'100 நாள் வேலைக்கு' பதிலாக வந்துள்ள புதிய சட்டத்தால் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டம் பாதிக்கப்படுமா?

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விபி-ஜி ஆர்ஏஎம் ஜி திட்டத்தால் தமிழ்நாட்டில் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டம் பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது. ஊரக வேலை திட்டப் பணியாளர்களை மாநில அரசின் திட்டத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் இதனால் உருவாகியுள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது. இந்த விமர்சனம் எழுவது ஏன்?

கடந்த 20 ஆண்டுகளாக அமலில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் திட்டத்தை (MGNREGA) மாற்றுவதற்கான புதிய மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு 'வளர்ச்சியடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் (கிராமம்) 2025', அதாவது 'விபி-ஜி ஆர்ஏஎம் ஜி' (VB-G RAM G) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு டிசம்பர் 21-ஆம் தேதி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சட்டமானது.

இதற்கு பாஜகவின் கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

புதிய சட்டத்தின்படி வேலை நாட்கள் 100-இல் இருந்து 125 ஆக அதிகரிக்கப்பட்டாலும் மாநிலத்தின் நிதிச்சுமை அதிகரிக்கும் என்றும் முடிவெடுக்கும் அதிகாரம் மையப்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் பாஜகவின் முதன்மை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, மாநிலங்களின் வருவாய் அதிகரித்திருப்பது தான் பங்களிப்பு அதிகமானதற்கு காரணம் எனத் தெரிவித்தார்.

புதிய சட்டத்தை வரவேற்பதாகக் கூறும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமும் இன்றி தொடர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் 100 நாட்கள் வேலையை 150 நாட்களாக உயர்த்துவதாக தெரிவித்திருந்ததைக் குறிப்பிட்ட அவர், "மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை." என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோதிக்கு எழுதிய கடிதத்தில் அதிகப்படியான மையப்படுத்துதல் இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக் காட்டியிருந்தார்.

"இந்த சட்ட முன்வடிவின்படி வேலை உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகளை அறிவிக்கவும், திட்டங்களை தேசிய அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கவும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் விதிகள், கிராம ஊராட்சிகளின் பரவலாக்கப்பட்ட திட்டமிடலைக் குறைத்து, அடிமட்ட ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளன," என அந்த கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுக்கிறது. "திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து கிராம சபையிலே தீர்மானிக்கப்படும். அவற்றின் கண்கானிப்பு மட்டுமே மையப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ளப்படும்," என மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் நிலைத்திருக்கும் பொதுச் சொத்துக்களை உருவாக்கும் நான்கு முன்னுரிமையான களங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அவை

  • நீர் பாதுகாப்பு மற்றும் நீர் சார்ந்த பணிகள்
  • அடிப்படை ஊரக உள்கட்டமைப்பு
  • வாழ்வாதாரம் சார்ந்த உள்கட்டமைப்பு
  • தீவிர வானிலை நிகழ்வுகளை தணிப்பதற்கான பணிகள்

இந்தத் திட்டத்தால் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் பணிகள் தடைபட்டுப் போகும் நிலை உருவாகியுள்ளதாக கூறுகிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஊரக வேலை திட்டத்தின் கீழ் வேளாண் சார்ந்த பணிகள் என்பதைக் கடந்து 'கலைஞர் கனவு இல்லம்' திட்டம், சாலைப் பணிகள் போன்ற வேலைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனால் குறைந்தபட்ச அளவிலான பணி நாட்களை எட்ட முடிந்தது." எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் சுவாமிமலை விமல் நாதன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "100 நாட்கள் வேலை என்பதே யாருக்கும் முழுமையாக கிடைத்ததில்லை. தமிழ்நாட்டில் சராசரியாக வழங்கப்பட்ட வேலை நாட்கள் என்பது என்றுமே 60 நாட்களைக் கூட தாண்டியதில்லை. தேசிய ஊரக வேலை திட்டத்திற்கும் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. திட்டங்களின் நோக்கத்தையும் குறுக்குவது பணியாளர்களுக்கு போதிய வேலைநாட்கள் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும்," என்றார்.

தமிழ்நாட்டில் ஊரக வேலை திட்டத்தின் கீழ் எந்தெந்த பணிகள் செயல்படுத்தப்படுகின்றன?

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நீர்நிலை உருவாக்கம் மற்றும் பராமரிப்பு, வேளாண் சார்ந்த பணிகள், சாலைப் பணிகள், கழிவறை கட்டுமானப் பணிகள் மற்றும் மாநில அரசின் வீட்டு வசதி திட்டப் பணிகள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.

"ஏற்கெனவே மத்திய அரசு ஊதியத்தை சரியான நேரத்தில் விடுவிப்பதில்லை என்கிற புகார் இருந்து வருகிறது. மிகவும் தாமதமாகவே தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைத்து வருகிறது. இனி என்ன வகையான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உட்பட அனைத்தையும் மத்திய அரசே தீர்மானிக்கும் என்பது ஏற்கெனவே மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மட்டுமல்லாது, வேலைவாய்ப்பையும் கேள்விக்கு உள்ளாக்கும்," என்று தெரிவித்தார் சண்முகம்.

தமிழ்நாடு அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு "கலைஞரின் கனவு இல்லம்" என்கிற புதிய திட்டத்தை அறிவித்தது. மாநில அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் குடிசைகளுக்குப் பதிலாக வீடுகள் கட்டித் தரப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ஆய்வில் மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் குடிசைகள் இருப்பதாக தெரியவந்த நிலையில், முதல்கட்டமாக 2024 - 2025 ஆம் ஆண்டில் ரூ.3,100 கோடி மதிப்பில் சுமார் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இந்தத் திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துடன் ஒன்றிணைந்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 90 வேலைநாட்களும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறை கட்டுவதற்கு 10 வேலைநாட்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வீடு கட்டுவதற்கும் தலா ரூ.3.10 லட்சமும், கழிவறை கட்டுவதற்கு தனியாக ரூ.12,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புதிய சட்டத்தால் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டம் தடங்கல்களைச் சந்திக்க இருப்பதாக, ஊரக வளர்ச்சித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பெயர் வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையின்பேரில் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"இந்தத் திட்டத்தின் பயனாளர்கள் அனைவருமே கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தான், கிட்டத்தட்ட 95% பேர் ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தான்." என்றார்.

ஊரக வேலை திட்டப் பணியாளர்களுக்கு மட்டும் தான் இந்த வீடுகள் ஒதுக்கப்படுவதாக கூறும் அவர், பயனாளர்களில் யாரும் அந்த திட்டத்தில் இல்லையென்றால் அவர்களுக்கு முதலில் வேலைக்கான அட்டை உருவாக்கப்பட்டு தான் வீடு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

"வீட்டுக்கான செலவாக ரூ. 3.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு பணியாளருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றால் அவர் தனக்கான 100 நாட்கள் பணியையும் தங்களின் சொந்த வீடு கட்டும் வேலையில் கணக்கு காட்டிக் கொள்ளலாம், அதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.336 வீதம் 33,600 ரூபாயும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டிக் கொள்வதற்காக 12,000 ரூபாயும் தனியாக அவர்களுக்கு வழங்கப்படும். வீட்டுக்கான மூலப் பொருட்களுக்கு என அரசு ரூ.3.10 லட்சம் ஒதுக்கீடு செய்கிறது. இது அரசுக்கும் பயனாளர்களுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் ஏற்பாடாக இருந்தது." என்று தெரிவித்தார்.

ஆனால் புதிய சட்டத்தால் ஏற்பட்டுள்ள சிக்கலை விவரித்த அந்த அதிகாரி, "மத்திய அரசின் வீட்டு வசதி திட்டங்களுக்கு மட்டுமே இனி ஊரக வேலை திட்டப் பணியாளர்களை பயன்படுத்த முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களை மாநில அரசின் இந்த திட்டத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இனி அவர்கள் வீடு கட்டும் இந்த வேலைகளைச் செய்தாலும் ஊதியம் பெற முடியாது."

"அதுபோக, தங்களின் 125 நாட்கள் பணி கணக்கை எட்ட அவர்கள் மாற்று வேலைகளுக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசும் இந்தப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான மனித வளத்திற்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் செலவுகளும் ஏற்படும்." என்றார்.

இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் கிட்டத்தட்ட 90% பணிகள் நிறைவுற்றதாகக் குறிப்பிட்டார் அந்த அதிகாரி. "வருகின்ற நிதிநிலை அறிக்கையில் தான் அடுத்தக்கட்ட பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட இருந்தது. தற்போதைய சூழலால் மாற்று ஏற்பாடுகளை ஆலோசித்து வருகிறோம்." என்றார்.

மத்திய அரசின் பங்களிப்பும் உயர்ந்திருக்கிறது - பாஜக

"புதிய சட்டத்தின் படி கூடுதல் நிதி ஒதுக்கப்பட இருப்பதால் மத்திய அரசின் பங்களிப்பும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மாநில அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் இதர மக்கள் நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கப்பட்டதை விட 4 மடங்கு கூடுதல் நிதி தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. திட்டத்தின் நோக்கம் வறுமை ஒழிப்பு என்பதிலிருந்து மாறியிருக்கிறது. அதற்கேற்ப தான் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது," எனத் தெரிவித்தார் நாராயணன் திருப்பதி.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்டதை விடவும் கூடுதலான நிதி கொடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோதியும் கடந்த ஏப்ரல் மாதம் கூறியிருந்தார். அப்போது, பணத்தின் மதிப்பு குறைவதன் காரணமாக, இயல்பாகவே நிதி ஒதுக்கீடு தொகை அளவில் அதிகரிக்கும் என்பது ஒரு வாதமாக முன்வைக்கப்பட்டது.

அச்சமயத்தில் பிபிசி தமிழிடம் பேசிய பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் கூறுகையில், "வெறும் எண்களில் இந்தத் தரவுகளை ஒப்பிடுவது தவறு. பணத்தின் மதிப்பு என்பது தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பதாகும். எனவே இந்தத் தரவுகள் ஒன்றோடு ஒன்று ஒப்பிடக் கூடியவை அல்ல. மாநிலத்தின் மொத்த ஜிடிபியில் அல்லது மொத்த வருவாயில் மத்திய அரசின் பங்களிப்பு எவ்வளவு என்றுதான் கணக்கிட வேண்டும்," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு