புதிய ஒப்பந்தத்தால் உற்சாகம்: தமிழக ஜவுளித் துறையினருக்கு ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க சந்தைக்கு மாற்றாகுமா?

ஐரோப்பிய ஒன்றியம், வர்த்தகம், ஜவுளித்துறை, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், இந்தியாவில் தயாராகும் ஆயத்த ஆடைகளை வரியில்லாமல் (Zero Duty) ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தமிழக ஜவுளித்துறையினர் பெரிதும் உற்சாகமடைந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதியில், சீனாவும் வங்கதேசமும் 50 சதவீதம் பங்களித்து வரும் நிலையில், இந்தியாவின் பங்கு 5 சதவீதமாக மட்டுமே உள்ளதால், இந்த ஒப்பந்தம் ஆடை ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அதேநேரத்தில் அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பை இது ஈடு செய்யாது என்று கூறும் ஜவுளித்துறையினர், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.

கடந்த ஆண்டில் பிரிட்டனுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில், அந்த ஒப்பந்தத்தையும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தற்போது கையெழுத்தாகியுள்ள வர்த்தக ஒப்பந்தத்தையும் விரைவாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய ஆடை இறக்குமதியாளரான ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம், வர்த்தகம், ஜவுளித்துறை, இந்தியா

பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images

படக்குறிப்பு, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

மொத்தம் 27 நாடுகளைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், இந்தியாவுக்கும் இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைக் கடந்த ஜனவரி 27 அன்று பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இணைந்து அறிவித்தனர்.

இந்த ஒப்பந்தம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர் மோதி, இந்தியா தனது வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளதாகவும், இன்று நடந்துள்ள ஒப்பந்தம் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு என்றும் கூறியிருந்தார். இதுவரை நடந்துள்ள ஒப்பந்தங்களுக்கெல்லாம் தாய் போன்றது இந்த ஒப்பந்தம் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜவுளி ஏற்றுமதியில் பெருமளவு பங்கு வகிக்கும் தமிழக ஜவுளித்துறையினர் இந்த ஒப்பந்தத்தை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம்தான் உலகின் மிகப்பெரிய ஆடை இறக்குமதியாளராக உள்ளதாகக் கூறியுள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி கவுன்சில் (AEPC), கடந்த நிதியாண்டில் (2024-25) ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மொத்த ஆயத்த ஆடை தேவை அமெரிக்க டாலர் மதிப்பில் 202.8 பில்லியன் என்று கூறியுள்ளது. அதனால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் ஆயத்த ஆடைத்துறையில் மிகுந்த உற்சாகம் நிலவுகிறது என்று கூறியுள்ளார் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி கவுன்சில் தலைவர் சக்திவேல்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயத்த ஆடை தேவை ஆண்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் இருந்தாலும், அதில் 105 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆடைகளை, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளே உற்பத்தி செய்துவிடுவதாக கூறுகிறார் இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் (ITF) ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன். இதனால், ஆண்டுக்கு 95 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகளை மட்டுமே, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியிலுள்ள நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அவர் கூறுகிறார்.

ஐரோப்பிய ஒன்றியம், வர்த்தகம், ஜவுளித்துறை, இந்தியா
படக்குறிப்பு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம்

பிபிசி தமிழிடம் பேசிய பிரபு தாமோதரன், ''ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதியில் சீனா 29 சதவீதம், வங்கதேசம் 21–22 சதவீதம் என சுமார் 50 சதவீத பங்கை இரு நாடுகளுமே கொண்டுள்ளன. அடுத்தபடியாக துருக்கி 9 சதவீத ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் பங்களிப்பு வெறும் 5 சதவீதம் மட்டுமே. இதற்கு ஒரு காரணம், நமக்கும் போட்டி நாடுகளுக்குமான வரி வித்தியாசம்தான். இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் 8–12 சதவீதம் வரி செலுத்திவந்த நிலையில், அந்த நாடுகளுக்கு வரியில்லாமல் இருந்தது. அதனால் நமது ஆடைகளின் விலை சற்று அதிகமாக இருந்ததால் நமக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறைவாயிருந்தன.'' என்றார்.

