"ஐந்து முனை போட்டி, இரு பிரதான கூட்டணி" - பிகார் தேர்தல் கள நிலவரம் என்ன?

காணொளிக் குறிப்பு, "ஐந்து முனை போட்டி, இரு பிரதான கூட்டணி" - பிகார் தேர்தல் கள நிலவரம் என்ன?
"ஐந்து முனை போட்டி, இரு பிரதான கூட்டணி" - பிகார் தேர்தல் கள நிலவரம் என்ன?

இந்தியாவில் நான்காவது பெரிய சட்டப்பேரவையை கொண்ட பிகார் மாநிலத்தில் இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் நடக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியும், மகாகட்பந்தன் எனப்படும் மகா கூட்டணியும் வெற்றிக்காக மல்லுக்கட்டுகின்றன. இதற்கு மத்தியில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் நிற்கிறது. 2025 சட்டப்பேரவை தேர்தலையொட்டி இதுவரை அங்கு நடந்தது என்ன? களம் யாருக்கு சாதமாக உள்ளது. இந்த காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்.

243 தொகுதிகளை கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதி இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-இல் நடக்க உள்ளது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதிஷ்குமார் முதலமைச்சராக உள்ளார்.

மாற்றுசக்திகளாக களத்தில் பிரசாந்த் கிஷோரின் கட்சி, ஓவைசி போன்றவர்கள் இருந்தாலும் பிரதான போட்டி என்பது தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகா கூட்டணி இடையேதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ராம் விலாஸ் உட்பட சில கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

மகா கூட்டணியில் தேஜஸ்வி யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உட்பட சில கட்சிகள் உள்ளன. இந்தக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் உள்ளார்.

இந்தத் தேர்தலில், வேலைவாய்ப்பின்மை, வறுமை ஆகியவை பிரதான பிரச்னைகளாக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல, பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. மறுசீராய்வுக்கு பிறகு நாட்டில் நடக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால் தேசிய ஜனநாயக் கூட்டணி, குறிப்பாக பாஜக இந்தத் தேர்தலை பெரிதும் எதிர்பார்ப்புடன் அணுகுகிறது. ஏனெனில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, இவை இரண்டையும் தங்களின் சமீபத்திய சாதனைகளாகக் கூறி வருகிறது.

முன்னதாக, பிகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமும் பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது. சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது.

இந்தப் பின்னணியில்தான் தேர்தலை சந்திக்க உள்ளது பிகார் மாநிலம்.

சரி, இரண்டு கூட்டணிகளும் என்ன வாக்குறுதி அளித்திருக்கின்றன?

ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் 2,500 ரூபாய் மாதாந்திர உதவித்தொகை, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் உட்பட பல வாக்குறுதிகளை அளித்திருக்கிறது மகா கூட்டணி.

மறுபுறம், ஒரு கோடி வேலைவாய்ப்பு, உயர்கல்வி பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டில் ₹1 லட்சம் கோடி முதலீடு, 125 யூனிட் இலவச மின்சாரம் என்பது உட்பட பல வாக்குறுதிகளை அளித்திருக்கிறது தேசிய ஜனநாயக் கூட்டணி.

இரு கூட்டணிகளின் தேர்தல் அறிக்கையிலும் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் முக்கிய இடம் பிடித்திருப்பதை பார்க்க முடிகிறது. வேலைவாய்ப்பு பற்றி பேசும் போது குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம் பிரதமர் மோதியின் ஒரு பேச்சு.

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி பேசும்போது தமிழ்நாட்டில் வசித்துவரும் பிகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களை திமுகவினர் துன்புறுத்தி வருகின்றனர் என மோதி குறிப்பிட்டார். அதை தொடர்ந்து, திமுகவுடன் நெருக்கமாக இருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளத்தையும் இது தொடர்பாக விமர்சித்து பேசினார்.

இந்தப் பேச்சு தமிழ்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். பிரதமர் மோதி திமுகவினரைத் தான் குறிப்பிட்டார் என்றும், தமிழ்நாட்டு மக்களை பற்றி பேசவில்லை என்றும் பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

அதே போல, எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கையை பொய் மூட்டை என்றும் ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தால் பிகாரில் காட்டாட்சியை மீண்டும் கொண்டு வந்துவிடுவார்கள் என்றும் பிரதமர் விமர்சித்தார்.

ஒருபுறம், தேசிய ஜனநாயக கூட்டணியினரின் கடுமையான விமர்சன கணைகளை மகா கூட்டணி எதிர்கொள்ள, மறுபுறம் அக்கூட்டணிக்குள்ளே சலசலப்பும் உள்ளது. தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடித்ததால் சில தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் தங்களுக்குள்ளாகவே போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடி சில இடங்களில் நேருக்கு நேர் மோதுகின்றது. இது ஒருபுறமிருக்க, ஆர்.ஜே.டி கட்சியிலிந்து நீக்கப்பட்ட தேஜஸ்வி யாதவின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ், தனி கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். தனது பிரசாரத்தில் ஆர்ஜேடி கட்சியை அவர் விமர்சித்து வருகிறார்.

அதே நேரம் கூட்டணிக்குள் அதிருப்தி என்பது மகா கூட்டணியில் மட்டும் இல்லை. தேசிய ஜனநாயக் கூட்டணியிலும் அது போன்ற சிக்கல் உள்ளது. இந்த முறை தொகுதி பங்கீட்டில் ஐக்கிய ஜனதா தளம் முக்கிய பங்கு பெறாதது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். பெரிய அண்ணன் என்ற அந்தஸ்தை தங்கள் கட்சி இழந்துவருகிறது என்ற பார்வை அக்கட்சியினர் மத்தியில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

எனவே இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தல் இரு கூட்டணிக்கும் அவ்வளவு எளிதாக இருந்துவிடாது என்பது அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு