You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'3 ஆண்டுகள் தாமதம்' – சல்லியர்கள் படத்தின் திரையரங்கு வெளியீட்டில் என்ன சிக்கல்?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் குறைந்த செலவில் உருவாகும் திரைப்படங்களுக்குப் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில்லை எனவும் இம்மாதிரி திரைப்படங்களுக்கு திரையரங்குகளைத் தர உரிமையாளர்கள் மறுக்கிறார்கள் எனவும் திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குற்றம்சாட்டியிருக்கிறார். இதன் பின்னணி என்ன?
நடிகர் கருணாசும் பி. கரிகாலன் என்பவரும் இணைந்து 'சல்லியர்கள்' என்ற திரைப்படத்தைத் தயாரித்திருக்கின்றனர். கருணாஸ், சத்யாதேவி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை தி. கிட்டு என்பவர் இயக்கியிருக்கிறார். சல்லியர்கள் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார்.
இந்தப் படம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் பணியாற்றிய மருத்துவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்தத் திரைப்படத்தை வெளியிட திரையரங்குகளை அணுகியபோது, பெரும்பாலான திரையரங்குகள் முன்வரவில்லையெனக் குற்றம் சாட்டியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி. சமீபத்தில் அந்தப் படத்தின் பிரத்யேகக் காட்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இந்தப் பிரச்னையின் பின்னணியை விளக்கினார்.
'படம் எடுத்து 3 ஆண்டுகள்'
"சல்லியர்கள் படத்தை எடுத்து முடித்து மூன்றாண்டுகளாகிவிட்டன. படம் எனக்குப் பிடித்திருந்ததால் அதனை வெளியிட முடிவுசெய்தேன். இதற்கு முன்பு, இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு என மூன்று, நான்கு முறை தேதி குறித்தோம். ஆனால், திரையரங்குகள் போதுமான அளவுக்குக் கிடைக்காததால் வெளியிடும் தேதிகளை மாற்றிக்கொண்டே வந்தோம். '' என்றார் சுரேஷ் காமாட்சி.
மேலும் ''அடுத்த வாரம் 'பராசக்தி'யும் 'ஜனநாயகனு'ம் வருவதால் இந்த வாரம் எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆகவே இந்த வாரத்தைத் தேர்வுசெய்து, சல்லியர்கள் படத்தை வெளியிட முடிவுசெய்தோம். ஆனால், இந்த வாரமும் படத்தை வெளியிட இயலாத சூழல் ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாடு முழுவதும் மொத்தமாகவே 27 காட்சிகள்தான் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளை இயக்கிவரும் ஒருபெரிய திரையரங்க நிறுவனம், சல்லியர்கள் படத்திற்கு என ஒரு காட்சியைக்கூட கொடுக்கவில்லை. இந்தப் படத்தை ஏன் புறக்கணிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
வேறு மாநிலங்களில் இதைச் செய்ய முடியுமா? தயாரிப்பாளர் சங்கங்கள் எதுவும் செய்வதில்லை. சின்னப் படங்கள் வந்தால்தானே புதிய நடிகர்கள் வருவார்கள்? புதிய இயக்குநர்கள் வெளியில் வருவார்கள்? தவிர இந்தப் படம் ஈழப் போராட்டம் குறித்த திரைப்படம். அப்படியிருந்தும் இந்த நிலை" என்கிறார் சுரேஷ் காமாட்சி.
இதையடுத்து இந்தப் படத்தை, வியாழக்கிழமையன்று (ஜனவரி 1) ஓடிடியில் வெளியிட முடிவுசெய்திருப்பதாகவும் கூறினார் சுரேஷ் காமாட்சி. இதையடுத்து விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய சுரேஷ் காமாட்சி, "சிறிய திரைப்படம் என்றாலே ஓடாது என முடிவுகட்டி, திரையரங்குகளைத் தர மறுக்கிறார்கள். படத்தைத் திரையிடுங்கள். ஆட்கள் வராவிட்டால் தூக்கிவிடுங்கள். தரவே முடியாது என்றால் எப்படி? படம் வெளியாகும் முன்பே, படம் ஓடவே ஓடாது என முடிவுசெய்வதற்கு இவர்கள் யார்? பெரிய நிறுவனங்களின் படங்களைத் தவிர வேறு யாருமே படங்களை திரையிட முடியாத சூழல் வந்துவிட்டது. ஒரு திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி எட்டு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடிகளுக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். ஆனால், திரையரங்குகளில் அந்தப் படமே வெளியாக முடியாது என்றால், என்ன செய்வது? அதனால்தான் நேரடியாக ஓடிடியிலேயே வெளியிட்டுவிட்டேன்" என்கிறார் அவர்.
'அரங்குகளைத் தர மறுக்கிறார்கள்'
'சல்லியர்கள்' படத்தைத் தயாரித்த கருணாசும் இதே கருத்தையே சொல்கிறார்.
"ஒரு காலத்தில் திரையரங்குகள் தனித்தனியாக இயங்கிவந்தன. கார்ப்பரேட் நிறுவனங்கள் சிறிய சிறிய திரையரங்குகள், தனி திரையரங்குகள் எல்லாவற்றையும் ஒப்பந்தங்களின் மூலம் தங்கள் பெயரில் இயக்க ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகு சிறிய தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு அரங்குகளைத் தர மறுக்கிறார்கள். அப்படியானால், சிறிய திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் என்ன செய்வது? இப்போது முன்னணி நடிகர்களாக, இயக்குநர்களாக இருப்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் புதுமுக நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் இருந்தவர்கள்தானே? அவர்களது திரைப்படங்களுக்கு அந்த காலகட்டத்தில் திரையரங்குகள் கிடைத்ததால்தானே அவர்கள் வளர முடிந்தது?" எனக் கேள்வியெழுப்புகிறார் அவர்.
தயாரிப்பாளர்கள் சங்கங்கள் வலுவாக இல்லாததுதான் பிரச்னை என்கிறார் சுரேஷ் காமாட்சி.
"தயாரிப்பாளர் சங்கங்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். திரையரங்க உரிமையாளர்களின் சங்கங்கள், விநியோகிஸ்தர்களின் சங்கங்கள் ஆகியவை அவரவர் நலன்களைக் காக்கும் வகையில் தீவிரமாக இயங்குகின்றன" என்கிறார் அவர்.
ஆனால், இதில் வேறு சில கோணங்களும் இருக்கின்றன என்கிறார்கள் திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் இயங்குபவர்கள்.
"சிறிய திரைப்படங்களை வெளியிடுவது என்பது இப்போது எல்லாத் தரப்பிற்குமே கடினமான காரியமாகிவிட்டது. சற்று முகம் தெரிந்த நடிகர்கள் இருந்தால்தான் ரசிகர்கள் திரையரங்குகளுக்கே வருகிறார்கள். திரையரங்க உரிமையாளர்களைப் பொறுத்தவரை, நல்ல படமா, மோசமான படமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஒரு காட்சிக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்றுதான் பார்ப்பார்கள்.'' என்கிறார் இயக்குநரும் விநியோகிஸ்தரும் 'OTTPLUS' ஓடிடியின் சிஇஓவுமான கேபிள் சங்கர்.
''ஒரு படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் யாரெனத் தெரியவில்லையென்றால் மிகக் குறைவான ஆட்களே வருவார்கள். இதில் திரையிடும் செலவுகூட திரையரங்கிற்கு கிடைக்காது. ஒரு காட்சிக்கு நான்கைந்து பேர் மட்டுமே வந்தால் ஏசிக்கான செலவு, மின்சாரச் செலவு, சுத்தம் செய்யும் ஆட்களுக்கான செலவு போன்றவற்றில் பாதிகூட கிடைக்காது. அப்படியிருக்கும் நிலையில், யார் சிறிய படங்களைத் திரையிட வருவார்கள்?'' என்கிறார் கேபிள் சங்கர்
''ஆனால், சில சிறிய திரைப்படங்கள் ஆச்சரியம் தருகின்றன. சில நாட்களுக்கு முன்பாக பேச்சி என்று ஒரு படம் வந்தது. அந்தப் படத்திற்கு சென்னையிலும் செங்கல்பட்டிலும் சேர்த்து மொத்தமே 12 காட்சிகள்தான் கொடுக்கப்பட்டன. ஆனால், வரவேற்பு இருந்ததால் அடுத்த வாரம் காட்சிகளின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது. இதற்கு அடுத்த வாரம் காட்சிகளின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்தது. அந்தப் படத்திற்கு சுமார் 80 லட்சத்திற்கு மேல் வசூல் கிடைத்தது. ஆனால் எல்லாப் படங்களுக்கும் இதுபோல நடப்பதில்லை என்பதுதான் பிரச்னை" என்கிறார் அவர்
ஆனால், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்கிறார் கேபிள் சங்கர்.
"சல்லியர்கள் படத்திற்கு நடந்தது அநியாயம். சிறிய திரைப்படங்களுக்கு பெரும் எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்காது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மிகப் பெரிய திரையரங்கு குழுமம், ஒன்றிரண்டு திரையரங்குகளைக்கூட தரவில்லை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி திரைப்படங்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள். அதுபோன்ற நிலை இங்கும் வரவேண்டும்" என்கிறார் கேபிள் சங்கர்.
'முன்பே கூறியிருந்தால் ஏதாவது செய்திருக்க முடியும்'
ஆனால், திரையரங்க உரிமையாளர்களின் பார்வை வேறாக இருக்கிறது.
குறைந்த செலவில் தயாராகும் திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் பெரும் எண்ணிக்கையில் வெளியாகும் நிலையில், பெரும்பாலான படங்களுக்கு முதல் காட்சிக்கே ஆள் வருவதில்லை என்கிறார்கள் அவர்கள்.
ஆனால், சல்லியர்கள் திரைப்படத்தைப் பொறுத்தவரை முன்பே தங்களிடம் கூறியிருந்தால் ஏதாவது செய்திருக்க முடியும் என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன்.
"ஒவ்வொரு வாரமும் ஐந்து - ஆறு சிறிய திரைப்படங்கள் வருகின்றன. பெரும்பாலான படங்களுக்கு முதல் காட்சிக்கே 4 -5 பேர்கூட வருவதில்லை. ஏதோ இவர்களுக்கு மட்டும்தான் தமிழ் உணர்வு இருப்பதைப் போல பேசுகிறார்கள். எங்களுக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது. வியாழக்கிழமை படத்தை வெளியிட முடிவுசெய்துவிட்டு, புதன்கிழமையன்று என்னிடம் சொன்னால் என்ன செய்ய முடியும்?'' என்கிறார் அவர்
''மூன்று - நான்கு நாட்கள் முன்னதாகச் சொல்லியிருந்தால்கூட ஏதாவது செய்திருக்க முடியும். ஒவ்வொரு வாரமும் 6 படங்கள் வரும் நிலையில், எத்தனை படங்களுக்கு திரையரங்குகளைத் தர முடியும்? இன்று நாளிதழைத் திறந்து பாருங்கள். எத்தனை படங்களின் வெளியீடு குறித்த விளம்பரங்கள் வந்திருக்கின்றன? இதில் ஏதாவது நாம் அறிந்த படமாக இருக்கிறதா? வரும் படங்களை திரையிடுங்கள், ஓடினால் தொடருங்கள் இல்லாவிட்டால் தூக்கிவிடுங்கள் என்கிறார்கள். காட்சிகளை திரையிடும் செலவுகூட வராத படங்களை போட்டால், அதில் வரும் இழப்பை எப்படி எதிர்கொள்வது? ஆனால், சல்லியர்கள் படத்தைப் பொறுத்தவரை என்னிடம் முன்பே கூறியிருந்தால், சம்பந்தப்பட்ட திரையரங்கு குழுமத்திடம் பேசி சில திரையரங்குகளைப் பெற்றுத் தந்திருக்க முடியும்" என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன்.
தற்போது சல்லியர்கள் திரைப்படம், 'ஓடிடிபிளஸ்' ஓடிடியில் வெளியாகிவிட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு