You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ் சினிமா 'திலீபன்': திரைக்கு வர தயாராகி வரும் ஒரு போராளியின் கதை
- எழுதியவர், கல்யாண் குமார்
- பதவி, பிபிசி தமிழுக்காக
'இயக்குநர்' ஆக வேண்டும் என்கிற கனவில் சென்னைக்கு வந்திறங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர்தான், பெங்களூரு வாழ் தமிழரான ஆனந்த் மூர்த்தி. பல போராட்டங்களுக்குப் பிறகு இயக்குநர்கள் கதிர் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
திரைப்பட வரலாற்றில் தன் ஒவ்வொரு படமும் தடம் பதிக்க வேண்டும் என்பதை தமது கொள்கையாகக் கொண்டிருக்கிறார் ஆனந்த் மூர்த்தி.
அதனால் சொந்த மன்ணிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியலையும் அவர்களின் உரிமைக்காக போராடிய வீரர்களின் தியாகத்தையும் திரையில் பதிவு செய்ய வேண்டும் என விரும்பினார்.
அந்த வகையில் இவர் இயக்கி இருக்கும் முதல் படம் தான் 'திலீபன்'.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில், யாழ் மாவட்டத்தின் அரசியல் துறை பொறுப்பாளராக பதவி வகித்த திலீபன் என்ற இளைஞர், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி, தங்கள் இயக்கத்தின் சார்பில் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் சேர்த்து, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகிம்சை வழியில், நல்லூர் என்ற இடத்தில் உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினார்.
ஆரம்பத்தில் பொதுமக்களில் ஐநூறு, ஆயிரம் என்று அங்கே கூடிய கூட்டம், செப்டம்பர் 26, உண்ணாவிரதத்தின் 12ஆம் நாள் - திலீபன் உயிரை நீத்த நாளன்று லட்சக்கணக்கில் அதிகரித்தது.
இயக்கத்திற்காக தன் உயிரையே கொடுத்த திலீபனின் தியாகம், உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடையே பெரும் தாக்கத்தையும் அவர் மீது மரியாதையையும் ஏற்படுத்தியது.
திலீபனின் வரலாறைத் தேடி...
வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் அந்த இளைஞர் திலீபனின் வாழ்க்கையை திரையில் பதிவு செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட ஆனந்த் மூர்த்தி, திலீபனைப் பற்றி ஆய்வு செய்ய, இலங்கைக்கு ஐந்து முறை போய் வந்திருக்கிறார். அவர் குறித்த வீடியோக்கள், புத்தகங்களை தொடர்ந்து தேடி அலைந்திருக்கிறார்.
திலீபனோடு பழகிய மிகச் சிலரை சந்தித்துப் பேசிய ஆனந்த் மூர்த்தி, மிகவும் சிரமப்பட்டு தகவல்களை சேகரித்ததாகக் கூறுகிறார்.
ஆரம்பத்தில் அதை நாற்பது நிமிட படமாக எடுக்கவே திட்டமிட்டிருந்தார். அதற்கான திரைக்கதையைக் கேட்ட இயக்குநர் பாலா, அதைத் தானே தயாரிப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அதில் திலீபனாக நடிக்க ஏற்ற ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது ஏற்கெனவே ’புன்னகை பூ’ என்ற படத்தில் நடித்திருந்த நடிகர் நந்தா, அதற்குப் பொருந்தி வந்திருக்கிறார்.
திலீபனின் முக ஒற்றுமைக்காக – அவரின் முன் வரிசை தெற்றுப் பல் அமைப்பிற்காக நந்தா, பல் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஒரிஜினல் பல்வரிசைக்கு மேலே அந்த செயற்கை தெற்றுப் பல்செட்டை அணிந்து நடித்திருக்கிறார்.
நாள் முழுவதும் அந்த பல்செட்டை பொருத்தியதால் உள்ளிருக்கும் ஒரிஜினல் பற்களிடையே ரத்தம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் வலியைப் பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார் நந்தா.
திலீபனின் வீடியோக்களை போட்டுப் பார்த்து தன்னை அந்தப் பாத்திரத்தில் பொருத்திக் கொண்டதோடு, உடல் எடையையும் கணிசமாகக் குறைந்திருக்கிறார்.
திரைப்படமாக உருவெடுத்தது எப்படி?
பல்வேறு காரணங்களால் திலீபன் குறிந்த அந்த நாற்பது நிமிட படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கவே, அதை ஒரு முழு நீள திரைப்படமாகவே எடுக்கலாம் என்று முடிவெடுத்த நடிகர் நந்தா, அதன் தயாரிப்பு பொறுப்புகளை, தானே எடுத்துக் கொள்வதாகவும் சொல்லி இருக்கிறார்.
”படத்தின் நம்பகத்தன்மைக்கு நான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் இந்தப் படத்தில் நூறு சதவிகிதம் பிரதிபலிக்கும்” என்கிறார் நந்தா.
இதில் கிட்டுவாக நடித்திருக்கும் வினோத் சாகர், தமிழில் வெற்றி பெற்ற ராட்சசன் படத்தில் மாணவிகளிடம் பாலியல் வன்முறை செய்யும் ஆசிரியராக நடித்து புகழ் பெற்றவர்.
தற்போது மலையாளப்பட உலகில் சுமார் பத்து படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
“ திலீபன் படத்தில் கிட்டு பாத்திரத்திற்கான நடிகர் தேர்வுக்காக நான் போனபோது என்னை முதலில் 'ரிஜெக்ட்' செய்துவிட்டார் அதன் இயக்குநர். காரணம் என் உடல்வாகு மற்றும் எனக்குள் இருந்த நகைச்சுவை உணர்வு! பிறகு அவரது உதவியாளர்கள் என்னைப்பற்றி எடுத்துச்சொல்லியுள்ளனர். கிட்டு குறித்த வீடியோக்களை என்னிடம் காண்பித்தனர்.
