You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"காஸாவின் மரணப்பொறி" - உணவுக்காக உயிரை இழக்கும் சோகம்
இரானில் ஏற்பட்டதைப் போல காஸாவிலும் போர் நிறுத்தம் வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.
காஸாவில் போரின் வேதனைகளை நாங்கள் தனியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மொத்த உலகத்தின் பார்வையும் எங்களிடம் இருந்து திரும்பிவிட்டது எனக் கூறுகிறார் ஒருவர்.
12 நாட்கள் நடந்த மோதலுக்குப் பிறகு, இரான் இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதாக வந்த செய்தி காஸாவில் நிம்மதி அளிக்கவில்லை. மாறாக அதிர்ச்சியையும் கோபத்தையுமே ஏற்படுத்தி இருக்கிறது.
பலர் துரோகம் இழைக்கப்பட்டதாகவும் கைவிடப்பட்டதாகவும் உணர்கின்றனர்.
"கத்தார் இரானில் போரை நிறுத்தி உள்ளது. காஸாவிலும் போரை நிறுத்த உதவ வேண்டும். கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு அதிகாரம் உள்ளது. அவர்கள் தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார பலத்தை பயன்படுத்தி போரையும் நாங்கள் எதிர்கொள்ளும் அழிவையும் நிறுத்த வேண்டும்." என அங்கு வசிக்கும் ஒருவர் தெரிவிக்கிறார்.
உலகளாவிய கவனம் இஸ்ரேல் இரான் மோதல் பக்கம் திரும்பிய நிலையில், காஸாவில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது.
மே மாத இறுதி முதல் காஸாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவில் இயங்கும் உணவு விநியோக மையங்களில் குறைந்தது 549 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
உதவி பெற வந்த இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
"தனது குழந்தைகளுக்கு உணவளிக்க ஒரு பை மாவு மட்டுமே பெற விரும்பினார். இவர் தலையில் சுடப்பட்டார். பின்னர் ஒரு டாங்கி ஷெல் முகத்தில் தாக்கியது. உடனடியாக இறந்துவிட்டார். ஆத்மா சாந்தியடையட்டும். இன்னும் பலர் அங்கு (உதவி மையத்தில்) இறந்துள்ளனர், காயம்பட்டுள்ளனர். அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை." என அவரின் இறப்பை நேரில் கண்ட ஒருவர் கூறுகிறார்.
ஒரு குடும்பம் ஒரே நாளில் மூன்று மகன்களை இழந்தது. அவர்கள் அனைவரும் உணவுக்காக வரிசையில் காத்திருந்தவர்கள்.
"நாங்கள் ஒவ்வொருவராக இறக்கிறோம், யாரும் கவலைப்படுவதில்லை. போதும்... போதும்... எதற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்? ஒவ்வொரு நாளும் இரண்டு, மூன்று, நான்கு நெருங்கியவர்களை இழக்கிறோம். நாங்கள் மனிதர்கள். எங்களை காப்பாற்றுங்கள்." என இன்னொருவர் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் உணவு விநியோக முறையை ஐ.நா. அமைப்புகள் கண்டித்துள்ளன. ஒரு அதிகாரி இதை மரணப் பொறி என்று குறிப்பிட்டார். ஆனால், சர்வதேச சட்டத்தின்படி உதவிப் பொருட்கள் பாதுகாப்பாக விநியோகப்பதை உறுதி செய்து வருவதாக இஸ்ரேல் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு