You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜம்மு ராணுவ தளங்களில் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் என கூறும் இந்தியா - நிலவரம் என்ன?
ஜம்முவை வெடிகுண்டுகளைக் கொண்ட டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்கியதாக ஏஎன்ஐ செய்தி முகமை கூறியுள்ளது.
மேலும், "ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன" என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
ஜம்முவில் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்படுவதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.
இது தொடர்பாக ஏ.என்.ஐ. ஊடகத்திடம் பேசிய நபர் ஒருவர், 'குண்டுவீசும் ஓசையும், துப்பாக்கியால் சுடும் சப்தமும் கேட்டதாகவும், வானில் புகைமூட்டமாக இருந்ததாகவும்' தெரிவித்தார்.
ராஜஸ்தானின் பார்மர், ஜெய்சல்மார் போன்ற பகுதிகளிலும் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. பஞ்சாபின் குர்தஸ்பூரிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விளக்குகள் அணைக்கப்பட்டன.
இந்தியாவின் அரசு ஊடகமான டிடி நியூஸ் தனது எக்ஸ் பக்கத்தில், சத்வாரி, சம்பா, ஆர் எஸ்புரா மற்றும் அர்னியா ஆகிய பகுதிகளை இலக்கு வைத்து 8 ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியதாகவும் அவை அனைத்தும் வான் பாதுகாப்பு தடுப்புகள் மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசலாவில் நடைபெற்ற பஞ்சாப் -டெல்லி இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மின் விளக்குகளில் ஏற்பட்ட கோளாறால் ஆட்டம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போட்டியை காண வந்தவர்கள் பாதியில் வெளியேறினர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு அடுத்து அறிவிப்பு வரும் விடுமுறை வழங்கப்படாது என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் பள்ளிகளுக்கு விடுமுறை, காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு விடுமுறை ரத்து போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இந்தியா தனது மக்களை பாதுகாக்கவும், இறையாண்மையை பாதுகாக்கவும் முழுவதுமாக தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு