காணொளி: எப்ஸ்டீன் ஆவணங்கள் என்றால் என்ன? முழுமையான விளக்கம்
(எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன)
35 லட்சம் பக்கங்கள், 1.80 லட்சம் புகைப்படங்கள், 2,000 வீடியோக்கள் என இத்தனை ஆதாரங்களும் ஒரே ஒரு நபருடன் தொடர்புடையவை; அதுவும் தற்போது உயிரோடு இல்லாத ஒருவரைப் பற்றியவை.
அவர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். சமீபகாலமாக இவருடைய பெயரையும், 'எப்ஸ்டீன் ஆவணங்கள்' என்ற வார்த்தையையும் நீங்கள் அதிகமாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்? உலகின் முன்னணிப் பிரபலங்கள் பலரும் இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தப்படுவது ஏன்? இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இது மீண்டும் பேசுபொருளாக மாறியிருப்பது ஏன்?
இப்படிப் பல கேள்விகளுக்கான பதில்களை இந்த காணொளியில் தெரிந்துகொள்ளலாம்.
1. யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்?
இவரைப் பற்றிக் கூறவேண்டுமெனில், உலகின் மிகப்பெரிய பாலியல் கடத்தல் வழக்கு ஒன்றில் தொடர்புடைய மிக முக்கியமான நபர் ஆவார்.
1953-ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த எப்ஸ்டீன், அங்கேயே ஒரு பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் இயற்பியல் பயின்றார். இருப்பினும், இவர் பட்டப் படிப்பு எதனையும் முடிக்கவில்லை. ஒரு காலத்தில் கணித ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
அப்போது இவரிடம் பயின்ற ஒரு மாணவனின் தந்தை, இவருடைய திறமையைக் கண்டு 'பியர் ஸ்டெர்ன்ஸ்' (Bear Stearns) என்ற வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கியில் இவரை ஒரு மூத்த பங்குதாரராக ஆக்குகிறார்.
1982-இல், 'ஜே எப்ஸ்டீன் அண்ட் கோ' என்ற பெயரில் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்குகிறார் எப்ஸ்டீன். இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே வெற்றியைக் கண்டது. இதனால், இவருடைய சாதாரண வாழ்க்கை ஆடம்பர வாழ்க்கையாக மாறியது.
புளோரிடாவில் ஒரு மாளிகை, நியூ மெக்சிகோவில் ஒரு பண்ணை வீடு எனப் பல சொத்துகளைக் குவித்தார். அதே நேரத்தில் பல பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.
2002-இல் தற்போதைய அமெரிக்க அதிபரான டிரம்ப் இவரைப் பற்றிப் பேசியதாக நியூயார்க் இதழ் செய்தி வெளியிட்டது. அதில், "ஜெஃப்ரியை எனக்கு 15 ஆண்டுகளாகத் தெரியும். அவர் ஓர் அருமையான மனிதர். அவர் என்னைப் போலவே அழகான பெண்களை ரசிக்கிறார்; அதிலும் குறிப்பாக இளம் பெண்களை," என்று கூறியுள்ளார்.
டிரம்ப் மட்டுமன்றி, இப்படிப் பல பிரபலங்களுடன் எப்ஸ்டீன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்.
வெளியுலகிற்கு இவர் ஒரு பெரிய பிரபலமாகத் தெரிந்தாலும், இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை ரகசியமாகவே இருந்தது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் திருமணம் செய்துகொள்ளவில்லை; ஆனால் கிஸ்லேன் மேக்ஸ்வெல் உட்பட பல பெண்களை 'டேட்' செய்துள்ளார்.
இவர்கள் இருவருக்குமான காதல் உறவு சில ஆண்டுகள் மட்டுமே நீடித்திருந்தாலும், அந்த உறவு முடிந்த பிறகும் நீண்ட காலமாக மேக்ஸ்வெல் எப்ஸ்டீனுடன் இணைந்து செயல்பட்டு வந்ததாக அவர்களுடைய நண்பர்கள் கூறுகின்றனர்.
2. எப்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகள்
இவ்வளவு புகழ்பெற்ற ஒரு நபர், சட்டச் சிக்கலில் சிக்கியது எப்படி?
2005-இல் புளோரிடாவில் 14 வயதுச் சிறுமியிடம் எப்ஸ்டீன் தவறாக நடந்துகொண்டதாக அந்தச் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதற்குப் பிறகு காவல்துறை அவருடைய வீட்டைச் சோதனை செய்தபோது, வீடு முழுவதும் சிறுமிகளின் புகைப்படங்கள் கிடைத்தன. ஆனால் அப்போது ஃபெடரல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துவிட்டார். பின்னர் 2008-இல், இவருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது கூட, ஒரு நாளைக்கு 12 மணி நேரம், வாரத்தில் 6 நாட்கள் அவர் அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்யும் வகையில் வொர்க் ரிலீஸ் (Work Release) என்ற சலுகை வழங்கப்பட்டது. பின்னர் 13 மாதங்களில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலையானார்.
எப்ஸ்டீனின் மேன்ஹாட்டன் மாளிகையில் எஃப்பிஐ (FBI) சோதனை நடத்தியது. அதன்பிறகு அவருடைய முன்னாள் மேலாளர் ஜுவான் அலெசியிடம் விசாரித்தபோது, அவர் பல அதிர்ச்சியூட்டும் விஷயங்களை வெளிப்படுத்தினார். 'மசாஜ்' செய்வதற்காகச் சிறுமிகளை அழைத்து வருமாறு எப்ஸ்டீனும், கிஸ்லேன் மேக்ஸ்வெல்லும் தன்னிடம் கேட்டதாக அலெசி வாக்குமூலம் அளித்துள்ளார்.
எப்ஸ்டீன் வீட்டில் வேலை செய்பவர்களுக்காகவே 69 பக்க கையேடு ஒன்று இருந்துள்ளது. அதில், "யாரும் எப்ஸ்டீனின் கண்களைப் பார்த்துப் பேசக்கூடாது; எதைப் பார்த்தாலும் காது கேட்காதது போலவும், வாய் பேசாதது போலவும் இருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
2008-இல் நியூயார்க் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் எப்ஸ்டீனின் பெயர் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில், பல பெண்கள் முன்வந்து, தாங்கள் சிறுமிகளாக இருந்தபோது எப்ஸ்டீனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகப் புகார் அளித்தனர்.
2019 ஜூலையில் பாலியல் கடத்தல் வழக்கில் மீண்டும் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். சிறுமிகளை வைத்து ஒரு பெரிய வலைப்பின்னலையே நடத்தி, அவர்களைச் சுரண்டி வந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
எப்ஸ்டீன் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வந்தார். நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து, நியூயார்க் சிறையில் அடைத்தது.
சிறையில் இருந்தபோது கழுத்தில் காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தக் காயங்கள் குறித்து சிறை நிர்வாகமோ அல்லது அவரது வழக்கறிஞர்களோ அதிகாரப்பூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.
2019 ஆகஸ்ட் மாதத்தில் அவர் சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணம் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டது.
2020 ஜூலையில், சிறுமிகளை வைத்து எப்ஸ்டீன் செய்த பாலியல் வன்கொடுமைகளுக்கு உதவியதாகச் சந்தேகத்தின் பேரில், இவருடைய முன்னாள் காதலியான மேக்ஸ்வெல் கைது செய்யப்பட்டார்.
3. எப்ஸ்டீன் ஆவணங்கள் என்றால் என்ன?
எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு விசாரணையின் போது பல ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம் நடத்தப்பட்ட உரையாடல் பதிவுகள், பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், அவருடைய மின்னஞ்சல் உரையாடல்கள் எனப் பல விஷயங்கள் கிடைத்தன. இந்த விசாரணையில் சேகரிக்கப்பட்டவையே 'எப்ஸ்டீன் ஆவணங்கள்' ஆகும்.