''இனிமேல் நமக்கும் வரியில்லை எனும்போது நம்மால் அந்த நாடுகளுடன் சரிக்கு சமமாக (Level Playing Field)போட்டியிட முடியும். கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஆயத்த ஆடை போன்ற துறைகளில் ஏற்றுமதி பெரிய வளர்ச்சியை காணவில்லை. அதற்குக் காரணம், வரியில் இருந்த வித்தியாசம்தான்.'' என்றார் பிரபு தாமோதரன்.

ஐரோப்பிய நாடுகளுடன் திருப்பூருக்கு பாரம்பரியமான வர்த்தக உறவு இருப்பதாக கூறும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், போட்டி நாடான வங்கதேசத்துடன் ஒப்பிடுகையில் இறக்குமதி வரி மற்றும் விலை வேறுபாடு காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியத்துக்கான வர்த்தக வாய்ப்புகள் நமக்கு குறைவாக இருந்தன என்றார். இந்த தடையற்ற ஒப்பந்தத்தால் இந்தியாவில் அதிக பயன்பெறும் துறையாக ஜவுளித்துறை உள்ளது என்றார் அவர்.

பிபிசி தமிழிடம் பேசிய கே.எம்.சுப்பிரமணியம், ''திருப்பூர், ஐரோப்பிய நாடுகளுடன் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. அங்குள்ள சில்லறை வர்த்தக நிறுவனங்கள், பிராண்டுகள் இந்தியாவுடன் நெருங்கிய வர்த்தகத் தொடர்பு வைத்துள்ளன. தற்போது வரி நீக்கம் என்ற நிலை ஏற்பட்டிருப்பதால், ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி திரும்புவதற்கு வாய்ப்புள்ளது.'' என்றார்.

இது இந்திய ஜவுளித்துறை வரலாற்றில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை என்று கூறும் ஏ.இ.பி.சி. தலைவர் சக்திவேல், இதனால் அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகரிக்கும் ஏற்றுமதி வர்த்தகத்தின் தொடர்ச்சியாக ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி போன்ற துறைகளில் வேலைவாய்ப்பும் இரட்டிப்பாகும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஐரோப்பாவுக்கான இந்திய ஜவுளி ஏற்றுமதியில் 29 சதவீதம் அளவுக்கு அதாவது 2.3 பில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்பிலான ஜவுளியை தமிழகம் ஏற்றுமதி செய்து வருவதாகத் தெரிவித்தார் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் துரை பழனிசாமி. இந்த ஒப்பந்தத்தால் இரட்டிப்பாகும் ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூர் மற்றும் கரூர் ஜவுளி மையங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்கிறார் அவர்.

'ஏற்றுமதியுடன் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்'

ஐரோப்பிய ஒன்றியம், வர்த்தகம், ஜவுளித்துறை, இந்தியா
படக்குறிப்பு, கோப்புப் படம்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் கருத்தைப் பகிர்ந்துள்ள சைமா தலைவர் துரை பழனிசாமி, ''27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், உலகப் பொருளாதாரத்தில் இரண்டாமிடத்தில் உள்ளது. நான்காவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்த வரியில்லா ஒப்பந்தம், இரு தரப்புக்கும் வர்த்தகப் பாதுகாப்பை ஏற்படுத்தித்தரும். அதாவது அமெரிக்கா விதித்த அபரிமித வரியினால் ஏற்பட்ட தாக்கத்தைப் பெரிதும் குறைக்கும்.'' என்று கூறியுள்ளார்.

