பெண்கள் மீது அதிகரிக்கும் டிஜிட்டல் வன்முறைகள் – தற்காத்துக்கொள்வது எப்படி?

    • எழுதியவர், ஸ்னேகா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஸ்வேதா நடனமாடுவதை மிகவும் விரும்புகிறார். அவர் தனது சிறு சிறு வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார். அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் ஒரு விஷயம் என்கிறார் அவர்.

ஆனால், ஒரு நாள் இன்ஸ்டாவில் தனது புகைப்படத்துடன் சில ஆபாசமான விஷயங்களை எழுதி சிலர் பகிர்ந்திருப்பதைப் பார்த்தபோது, அவர் அதிர்ச்சியடைந்தார்.

அந்தப் பதிவை நீக்குவதற்குப் பல நாட்கள் ஆனது. இந்தச் சம்பவம் அவரை மனதளவில் உலுக்கியது. அவர் அதற்குப் பிறகு டிஜிட்டல் தளங்களில் பாதுகாப்பாக உணரவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாலின சமத்துவத்திற்கான பாதையில், பெண்களுக்கான டிஜிட்டல் சமத்துவமும் பாதுகாப்பான வெளியும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் பெண்கள் மீதான டிஜிட்டல் வன்முறை அத்தகைய சமத்துவத்தை நோக்கிய பாதையில் உள்ள சவால்களை அதிகரித்துள்ளது.

ஆகவே, டிஜிட்டல் வன்முறை என்றால் என்ன, அதை எதிர்கொண்டால் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பனவற்றை இங்கு தெரிந்துகொள்வோம்.

டிஜிட்டல் வன்முறை என்றால் என்ன?

டிஜிட்டல் புரட்சியால், மொபைல், இணையம் ஆகியவற்றை அணுகும் வசதி எளிதில் இந்தியாவில் உள்ள மக்களுக்குக் கிடைக்கிறது. இந்தப் புரட்சி சந்தேகத்திற்கு இடமின்றி விழிப்புணர்வையும் அதிகாரத்தையும் மக்களிடையே அதிகரித்தது.

ஆனால், பல ஆண்டுகளாக நிஜ உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையும் டிஜிட்டல் உலகில் வேறு வடிவத்தில் ஊடுருவியது.

ஐ.நா. மக்கள் தொகை நிதியத்தின்படி, பெண்கள் மற்றும் சிறுமிகள் விஷயத்தில், இது நேரடியாக அவர்கள் களங்கப்படுத்தப்படுவதுடன் தொடர்புடையது. இந்த நடவடிக்கைகள் அவர்களது மனநலனை பாதிப்பதோடு, அவர்கள் இணைய உலகிலும் நிஜ உலகிலும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரத் தொடங்குகிறார்கள். இது பணியிடம், பள்ளி அல்லது தலைமைப் பதவிகளில் அவர்களின் திறனைப் பாதிக்கிறது.

  • ஆன்லைன் துன்புறுத்தல், வெறுப்பூட்டும் பேச்சு, புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்துதல், மிரட்டல், ஆன்லைனில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல், ஆபாசமான விஷயங்களை அனுப்புதல் மற்றும் பல விஷயங்கள் டிஜிட்டல் வன்முறையின் ஒரு பகுதியாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் அதன் ஆபத்துகள் இன்னும் அதிகரித்துள்ளன.
  • ஐ.நா.வின் கூற்றுப்படி, பாலின சமத்துவமின்மை, பாலினப் பாகுபாடு ஆகியவற்றில் வேரூன்றிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் செய்யப்படும் வன்முறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் அல்லது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் அல்லது விளம்பரப்படுத்தப்படும் வன்முறை இந்த வகையின்கீழ் வருகிறது.
  • தி எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் நடத்திய ஆய்வின்படி, உலகளவில் 85 சதவீத பெண்கள் ஆன்லைன் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர்.
  • இந்தியாவில் உள்ள தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, கோவிட் பேரிடருக்குப் பிறகு பெண்களுக்கு எதிரான சைபர் குற்ற வழக்குகள் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் குற்றத்தில் பிளாக்மெயில் செய்வது/ அவதூறு பரப்புவது/ புகைப்படங்களைத் தவறாகச் சித்தரிப்பது/ ஆபாசமான விஷயங்களை அனுப்புவது/ போலி சுயவிவரம் போன்ற விஷயங்கள் அடங்கும்.

ஸ்வேதா விஷயத்தில், அவரது புகைப்படங்களை பதிவேற்றிய நபரை அவருக்குத் தெரியாது. அவர் அந்தப் பதிவுகள் குறித்துப் புகாரளித்தார். அதன்பிறகு அது அகற்றப்பட்டது. ஆனால், ரிம்ஜிம் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை.

“எனக்கு நடந்த விஷயத்தில், என் குடும்பம் எனக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால், அதை எதிர்த்து என்னால் சட்டரீதியாகப் போராடியிருக்கவே முடியாது,” என்கிறார் ரிம்ஜிம்.

தனக்கு அறிமுகமான ஒருவர் தனது புகைப்படங்களைத் தவறாகச் சித்தரித்து, சமூக ஊடகங்களில் வெளியிடத் தொடங்கியதாக ரிம்ஜிம் கூறுகிறார். அவர் அந்தக் கணக்கு குறித்துப் புகாரளித்தபோது, அந்த நபர் பல கணக்குகளை உருவாக்கி ரிம்ஜிம்மை இணையவழியில் துன்புறுத்தவும் மிரட்டவும் தொடங்கியுள்ளார்

ரிம்ஜிம் மற்றும் ஸ்வேதா விஷயத்தில் பொதுவான ஒரு விஷயம் உண்டு. இந்தச் சம்பவங்களின் தாக்கம் அவர்களுடைய மனதில் நீண்டகாலமாக இருந்தது. அதிலிருந்து மீள அவர்களுக்கு நீண்டகாலம் எடுத்தது.

சட்டம் சொல்வது என்ன?

இதுகுறித்து வழக்கறிஞர் சோனாலி கட்வஸ்ராவிடம் பிபிசி பேசியபோது, இந்தியாவில் இதற்கான சட்டங்கள் உள்ளன. ஆனால், வழக்குகள் நீண்ட நாட்களுக்கு நீடிப்பதே பிரச்னை.

டிஜிட்டல் வன்முறையைக் கையாள இந்திய சட்டத்தில் பல விதிகள் இருப்பதாக அவர் கூறுகிறார். முதலில், இந்த இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும்.

  • நீங்கள் எந்த சமூக ஊடகத்தில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட ஐடியை தடுக்க உங்களுக்கு உரிமையும் வசதியும் உள்ளது. அதுகுறித்து அங்கேயே புகாரளிக்கலாம்.
  • இந்தக் குற்றங்கள் ‘சைபர் கிரைம்’ வகையின்கீழ் வருகின்றன. நீங்கள் தேசிய சைபர் கிரைம் புகாரளிக்கும் தளத்தில் வழக்குப் பதிவு செய்யலாம்.

சோனாலி கட்வாஸ்ராவின் கூற்றுப்படி, “சட்டத்தில் பல விதிகள் உள்ளன. அவை புதியவை அல்ல. தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகள் 66. 67, 71 ஆகியவற்றின் கீழ் அவை ஏற்கெனவே உள்ளன. அது டிஜிட்டல் வன்முறைக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது.

யாராவது ஒரு சமூக ஊடக கணக்கை உருவாக்கியிருந்தால், அவரது உண்மையான பெயர், உங்களைப் பின்தொடர்வது, உங்கள் புகைப்படத்தைத் தவறாகச் சித்தரிப்பது, உங்களுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்புவது, அல்லது உங்களை அவதூறு செய்யும் செயல்களில் ஈடுபடுவது என எதுவாக இருப்பினும், இந்தச் சட்டத்தின்கீழ் புகாரளிக்கலாம்,” என்று விளக்கமளித்தார்.

அடையாளம் தெரியாத நபராக இருந்தால், அந்த நபரின் சமூக ஊடக கணக்கு விவரங்களை வழங்குவதன் மூலம் புகார் அளிக்கலாம்.

இந்தியாவில் இந்த விவகாரத்திற்கு எதிராக இருக்கும் சட்டப்பிரிவுகளில் எந்தப் பிரச்னையும் இல்லை, அதன்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை முடிப்பதில்தான் பிரச்னை இருப்பதாக சோனாலி கட்வஸ்ரா நம்புகிறார்.

இதற்கு, “புதிதாக ஏதாவது கொண்டுவர வேண்டும். அது மிகவும் எளிதானது. ஒருவர் தனது அடையாளத்தை மறைத்து ஒரு சமூக ஊடக கணக்கை உருவாக்குவதும் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ஒரு கணக்கை உருவாக்குவதும் கொஞ்சம் கடினமாக இருக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

மேலும், “இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையினர் அதிகபட்ச உணர்திறனுடன் செயல்பட வேண்டும். பாலியல் வல்லுறவு அல்லது கொலை நடந்தால் மட்டுமே அவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றில்லை. அவர்கள் அதற்குத் தூண்டும் சிறிய தீப்பொறிகளைத் தொடக்க நிலையிலேயே கிள்ளியெறிய, அதையும் அந்தக் குற்றங்களுக்கு நிகரான தீவிரத்துடன் அணுக வேண்டும்,” என்கிறார் சோனாலி கட்வஸ்ரா.