பல நாட்களுக்கு, அதை பார்த்துப்பார்த்து, நான் அந்த கேரக்டருக்குள் நுழைந்து பயணம் செய்தேன். அடிப்படையில் நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். என்பதால் மேடை நாடகங்களின் மூலமாக நடிப்பை அனுபவமாகப் பெற்றிருந்தேன்.
அடுத்தமுறை இயக்குநரைப் பார்த்தபோது இலங்கைத் தமிழ் உள்பட பக்காவாக என்னை தயார் செய்து கொண்டு போனேன். அவரால் நம்பவே முடியவில்லை.
“கிட்டுவாகவே மாறி விட்டீர்களே” என்று என்னை கட்டியணைத்து, இந்த வரலாற்று ரீதியான படத்தில் நடிக்க வைத்தார்’ ’’ என்கிறார் வினோத் சாகர்.
இதில் பிரபாகரனாக ஸ்ரீதர் என்கிற நடிகரும், கேப்டன் மில்லர் பாத்திரத்தில் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமாகி, பின்னர் காதல் என்ற படத்தின் மூலம் பிரபலமான பரத் நடித்திருக்கிறார்.
திலீபனின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய, இலங்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும், கேரளாவின் பல கிராமங்களில் படமாக்கப்பட்டிருக்கின்றன.
அசுரன், கொம்பன், விருமன் போன்ற வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ்தான் இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த படைப்பாளி
திலீபன் படத்திற்காக ஆரம்பத்தில் இிருந்தே அதன் தயாரிப்பு வடிவமைப்பு, இலங்கை தமிழை அந்தந்த நடிகர்களுக்கு சொல்லிக் கொடுப்பது உட்பட அனைத்திலும் ஒரு ஆலோசராக உடனிருந்து பயணித்தவர், தங்க வேலாயுதம்.
இவர் விடுதலை புலிகள் இயக்கத்தின் கலைப்பிரிவின் பொறுப்பாளராக அந்த இயக்கத்தின் ஆரம்பம் முதலே செயல்பட்டவர்.
விடுதலைப் புலிகளால் தேவர் அண்ணா என்று அழைக்கப்பட்ட இவர், பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்.
இயக்கத்தின் முன்னணி தலைவர்களோடும் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக தலைவர் பிரபாகரனின் உத்தரவின்படி திலீபனின் அந்த 12 நாள் உண்ணாவிரத போராட்டத்தை உடனிருந்து கவனித்துக் கொண்டவர். திலீபனின் இறுதி யாத்திரையையும் அருகிலிருந்து நேரடியாகப் பார்த்தவர்.
“ 1987 செப்டம்பர் 26 திகதி சனிக்கிழமை காலை 10.48 மணி திலீபன் உடல் நிலையை பரிசோதித்துக் கொண்டிருந்த மருத்துவர் சிவகுமார், அழுதவாறே திலீபனின் மறைவை உறுதிப்படுத்தினார். தியாக தீபம் திலீபன் அந்த கணத்தில் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து விட்டான்.
அந்த பேரமைதியை கிழித்துக் கொண்டு அனைவரும் கதறி அழத் தொடங்கினர். எங்கும் அழுகை ஒலி.
அந்த பன்னிரெண்டு நாட்களும் திலீபன் உண்ணாநோன்பில் இருந்த மேடையை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த திலீபனின் தந்தை், முதல் முறையாக மேடையில் ஏறி, திலீபனின் உடல் மீது விழுந்து கதறி அழத் தொடங்கினார்.
உடனடியாக திலீபனின் மரணச் செய்தி, இந்திய அதிகாரிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த தேசிய தலைவர் பிரபாகரனுக்கு அறிவிக்கப்பட்டது.
அது கிடைத்தவுடன் பேச்சுவார்த்தையை இடையில் நிறுத்திவிட்டு எங்கள் தேசிய தலைவர் திரும்பினார்” என்று அந்த நிகழ்வை அப்படியே, தான் எழுதியிருக்கும் ‘என் நினைவில் தமிழீழம்’ என்ற புத்தகத்தில் பதிவு செய்கிறார், தேவர் அண்ணா.
இதுவரை எடுக்கப்பட்ட திலீபன் படத்தைப் பார்த்த தேவர் அண்ணா, பிபிசி தமிழிடம் பேசினார்.
“இந்த படத்தைப் பொறுத்தவரை திலீபனின் வாழ்க்கை வரலாறை எந்ததவறும் இல்லாமல் திரையில் பதிவு செய்ய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார் இதன் இயக்குநர் ஆனந்த் மூர்த்தி.
மற்றவர்களைப் போல ஏனோதானோவென்று இந்தப் படத்தை எடுத்து முடித்திடாமல், ஒவ்வொரு காட்சிக்கான சின்னச்சின்ன விஷயங்களிலும் என்னிடம் கலந்தாலோசித்து அதை மிகத்தெளிவாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
படம் முழுமையடைந்து உலகம் முழுதும் தியேட்டர்களில் ரிலீசாகும் தேதியை நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்கிறார் தேவர் அண்ணா என்கிற தங்க வேலாயுதம்.
திலீபன் படம் வெளிவருமுன்பே இரண்டாவது படத்தின் கதையையும் ரெடி செய்திருக்கிறார் ஆனந்த் மூர்த்தி.
மலேசிய தமிழர்கள் பற்றிய அந்தக் கதையில், ஹீரோவாக நடிக்க, நடிகர் சசிகுமார் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்