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற முக்கிய ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்து வருவதை ஜவுளித்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும் இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பங்களிப்பு இதுவரை 28 சதவீதமாக மட்டுமே இருப்பதாகக் கூறும் தொழில் அமைப்பினர், இந்த புதிய ஒப்பந்தம் அந்த நாடுகளுக்கு இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய ஜவுளி நிறுவனங்கள், விலை அடிப்படையிலான போட்டியை விட தரம், வடிவமைப்பு மற்றும் நிலைத்தன்மை (Sustainability) போன்ற அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி போட்டியிட வேண்டுமென்று வலியுறுத்தினார் ஏ.இ.பி.சி. தலைவர் சக்திவேல். அதனால் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகள் அனைத்திற்கும் இந்தியாவுக்கு சந்தை அணுகலை மேலும் விரிவுபடுத்தலாம் என்றார் அவர்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஜவுளி ஏற்றுமதியில் நடப்பு நிதியாண்டில் இந்தியா, சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகள் 6–8 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ள நிலையில், வியட்நாம் மற்றும் கம்போடியா 11–15 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளன என்று சர்வதேச அளவிலான புள்ளி விபரங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்த ஐடிஎஃப் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன், இது இந்தியாவுக்கான வர்த்தக வாய்ப்பை தெளிவுபடுத்துகிறது என்கிறார்.

''இந்தியாவிலிருந்து தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர், ஆண்டுக்கு 15 சதவீதம் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) என்ற அளவில் இலக்கு நிர்ணயித்து வளர்ச்சியடைந்தால் 5 ஆண்டுகளில் படிப்படியாக நமது ஆயத்த ஆடை ஏற்றுமதியை 11 பில்லியன் அமெரிக்க டாலராக ஐரோப்பிய சந்தையில் இரட்டிப்பாக்க முடியும்.'' என்றார்.

அதாவது ரூ.60 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் என்று மதிப்பிட்டால், திருப்பூரைப் போன்று 2 மடங்கு பெரிய அளவிலான உற்பத்திக் கட்டமைப்பும் தேவைப்படும் என்றும் அவர் விளக்கினார். இதனால் மற்ற துறைகளை விட, இந்த ஒப்பந்தத்தால் ஜவுளித்துறை அதிகமாக பயனடையும் போது, இந்தியாவில் வேலைவாய்ப்பும் இரட்டிப்பாகும் என்று ஜவுளித்துறையினர் கூறுகின்றனர்.

''நாட்டின் 2030 இலக்கான ஜவுளி வர்த்தகத்தை 172 பில்லியனில் இருந்து 350 பில்லியன் அமெரிக்கா டாலராகவும், ஏற்றுமதியை 37 பில்லியனில் இருந்து 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தவும், 2 கோடி வேலை வாய்ப்புகளை குறிப்பாக கிராமப்புற மக்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.'' என்று சைமா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், வர்த்தகம், ஜவுளித்துறை, இந்தியா
படக்குறிப்பு, இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் (ITF) கன்வீனர் பிரபு தாமோதரன்

இதைத் தவிர்த்து, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தால், இந்திய ஜவுளித் தொழில் கட்டமைப்பை நவீனமாக்கவும் இந்த ஒப்பந்தம் உதவுமென்றும் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜவுளிப் பொருட்களின் மதிப்புகளை கூட்டுதல், புதிய தொழில்நுட்பம் இவற்றில் சிறந்து விளங்கி வரும் ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுடனான இணக்கம் அதிகரித்து, இந்திய ஜவுளித்துறை வெகுவாக முன்னேற இந்த ஒப்பந்தம் உதவும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார் சைமா தலைவர் துரை பழனிசாமி.

பிபிசி தமிழிடம் பேசிய சைமா பொதுச்செயலாளர் செல்வராஜூ, ''நூற்பு இயந்திரங்களைத் தவிர பெரும்பாலான நாடா இல்லா தறிகள், துணி சாயமிடும் மற்றும் அச்சிடும் இயந்திரங்கள், மிக முக்கியமான உதிரி பாகங்களை ஆண்டுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்தியா இறக்குமதி செய்கிறது. இவை பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தயாராகின்றன. இந்த ஒப்பந்தம் குறைந்த விலையில் இயந்திரங்கள், உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய உதவும்.'' என்றார்.

அமெரிக்க சந்தைக்கு மாற்று ஆகுமா ஐரோப்பிய ஒன்றியம்?

ஐரோப்பிய ஒன்றியம், வர்த்தகம், ஜவுளித்துறை, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

அமெரிக்காவின் அதீத வரி விதிப்பால் இந்திய ஜவுளித்துறை நெருக்கடிகளைச் சந்தித்து வரும் சூழலில் இந்த ஒப்பந்தம் ஜவுளித்துறையினருக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்துள்ளதாகக் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் கூறுகிறார்.

''2030 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி அளவு இப்போது இருப்பதை விட இரட்டிப்பாகும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் அது அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்ட வர்த்தக பாதிப்பை ஈடு செய்யுமா என்று கணக்கிடக் கூடாது. இந்திய ஜவுளித்துறைக்கு அமெரிக்க சந்தை மிக முக்கியமானது. அதனுடனான பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடியவேண்டும்.'' என்றார் அவர்.

அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களும் தங்களது ஏற்றுமதிகளை அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளை மட்டுமே நம்பியில்லாமல் புதிய வரியில்லா ஒப்பந்த நாடுகளில் ஏற்றுமதியை அதிகரிக்க அரசு எடுத்து வரும் பல்வேறு திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறார் சைமா தலைவர் துரை பழனிசாமி.

பிபிசி தமிழிடம் இதுபற்றி மேலும் விவரித்த ஐடிஎஃப் பிரபு தாமோதரன், ''அமெரிக்காவின் அதீத வரி விதிப்பு இந்திய ஜவுளித்துறையை பெரிதும் பாதித்துள்ளது உண்மைதான். அதனால் அமெரிக்க சந்தையை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, ஐரோப்பிய சந்தையை விரிவுபடுத்தலாம் என்பது சரியான வர்த்தக அணுகுமுறை கிடையாது. இரண்டும் வெவ்வேறான சந்தைகள். அமெரிக்கா ஒரே நாடு. ஒரே ஆர்டரில் பெரிய மதிப்புக்கு ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் வெவ்வேறு நாடுகளுடன் வர்த்தகம் செய்யவேண்டும்.'' என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனுனான வர்த்தக ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், அமெரிக்காவுடனான வர்த்தகம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய பல்வேறு ஜவுளித் தொழில் அமைப்பினரும், இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் வரும் மார்ச் மாதத்துக்குள் நல்ல முடிவை எட்டும் என்று மத்திய வர்த்தகத்துறை தரப்பில் நம்பிக்கையூட்டப்பட்டிருப்பதாக தகவல் பகிர்ந்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அமெரிக்காவின் வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிட்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம், நடைமுறைக்கு வருவதற்கு ஓராண்டு ஆகலாம் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதியாளரும், தொழில்துறை எழுத்தாளருமான குமார் துரைசாமி. கடந்த ஆண்டில் பிரிட்டனுடன் கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்னும் நடைமுறைக்கு வராததை அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு ஜூலை 24 அன்று இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 99 சதவீத பொருட்களுக்கு வரி இருக்காது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். இந்த ஒப்பந்தத்தில் பால், அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளையும் இந்தியா பாதுகாத்துள்ளதாக கூறிய அவர், ''இந்த ஒப்பந்தம் ஒரு திருப்பு முனை நிகழ்வு'' என்று கூறியிருந்தார்.

ஆனால் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு ஏழு மாதங்களாகிவிட்ட நிலையில், இன்னும் அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை. வரும் மார்ச் மாதத்திற்குள் இறுதி செய்யப்பட்டு, ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு வருமென்று மத்திய வர்த்தகத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருப்பதாக ஐடிஎஃப் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தை தாமதிக்காமல் அமல்படுத்துவதற்கு மத்திய அரசு விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தொழில் அமைப்பினர் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சைமா தலைவர் துரை பழனிசாமி ''கடந்த சில ஆண்டுகளாக 20–25 சதவீத உற்பத்திக் கொள்ளளவை பயன்படுத்த முடியாத சூழ்நிலையில், ஒட்டுமொத்த ஜவுளித்துறையுமே நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் ஏற்பட்டு வரும் உற்பத்தி இழப்பு, வேலையிழப்பு மற்றும் ஏற்றுமதி இழப்பு போன்றவற்றை குறுகிய காலத்தில் சீரமைக்கும் பொருட்டு ஐரோப்பா மற்றும் பிரிட்டனுடனான வர்த்தக ஒப்பந்தங்களை 6–8 மாதங்களில் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு எடுக்க வேண்டும்.'' என்று கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு