தைவானில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை - தமிழர்களின் நிலை என்ன? காணொளி

காணொளிக் குறிப்பு, தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத பெரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை – காணொளி
தைவானில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை - தமிழர்களின் நிலை என்ன? காணொளி

தைவானின் கிழக்குக் கடற்கரையில் இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 3-ஆம் தேதி) 7.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தைவான் தீவு மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு மையத்தின் படி, இந்த நிலநடுக்கத்தின் தோற்றப்புள்ளி, தைவானின் ஹுவாலியன் (Hualien) நகருக்கு தெற்கே 18.கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த நிலநடுக்கம், இந்திய நேரப்படி அதிகாலை 5:30 மணிக்கு (தைவான் நேரப்படி காலை 07:58 மணி) 15.5 கி.மீ. ஆழத்தில் தாக்கியது. இது ஒன்பது பின் அதிர்வுகளையும் ஏற்படுத்தியது.

தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவே என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தைவானிய சிப் தயாரிப்பு நிறுவனமான டி.எஸ்.எம்.சி (TSMC), தனது ஊழியர்களின் பாதுகாப்பிற்காக சின்ச்சு (Hsinchu) மற்றும் தெற்கு தைவானில் உள்ள சில தொழிற்சாலைகளை காலி செய்துள்ளதாகக் கூறியுள்ளது. அதன் பாதுகாப்பு அமைப்புகள் எப்போதும்போல இயங்குகின்றன என்றும் கூறியுள்ளது.

ஆப்பிள் மற்றும் என்விடியா உள்ளிட்ட பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான செமிகண்டக்டர்களின் முக்கிய தயாரிப்பாளராக டி.எஸ்.எம்.சி நிறுவனம் உள்ளது.

தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம், Getty Images

தைவானின் தலைநகர் தைபெயில் இருந்து பகிரப்பட்ட வீடியோக்கள், கட்டிடங்கள் பலமாகக் குலுங்குவதையும், அலமாரிகளில் இருந்து பொருட்களை தெறித்து விழுவதையும், மேஜை நாற்காலிகள் கவிழ்வதையும் காட்டுகின்றன.

மலைகள் நிறைந்த தைவானின் உட்புறப் பகுதிகளில், நிலநடுக்கம் மிகப்பெரிய நிலச்சரிவை எற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன. ஆனால் அங்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு என்ன என்று இன்னும் தெரியவில்லை.

தைவானின் உள்ளூர் ஊடகங்கள், இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டிடங்களின் காட்சிகளைக் ஒளிபரப்பின. மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்படும் காட்சிகளும் காட்டப்பட்டன. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் வாகனங்கள் நொறுங்கிக் கிடப்பதையும், கடைகளில் பொருட்களை கலைந்து கிடப்பதையும் உள்ளூர் தொலைக்காட்சி சேனலான டிவிபிஎஸ் (TVBS) ஒளிபரப்பிய காட்சிகள் காட்டுகின்றன.

தைவான் முழுவதும் மின்வெட்டு நிலவுவதாகவும், இணையச் சேவைகள் தடைபட்டிருப்பதாகவும் இணைய கண்காணிப்புக் குழுவான NetBlocks தெரிவித்துள்ளது.

தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம், RAMESH

தைவான் தமிழர்களின் நிலை என்ன?

பிபிசி தமிழிடம் பேசிய தைவான் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ், தாம் ஸின்ச்சு என்ற பகுதியில் வசிப்பதாகவும், இன்று (புதன், ஏப்ரல் 3) காலை உள்ளூர் நேரப்படி 07:58 மணியளவில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகத் தெரிவித்தார். “நிலநடுக்கம் மிகக் கடுமையானதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு அது உணரப்பட்டது,” என்றார்.

தாம் இருக்கும் பகுதி நிலநடுக்கத்தின் மையப்புள்ளியிலிருந்து 200கி.மீ. தொலைவில் இருந்தாலும், அவர்கள் பகுதியிலும் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவித்தார்.

“நாங்கள் வசிக்கும் குடியிருப்புக் கடிடத்தில் அனைத்து வீடுகளிலும் விரிசல் எற்பட்டுள்ளது, ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதுமில்லை,” என்றார்.

தாய்பெயிலிருந்து ஹுவாலியன் செல்லும் சாலைகள் நிலச்சரிவுகளால் துண்டிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

மேலும் பேசிய அவர், தாம் தொடர்புகொண்டவரை தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார். பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் ஹுவாலியனில் குறைந்த அளவே தமிழர்கள் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்றும் அவர் கூறினார்.

தாய்பெய், தாய்ச்சு, ஸின்ச்சு ஆகிய நகரங்களில் தமிழர்கள் அதிகப்படியாக வசிப்பதாகவும் அவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அதேபோல், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து தைவானுக்குச் சென்று வசிப்பவர்களுக்கும் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் கூறினார்.

தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம், TVBS

அண்டை நாடுகளில் சுனாமி எச்சரிக்கை

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அண்டை நாடான ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 3மீ உயரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் முன்னர் எச்சரித்திருந்தனர்.

ஆனால் அதன்பின்னர், ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் இந்த எச்சரிக்கையின் தீவிரத்தைக் குறைத்தது. ஆனால் மக்கள் ‘அதே தீவிரத்துடன் பின் அதிர்வுகள் குறித்து விழிப்புடன்’ இருக்குமாறு கேட்டுக் கொண்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பிலிப்பைன்ஸின் நில அதிர்வு ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டது.

கூடுதல் விவரங்களை காணொளியில் பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)