதலாவதாக, பிரதமரின் புதிய இல்லத்தின் கட்டுமான செலவை அரசு வெளியிடாது. அப்படி வெளியிட்டால், இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு பாதிக்கப்படும் என அரசு கூறுகிறது.

இரண்டாவதாக, முழுத் திட்டத்தின் மொத்த செலவு, இதுவரை செய்யப்பட்ட செலவுகள், காலக்கெடு போன்ற விவரங்களை கேட்ட எங்கள் கேள்விகள் தெளிவற்றவை என்று மத்திய பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. அதனால், அந்தக் கேள்விக்கும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

இறுதியாக, பணிகள் நிறைவடைந்துள்ள துணை ஜனாதிபதியின் புதிய வளாகம் பற்றிய கேள்வி. இந்த வளாகத்தில் அவரது புதிய இல்லமும் அலுவலகமும் அமைகின்றன. இதுகுறித்தும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

இந்த மாற்றங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தனது கடமையை அரசு செய்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு