You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உணவை பார்சல் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் என்ன ஆபத்து?
உணவு பேக்கேஜிங் துறையில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக்கின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒரு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் ஒவ்வொரு விநாடியும் சுமார் 47 ஆன்லைன் உணவு ஆர்டர்கள் பதிவாகின்றன. மேலும், இந்தத் தொழில் 2033ஆம் ஆண்டுக்குள் 265 பில்லியன் டாலர்களை எட்டும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், வீணாகும் உணவு, மலை போலக் குவியும் ஸ்பூன்கள், கிண்ணங்கள் போன்ற ஒற்றைப் பயன்பாட்டு பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் உணவை வழங்கப் பயன்படுத்தும் வாகனங்களின் புகை என இந்த வசதிக்கும் ஒரு விலையுண்டு.
அரசின் தரவுகள்படி, 2022–23ஆம் ஆண்டில் இந்தியா 41 லட்சம் டன்களுக்கு மேலான பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்தது.
இந்தியா உள்படப் பல நாடுகள் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை தடை செய்துள்ளன. இருப்பினும், ஐ.நா சபையின் கூற்றுப்படி, 19–23 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இன்னும் நமது ஆறுகள், ஏரிகள் மற்றும் பெருங்கடல்களை மாசுபடுத்துகின்றன.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு அழியாமல் இருக்கும் இந்த பிளாஸ்டிக், காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் வழியாக நம் தட்டுகளுக்கே மீண்டும் திரும்புகிறது.
விமர்சனங்களும் கவலைகளும் எழுந்து வரும் நிலையில், நிறுவனங்கள் சூழலுக்கு உகந்த தீர்வுகளைப் பற்றிப் பேசுகின்றன. மட்கக் கூடிய பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது பெரும்பாலும் இதற்கொரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது.
ஆனால் ஓர் ஆய்வு, இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளிலும் 9% மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. உணவு பேக்கேஜிங் துறையில் பிளாஸ்டிக்கின் இடம், அதன் பாதிப்புகள், அதற்கான மாற்றுகள் பற்றி ஆராய்கிறது இந்தக் காணொளி.
செய்தியாளர்கள்: க. சுபகுணம், பிரவீன்
ஒளிப்பதிவு: ரோஹித் லோஹியா, சிராஜ் அலி, சாம் டானியல்
படத்தொகுப்பு: சிராஜ் அலி
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு