எகிப்தில் 4,000 ஆண்டுகள் முன்பே புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையா? விஞ்ஞானிகள் புதிய தகவல்
விஞ்ஞானிகள் குழுவால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மண்டை ஓடுகள், மருத்துவத்தின் வரலாற்றைப் பற்றிய நம்முடைய புரிதலைப் புரட்டிப் போடுகிறது.
பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருக்கும் டக்வொர்த் சேகரிப்பில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்தியர்களின் இரண்டு மண்டை ஓடுகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த மண்டை ஓடுகளில் புற்றுநோய்க் கட்டிகளால் ஏற்படும் புண்கள் இருந்ததற்கான அடையாளங்கள் இருந்தன.
சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எகிப்தியர்களின் மண்டை ஓடுகள் இவை என்று கூறும் விஞ்ஞானிகள், அதில் ஒரு மண்டை ஓட்டில் புற்றுநோய்க் கட்டியை அகற்றுவதற்கான சுவடுகள் இருப்பதாகக் கூறுகின்றனர். அதாவது அந்த மண்டை ஓட்டுக்குச் சொந்தமான நபருக்கு புற்றுநோய்க் கட்டி இருந்திருக்கலாம்.
அதை அகற்றும் நோக்கத்துடன் அறுவை சிகிச்சை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் அல்லது அந்த நபருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது புற்றுநோய்க் கட்டியின் நிலையைப் புரிந்துகொள்வதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், FRONTIER/TATIANA TONDINI, ALBERT ISIDRO, EDGAR CAMARÓS
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