மனதளவில் ஏற்படும் பாதிப்புகள்

“நான் மணிக்கணக்கில் அழுதேன். அந்தப் பதிவைப் பார்ப்பவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றுதான் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த பிளாக்மெயிலிங்கில் இருந்து வெளியே வர ஏதாவது வழி இருக்கிறதா என்று நான் தேடியபோது இருள் சூழ்ந்திருந்தேன். புகார் தெரிவிக்க நினைத்த நேரத்தில், எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதனால் அச்சமாக இருந்தது,” என்று தான் எதிர்கொண்ட மன வேதனையை விவரித்தார் ரிம்ஜிம்.

ரிமிஜிம் ஒருநாள் மனதளவில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தனது குடும்பத்தினரிடம் விஷயத்தைக் கூறினார். அவர்களது வற்புறுத்தலின் பேரில் அவர் போலீசாரிடம் சென்றார். ஆனால் இத்தனைக்கும் நடுவில் ரிம்ஜிம் மன அழுத்தத்திலும் மூழ்கிக் கொண்டிருந்தார்.

“இந்த வழக்கு அதிகபட்சம் ஓராண்டு வரை நீடிக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், அதையும் தாண்டிப் பல ஆண்டுகளுக்கு நீண்டுகொண்டே சென்றது. அதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன்,” என்று கூறுகிறார் அவர்.

ஆணாதிக்க சமூகத்தில் வெளியுலகில் காணும் சக்தி இணையதளத்திலும் காணப்படுவதாக மருத்துவ உளவியலாளர் டாக்டர்.பூஜாசிவம் ஜெட்லி கூறுகிறார். இணைய வெளியில், தாங்கள் யாரிடமும் எதையும் சொல்லலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

“அங்கு ஒரு பெண் தனது வேலையைப் பற்றிப் பேசினாலும், அவர் பாலியல் மற்றும் பாடி ஷேமிங் கருத்துகளுக்கு உள்ளாவதை மிக அதிகமாகப் பார்க்க முடிகிறது. குறிப்பாக பதின்பருவப் பெண்கள் இதற்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்,” என்று கூறுகிறார் அவர்.

“பெரும்பாலும் பதின்பருவ பெண்கள் இதுபோன்ற நேரங்களில் என்னிடம் உதவி தேடி வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை டிஜிட்டல் உலகம் அவர்கள் அதிக நேரத்தைச் செலவிடும் ஒன்றாக உள்ளது. அங்கு அவர்கள் துன்புறுத்தல், கொடுமைப்படுத்தப்படுதல் போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டால், அவர்கள் ஒரு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். யாரிடம் உதவி கேட்பது, என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, அந்த டிஜிட்டல் உலகிலிருந்து வெளியேறினால், அவர்கள் தம் நட்பு வட்டத்தில் இருந்து துண்டிக்கப்படுவதாக நினைக்கிறார்கள். இது அவர்களை மேலும் சிக்கலில் தள்ளுகிறது,” என்று பூஜாசிவம் ஜெட்லி கூறுகிறார்.

இதை எப்படி சமாளிப்பது என்று கேட்டபோது, சில வழிகளை மருத்துவர் பூஜாசிவம் ஜெட்லி பரிந்துரைத்தார்.

  • சம்பந்தப்பட்ட நபர்களை முற்றிலுமாகத் தவிர்ப்பதும், ப்ளாக் செய்வதும் ஒரு நல்ல தீர்வு.
  • அத்தகைய விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வது, ஓர் ஆதரவை வழங்கும்.
  • சில நேரங்களில் டிஜிட்டல் வெளியில் சிலர் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறிது காலம் அதிலிருந்து வெளியேறி விடுவதும் ஒரு நல்ல தீர்வுதான். அதன்மூலம் மன அமைதியைப் பேண முடியும்.
  • நீங்கள் வசதியாக உணரும் விஷயங்களை மட்டும் பகிரவும்.
  • சமூக ஊடக கணக்கைத் தனிப்பட்டதாக, உங்கள் வட்டத்திற்கு உள்ளேயே வைத்திருப்பதும் ஒரு சிறந்த வழி.
  • ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பயன்பாட்டைக் கடைபிடிப்பது நல்லது.
  • ஏதேனும் ஒன்று மனதளவில் தொடர்ந்து தொந்தரவு செய்தால், அதைப் பார்க்கும் சூழலில் இருந்து வெளியேற வேண்டும். அதைத் தொடர்ந்து பார்ப்பது, அதிக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
  • தேவையான நேரத்தில் முறையான உதவிகளை நாட வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)