You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபிரான்ஸில் போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்ட நஹெல் யார்? வன்முறை தொடர்வது ஏன்?
- எழுதியவர், ஜார்ஜ் ரைட்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஃபிரான்ஸில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி நஹெல் என்ற 17 வயது சிறுவன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவனின் சொந்த ஊரான நான்டெர் உட்பட ஃபிரான்ஸ் முழுவதும் வன்முறை பரவியுள்ளது.
சிறுவன் காரை நிறுத்தாமல் சென்றதுடன், தன்னிடம் ஆவணங்களைக் கேட்ட போலீஸ் மீது மோதும் நோக்கில் காரை செலுத்தியதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரி, சிறுவனின் கார் கண்ணாடி அருகே சென்று துப்பாக்கி முனையில் அவரை மிரட்டுவதும், அதன் பின்னர் அதே தொலைவில் இருந்து சிறுவனைச் சுடும் காட்சிகளும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மையை ஏ.எஃப்.பி. செய்தி முகமை உறுதி செய்துள்ளது.
தனது ஒரே மகனாக நஹெலை இழந்து தவிக்கும் அவரின் தாய் இது தொடர்பாக சமூக ஊடகத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “நஹெல் ஒரு குழந்தையைப் போன்றவன். அவனுக்கு என்னுடைய அரவணைப்பு தேவைப்பட்டது. சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு கிளம்பியபோதும், ‘ஐ லவ்யூ அம்மா’ என்று அன்பான வார்த்தைகளைக் கூறி, என்னை முத்தமிட்டுவிட்டு தான் சென்றான்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் அவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக எனக்குத் தகவல் வந்தது. எனது வாழ்க்கையில் எல்லாமுமாக என் மகன் இருந்தான். இப்போது அவனை இழந்துவிட்டு நான் என்ன செய்வேன்?” என்று அந்த வீடியோவில் கண்ணீர் மல்கப் பேசியிருந்தார்.
யார் இந்த நஹெல்?
டெலிவரி வேலை செய்துவந்த நஹெலிக்கு ரக்பி விளையாட்டில் ஆர்வம் அதிகம். ரக்பி லீக்கிலும் பங்கேற்று விளையாடி வந்துள்ளார். தனது வீட்டின் அருகேயுள்ள சுரேனே என்ற பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எலக்ட்ரீஷியனானப் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
அல்ஜீரியரான நஹெல் அவர் வசித்த நான்டெர் பகுதியில் உள்ள மக்களால் விரும்பப்படும் நபராக இருந்துள்ளார். தனது தந்தை குறித்து நஹெல் எதுவும் அறிந்திருக்கவில்லை என்று சிறுவனுக்கு பழக்கமானவர்கள் கூறுகின்றனர்.
நஹெலுக்கு படிப்பில் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. அடிக்கடி விடுப்பு எடுத்துள்ளார். உள்ளூர் போலீஸருக்கும் நஹெல் அறிமுகமானவராக இருக்கிறார். எனினும், அவருக்கு எந்தவித குற்றவியல் பின்னணியும் இல்லை என்று குடும்ப வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
சம்பவம் நடந்த நாளன்று, காலை 9 மணியளவில் மெர்சிடீஸ் காரை அவர் ஓட்டிவந்துள்ளார். 17 வயதான நஹெலிடம் ஓட்டுநர் உரிமம் கூட கிடையாது. போலீஸார் அவரை நிறுத்தி சோதனை செய்தனர். இதை தொடர்ந்து நெஞ்சில் குண்டு பாய்ந்து நஹெல் உயிரிழந்துள்ளார்.
"நான் இப்போது என்ன செய்யப் போகிறேன்?" என்று சிறுவனுடைய அம்மா வேதனையுடன் கேட்கிறார். “நான் அவனுக்காக எல்லாவற்றையும் அர்ப்பணித்தேன். எனக்கொன்றும் 10 குழந்தைகள் இல்லை. எனக்கு இருந்ததோ ஒரேயொரு மகன் தான். என் வாழ்க்கையே அவன் தான்” என்று நஹெலின் தாய் தெரிவித்தார்.
நஹெல் மிகவும் நல்ல பையன் என்று அவரது பாட்டியும் தனது பேரன் குறித்து கூறுகிறர்.
“காரை நிறுத்தவில்லை என்பதற்காக கொலை செய்துவிடலாம் என்ற அனுமதியை உங்களுக்கு யாரும் வழங்கவில்லை” என்று சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ஆலிவர் ஃபரே கூறுகிறார். குடியரசின் அனைத்து குழந்தைகளுக்கும் நீதிக்கான உரிமை உண்டு." என்றும் அவர் தெரிவித்தார்.
'யாரையும் கை நீட்டிக்கூட பேசியது கிடையாது'
ரக்பி விளையாட்டில் ஆர்வம் கொண்டவரான நஹெல் கடந்த மூன்று ஆண்டுகளாக பைரேட்ஸ் ஆஃப் நான்டெர் ரக்பி கிளப்பில் விளையாடி வந்தார். மேலும், கற்றலுக்காக சிரமப்படும் பதின்மவயதினருக்காக ஓவல்ஸ் கெயென் என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்டுவரும் ஒருங்கிணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் அவர் இருந்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களைப் பயிற்சிகளில் சேர்ப்பது இந்த திட்டத்தின் நோக்கம். அதன்படி, நஹெல் மின்சாதனங்களை பழுதுப் பார்ப்பது தொடர்பாக கற்றுக்கொண்டிருந்தார்.
ஓவல்ஸ் கெயென் தலைவர் ஜெஃப் வூச், நஹெல் பற்றி லீ பாரிஸ் செய்தித்தாளுக்காக பேசும்போது, "போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும், குற்றங்களில் ஈடுபடும் பிற சிறுவர்கள் போல் அவர் கிடையாது. சமூக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஆசை கொண்டவர் அவர்.” என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் நஹெல் குறித்து தவறாக பரப்பப்படும் தகவல்களுக்கு அவர் கண்டனம் தெரிவிக்கிறார்.
பாப்லோ பிக்காசோ எஸ்டேட்டுக்கு குடிபுகுவதற்கு முன்பாக நான்டெர்வின் புறநகர் பகுதியான வீ போண்ட் பகுதியில் நஹெல் தனது தாயாருடன் வசித்துவந்தபோதே சிறுவனை ஜெஃப்க்கு தெரியும்.
நஹெல் குறித்து பேசிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரான மாரூனே, நஹேல் தனக்கு ஒரு தம்பி போன்றவர் என்றார்; மேலும் கனிவாகவும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்துடனும் நஹெல் வளர்ந்துவந்தார் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
“நஹெல் யாரையும் கைநீட்டி பேசியது இல்லை. அவன் வன்முறையில் ஈடுபட்டதும் கிடையாது” என்கிறார் மாரூனே
நஹெல் தாயார் கூறுவது என்ன?
தனது மகனின் முகத்தில் அரபு சாயலை போலீஸார் பார்த்திருக்கிறார், அதனால்தான் அவரை சுட்டுக்கொன்றுள்ளார் என்று நஹெலின் தாய் கூறுகிறார். 'ஃபிரான்ஸ் 5' தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “என் மகனை சுட்டுக்கொன்ற அந்த ஒரு அதிகாரியை மட்டுமே நான் குற்றஞ்சாட்டுகிறேன். மொத்த போலீஸையும் அல்ல. காவல்துறையிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். அவர்கள் முழு மனதுடன் என்னுடன் இருக்கிறார்கள்,” என்று தெரிவித்தார்.
"காவல்துறையின் வன்முறை ஒவ்வொரு நாளும் நடக்கிறது, குறிப்பாக நீங்கள் அரேபியராகவோ அல்லது கறுப்பினத்தவராகவோ இருந்தால்," என்று கூறுகிறார் நஹெலிக்காக நீதி கேட்கும் இளைஞர் ஒருவர்.
எனினும் நஹெல் குடும்பத்தின் வழக்கறிஞர் யாசின் பௌஸ்ரோ, இது இனவாதம் பற்றியது அல்ல, நீதிக்கானது என்று கூறினார்.
" காவல்துறை அதிகாரிகளைப் பாதுகாக்கிற வகையிலும் தண்டனையிலிருந்து விலக்கும் வகையிலும் நமது சட்டம் உள்ளது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
ஏற்கனவே போலீஸ் சோதனைகளுக்கு உள்ளான நஹெல்
2021 ஆம் ஆண்டு முதல் நஹெல் ஐந்து முறை போலீஸ் சோதனைகளுக்கு உட்பட்டுள்ளார். இந்த சோதனைகள் பிரஞ்ச் மொழியில் refus d'obtempérer என்று கூறப்படுகிறது. அதாவது வாகனத்தை நிறுத்துமாறு கூறும் உத்தரவுக்கு மறுப்பது ஆகும்.
நஹெலை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, அவர் இரண்டு பயணிகளுடன், போலந்து நம்பர் பிளேட் கொண்ட மெர்சிடிஸ் காரை ஓட்டிச் சென்றார். அவரிடம் ஓட்டுநர் உரிமமும் இல்லை.
உத்தரவுக்கு இணங்க மறுத்ததற்காக அவர் கடந்தவார இறுதியில் கூட தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாகவும், செப்டம்பரில் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பலவிதமான விசாரணைகளுக்காக அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் `தாஜ்` என்ற போலீஸ் கோப்பில் அவரது பெயர் இருந்தது.
கடந்த செப்டம்பரில் நஹெல் மீது நீதிபதி ஒருவர் ஒழுங்கு நடவடிக்கையும் விதித்துள்ளார். அவர் மீதான தொடர் குற்றச்சாட்டே ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் இல்லாமல் காரை ஓட்டுவது, போலியான வாகன எண்ணை பயன்படுத்துவது போன்றவைதான்.
ஆனால் நஹெல் ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை என்றும் அவர் மீது குற்றவியல்பதிவு இல்லை என்றும் அவரது குடும்ப வழக்கறிஞர் ஜெனிபர் காம்ப்லா கூறினார். போலீசார் ஒரு நபர் குறித்து அறிந்திருப்பதாலேயே அவருக்கு குற்றவியல் வரலாறு இருப்பதாக அர்த்தம் கிடையாது என்று பிரஞ்ச் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
இறுதிச் சடங்கில் பல்லாயிரம் பேர் பங்கேற்பு
போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது சிறுவன் நஹெலுக்கு பாரிசின் புறநகர்ப் பகுதியான நான்டெர்ரேவில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. சிறுவனின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திரளானோர் அந்த நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதாக லீ மான்டே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுவனின் இறுதிச்சடங்கு முடிந்த பின்னரும் அங்குள்ள மசூதிக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், 'நஹெல் மறைவுக்கு நீதி வேண்டும்' என்று முழக்கங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
நஹெல் கொலை நினைவூட்டும் 2005 சம்பவம்
தற்போது சிறுவன் கொல்லப்பட்டது போன்றதொரு சம்பவம், 2005இல் ஃபிரான்சில் நிகழ்ந்துள்ளது. அப்போது போலீசார் துரத்திப் பிடிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள், ஒரு துணை மின் நிலையத்திற்குள் சென்று ஒளிந்தனர்.
அப்போது ஃபிரான்சின் அதிபராக இருந்த நிக்கோலஸ் சார்க்கோசி, அவ்விரு இளைஞர்களையும் குற்றவாளிகள் என்று அறிவித்ததோடு, அவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருந்தார். அத்துடன் அவர்களைக் 'கெட்டவர்கள்' என்றும் அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் கூறியபடியே, போலீசார் மின்சாரத்தை செலுத்தி கொன்றனர். இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஃபிரான்ஸ் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் பங்கேற்றவர்கள் அரசு கட்டடங்கள் உள்ளிட்ட பொது சொத்துகளைத் தீயிட்டு எரித்தனர். சில வாரங்கள் தொடர்ந்த அந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள், தங்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.
ஃபிரான்ஸில் தற்போது நிலைமை எப்படி உள்ளது?
நஹெல் மரணத்தைத் தொடர்ந்து ஃபிரான்ஸின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்துள்ளது. வியாழன்று 900 பேர், வெள்ளியன்று 1,300, சனிக்கிழை 486 பேர் என இதுவரை 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமையன்று 45,000 போலீஸார் வரை நாடு முழுவதும் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஃபிரான்சில் வெடித்த வன்முறை அண்டை நாடான பெல்ஜியத்திற்கும் பரவியுள்ளது. அங்கும் வன்முறையை தூண்டுவதாக கொத்துக்கொத்தாக பலரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். தலைநகர் பிரஸ்ஸல்சில் மட்டும் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்