நீங்கள் நினைப்பது போல இது வெறும் ஒரு ஆவணம் அல்லது கோப்பு மட்டும் அல்ல. புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல் உரையாடல்கள், விமானப் பயணப் பதிவுகள் எனப் பல ஆதாரங்களை உள்ளடக்கியது.
எப்ஸ்டீன் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்ட பிறகு, அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பலரும் சந்தேகங்களை எழுப்பினர். பல அரசியல் கட்சிகள் இந்த ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 'எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மைச் சட்டம்' நிறைவேற்றப்பட்டது.
கடந்த டிசம்பர் 19-ஆம் தேதிக்குள் அனைத்து ஆவணங்களும் வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி கடந்த ஆண்டின் இறுதியிலேயே முதற்கட்டமாக ஜனநாயகக் கட்சியின் 'மன்ற மேற்பார்வைக் குழு' (House Oversight Committee) சுமார் 70 புகைப்படங்களை வெளியிட்டது. பிறகு மின்னஞ்சல்கள், வீடியோக்கள், ஆவணங்கள் எனப் பல ஆதாரங்கள் சிறுகச் சிறுக வெளியாகின.
2024 தேர்தல் சமயத்தில், டிரம்பிடம் இதுபற்றிக் கேட்டபோது, "நீங்கள் கேட்டால் நான் அதை வெளியிடுவேன்" என்று கூறியிருந்தார். இறுதியாகக் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி அமெரிக்க நீதித்துறை மேலும் பல ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
4. இதில் யார் யாரின் பெயர்கள் உள்ளன?
பொதுவெளியில் உள்ள ஆவணங்களில், எப்ஸ்டீனுடன் தொடர்புடைய பல உயர்மட்ட நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், ஸ்டீவ் டிச், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், மைக்கேல் ஜாக்சன் ஆகிய பெயர்களும் அடங்கும். பில் கிளிண்டன் நிர்வாகத்தில் கருவூலச் செயலாளராக இருந்த லாரி சம்மர்ஸ், டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பேன்னன் போன்ற பல பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் சிலருடைய பெயர்கள் பல இடங்களிலும், சிலருடைய பெயர்கள் ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறிப்பாக டிரம்பின் பெயர் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளது. எப்ஸ்டீனின் தனியார் விமானத்தில் டிரம்ப் பலமுறை பயணம் செய்ததற்கான ஆதாரங்களும் அதில் உள்ளன. டிரம்ப் மற்றும் மார்லா மேப்பிள்ஸ் திருமணத்தில் எப்ஸ்டீன் கலந்துகொண்டதாக சிஎன்என் வெளியிட்ட சில புகைப்படங்கள் காட்டுகின்றன.
பில் கிளிண்டன் நீச்சல் குளம் மற்றும் குளியலறை தொட்டியில் இருப்பது போன்ற புகைப்படங்கள், இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் முகம் மறைக்கப்பட்ட ஐந்து பேரின் மீது படுத்திருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் பல மின்னஞ்சல் உரையாடல்கள் வெளியாகின.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வர்ஜீனியா கிஃப்ரேவை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்தச் சமயத்தில், வர்ஜீனியாவின் குற்றச்சாட்டை மறைக்க அந்தப் பெண்ணுக்கு வின்ட்சர் பணம் கொடுத்ததாக சிஎன்பிசி செய்தியில் வெளியானது.
இதற்கிடையில், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் ஆவணங்களில் இந்திய பிரதமர் மோதி பெயரும் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளது.
அதில், "2017-இல் மோதி தன்னிடம் ஆலோசனை பெற்றுதான் இஸ்ரேலுக்குச் சென்றதாகவும், அங்கு அமெரிக்க அதிபரின் நலனுக்காக ஆடிப் பாடியதாகவும் எப்ஸ்டீன் கூறியுள்ளதாக" எப்ஸ்டீன் கோப்புகளைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்திருந்தது.
ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஜூலை 2017-இல் பிரதமரின் அதிகாரப்பூர்வ இஸ்ரேல் பயணத்தைத் தவிர, மின்னஞ்சலில் மீதமுள்ள தகவல்கள் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளியின் வெற்றுப் பிதற்றல்களே தவிர வேறொன்றுமில்லை என்று கூறியுள்ளது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எப்ஸ்டீன் ஆவணங்களில் பெயரோ அல்லது புகைப்படமோ இடம்பெற்றிருப்பதாலேயே சம்பந்தப்பட்ட நபர் குற்றம் செய்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
5. பிரபலங்கள் சொல்வது என்ன?
எப்ஸ்டீன் ஆவணங்களில் தங்களுடைய பெயர்கள் இடம்பெற்றிருப்பது குறித்துப் பிரபலங்கள் என்ன கூறுகிறார்கள்?
டிரம்ப் ஒரு காலத்தில் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தாலும், எப்ஸ்டீன் கைதாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த நட்பு முறிந்துவிட்டதாக டிரம்ப் கூறியுள்ளார். தனது பெண் ஊழியர்களிடம் எப்ஸ்டீன் தவறாக நடந்துகொண்டதால், அவரைத் தனது 'மார்-எ-லாகோ' கிளப்பில் இருந்து டிரம்ப் வெளியேற்றிவிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
தனது பெயர் இடம்பெற்றிருப்பது குறித்து எலான் மஸ்க் விளக்கமளித்திருந்தார். எப்ஸ்டீன் தன்னைத் தனது தீவிற்கு அழைத்ததாகவும், ஆனால் தான் அதனை நிராகரித்துவிட்டதாகவும் மஸ்க் கூறியிருந்தார்.
பில் கிளிண்டனும், பிரிட்டிஷ் அரச குடும்பமும் எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்துத் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுத்துள்ளனர். மைக்கேல் ஜாக்சன் 2009-இலேயே உயிரிழந்துவிட்டார். ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்துவிட்டார்.
"எப்ஸ்டீனுடன் தொடர்பைத் தொடர்ந்தது எனது தவறான முடிவு. அதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்," என்று லாரி சம்மர்ஸ் அறிக்கை வெளியிட்டார்.
"எப்ஸ்டீனுடன் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் நான் மிகவும் வருந்துகிறேன். நான் அப்படிச் செய்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்று பில் கேட்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்தில் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா ஒரு பாட்காஸ்டில் பேசும்போது, "ஒவ்வொரு முறையும் இந்த விவரங்கள் வரும்போதெல்லாம் அது தனிப்பட்ட முறையில் கஷ்டமாக இருக்கிறது. ஏனெனில் அது எனது திருமண வாழ்க்கையில் மிகவும் வேதனையான சில காலங்களை நினைவுபடுத்துகிறது," என்று தெரிவித்துள்ளார்.
6. விடைதெரியா கேள்விகள்
எப்ஸ்டீன் ஆவணங்களில் இன்னும் புகைப்படங்கள் முழுமையாக வெளியாகவில்லை. அதுமட்டுமன்றி, இதற்கு முன் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் தனியுரிமை போன்ற காரணங்களால் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து மறைக்கப்பட்டுப் பின்னர் நீக்கப்பட்டன.
அரசியல் வட்டாரங்கள் மட்டுமன்றி சமூக ஊடகங்களிலும் இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. பொதுமக்கள் மத்தியிலும் எப்ஸ்டீனைச் சுற்றிப் பல கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன:
- குறிப்பாக, எப்ஸ்டீனுக்கு ஏன் இவ்வளவு மென்மையான தண்டனை வழங்கப்பட்டது?
- எப்ஸ்டீனும், முன்னாள் காதலியான மேக்ஸ்வெல்லும் மட்டுமே தனியாகச் செயல்பட்டது உண்மைதானா?
- சிறையில் இருந்தபோது எப்ஸ்டீன் எப்படி உயிரிழந்தார்?
இதுபோன்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமலேயே உள்ளன.
முக்கிய குறிப்பு
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



