You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையில் மனைவியை கொல்ல துபாயில் இருந்தபடி கணவன் சதி - என்ன நடந்தது? இன்றைய முக்கிய செய்தி
இன்று, ஜூன் 11, தமிழ்நாட்டில் வெளியான பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் இடம் பெற்ற முக்கியச் செய்திகளின் தொகுப்பை நாம் இங்கே காணலாம்.
சூளைமேட்டில் வசிக்கும் மனைவியை துபாயில் இருந்தவாறு கொலை செய்ய கூலிப்படையை ஏவிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர் என்றும், கூலிப்படையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர் என்றும் இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, சென்னை சூளைமேட்டில் வசிப்பவர் பெனாசிர் பேகம் (33). இவர் கடந்த 2ஆம் தேதி இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இரும்புக் கம்பியால் பெனாசிர் பேகம் தலையில் தாக்கிவிட்டுத் தப்பினர். பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலை முயற்சி தொடர்பாக சூளைமேடு போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவ இடம், அதைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில், பெனாசிர் பேகத்தை கொலை செய்ய முயன்றதாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வினோத் (24), அதே பகுதியை சேர்ந்த மெஹ்ரான் ஆதில் (24) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவரே மனைவியை கொல்ல கூலிப்படையை ஏவியது தெரியவந்தது.
விசாரணையில், "தாக்குதலுக்கு உள்ளான பெனாசிர் பேகத்தின் கணவர் ஜாகீர் உசேன் தற்போது துபாயில் வேலை செய்துவருகிறார். தம்பதியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தான், ஜாகீர் உசேன் கூலிப்படைக்கு ரூ.1 லட்சம் பேரம் பேசி மனைவியைக் கொல்ல கூலிப்படையை ஏவியுள்ளார்" எனத் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கூலிப்படையை ஏவிய ஜாகீர் உசேன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், ஏற்கெனவே பெனாசிர் பேகத்தின் தந்தையும் இதே பாணியில் தாக்கப்பட்டிருந்தார், இதிலும் ஜாகிர் உசேனின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.
திருநெல்வேலியில் கிணற்றை தூர்வாரிய போது ஐம்பொன் சிலை கண்டெடுப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் கிணற்றை தூர்வாரிய போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே அரியகுளம் பஞ்சாயத்து அம்பலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் அருகே ஊர் பொதுக்கிணறு உள்ளது. சுமார் 50 அடி ஆழமுள்ள இந்த கிணற்றை யூனியன் பொதுநிதி மூலம் தூர்வாரும் பணி தொடங்கியது.
இதற்காக கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினர். தொடர்ந்து கிணற்றின் அடியில் உள்ள சகதியை அப்புறப்படுத்தினர்.
அப்போது கிணற்றின் அடியில் சுமார் 1½ அடி உயரம் கொண்ட ஐம்பொன்னாலான கருடாழ்வார் சிலை கண்டெடுக்கப்பட்டது. மிகவும் பழமைவாய்ந்த இந்த சிலையின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஐம்பொன் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து சிலையை தாலுகா அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர்.
இதுதொடர்பாக மூலைகரைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். பழங்கால ஐம்பொன்னாலான கருடாழ்வார் சிலையை ஏதேனும் கோவிலில் இருந்து திருடி வந்த கும்பல் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அதனை கிணற்றில் வீசிச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், தொல்லியல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு