You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவை: அறுவை சிகிச்சை வசதியுடன் வன விலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது ஏன்?
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் யானை உள்ளிட்ட காட்டுயிர்களை இடமாற்றம் செய்யவும், காயப்படும் காட்டுயிர்களுக்கு சிகிச்சையளிக்கவும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 130 ஏக்கர் பரப்பளவில் வனவிலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தை தமிழ்நாடு வனத்துறை அமைத்துள்ளது.
யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட எந்த வகையான காட்டுயிர் மற்றும் பறவைகளையும் இங்கே கொண்டு வந்து சிகிச்சை அளித்து அவற்றை இடமாற்றம் செய்வதற்கான வசதிகள் இருப்பதாக வனத்துறையினர் உறுதியளிக்கின்றனர்.
கட்டமைப்பை மட்டும் ஏற்படுத்தாமல் இதற்குத் தேவையான வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் வன ஊழியர்களை போதிய அளவில் நியமிக்க வேண்டுமென்று காட்டுயிர் ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வனவிலங்குகளுக்கு அதிநவீன முறையில் சிகிச்சையளித்து அவற்றின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், வெளிநாட்டு காட்டுயிர் சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு, இங்குள்ள வன கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.
வனவிலங்கு சிகிச்சை மையம் ஏன்?
சமீபத்தில் நீலகிரி மாவட்டம் கூடலுாரிலிருந்தும், கோவை மாவட்டம் தொண்டாமுத்துாரிலிருந்தும் வனத்துறையால் பிடிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்ட 2 காட்டு யானைகள் (ராதாகிருஷ்ணன், ரோலக்ஸ் என்று மக்களால் பெயரிடப்பட்ட யானைகள்) சில நாட்களில் உயிரிழந்தன. அப்போது வனத்துறை மீதும், வன கால்நடை மருத்துவர்கள் மீதும் காட்டுயிர் ஆர்வலர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் கோவை வனக்கோட்டத்துக்குட்பட்ட சிறுமுகை வனச்சரகத்திலுள்ள பெத்திக்குட்டை என்ற இடத்தில் வனவிலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்பட்டது. ரூ.19.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் 130 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த மையத்தில் காட்டுயிர்களுக்கு தேவையான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. பெரிய மற்றும் சிறிய யானைகளை அடைப்பதற்கான பலம் வாய்ந்த கரால் (யானைகளை தற்காலிகமாக அடைக்க பயன்படுத்தப்படுவது), பிற வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான கூண்டுகள் என மொத்தம் 17 தனித்துவமான விலங்கு தடுப்பிடங்கள் அங்கு உள்ளன. பெரும்பாலான கூண்டுகள், பலமான இரும்பால் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையம் செயல்படுவதற்குத் தயார் நிலையில் இருப்பதாக பிபிசி தமிழிடம் கூறினார் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ்.
தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ பேசுகையில், ''தமிழ்நாட்டில் இத்தகைய தனித்துவமான வசதிகளுள்ள வனவிலங்கு மீட்பு மையம் உருவாக்கப்படுவது இதுதான் முதல்முறை. இந்திய காட்டுயிர் அறக்கட்டளை (Wildlife Trust of India) வடிவமைத்துள்ள இந்த மையம், காட்டுயிர் மற்றும் மனிதர்கள் வாழும் பகுதிகளில் இரு தரப்புக்கும் இடையிலான தொடர்புகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.'' என்று கூறியுள்ளார்.
காட்டுயிர்களை இடமாற்றம் செய்யும் போதும், சிகிச்சையளிக்கும் போதும் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கில் துவக்கப்பட்டுள்ள இந்த மையம், மிகச்சிறப்பான ஒரு நடவடிக்கை என்கிறார் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவத்துறை கூடுதல் இயக்குநரும், வனவிலங்குகள் மீட்பு நடவடிக்கைகளில் 30 ஆண்டுகள் அனுபவம் உடையவருமான மனோகரன். மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் செயல்படும் யானைகள் திட்டத்தின் உயர்மட்டக்குழுவின் உறுப்பினராகவும் இவர் உள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய வன கால்நடை மருத்துவ நிபுணர் மனோகரன், ''மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காட்டுயிர்களை மீட்டுப் பாதுகாப்பதற்கான மையங்கள் உள்ளன. ஆனால், அதிலிருந்து மாறுபட்ட யோசனையுடன் காட்டுயிர்களை இடமாற்றம் செய்யும்போதும், காயமடையும்போதும் சிகிச்சையளித்து அவற்றை காட்டிலேயே மீண்டும் சேர்க்க வேண்டுமென்பதுதான் இந்த மையம் அமைக்கப்பட்டதன் முதல் நோக்கம். அந்த வகையில் இந்த மையம், நாட்டிலேயே முன்மாதிரி.'' என்றார்.
''மனித–காட்டுயிர் மோதல் அல்ல; தொடர்புகள் அதிகரிப்பு''
மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலை ஆகியவற்றுக்கு மையமாகவுள்ள பெத்திக்குட்டை பகுதியில் இந்த மையத்தை அமைத்தது சரியான முடிவு என்கிறார் மனோகரன். இந்த மையம் அதிகளவிலான யானைகள் மற்றும் காட்டுயிர்கள் வாழும் வனப்பகுதிக்கு அருகில் இருப்பதால், மையத்தைச் சுற்றிலும் அகழி அமைக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து சோலார் தொங்கு வேலியும் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ளது.
''தற்போதுள்ள சூழ்நிலையில் மனித–காட்டுயிர் மோதல் என்பதை விட, மனித–காட்டுயிர் தொடர்புகள் அதிகம் என்றுதான் கருத்தில் கொள்ள வேண்டும். மனித குடியிருப்புகள் விரிவடையும் நிலையில், இந்தத் தொடர்பு தவிர்க்க முடியாததாகிறது. கோவை கீரநத்தம் ஐடி பார்க் பகுதியில் 3 காட்டு யானைகள் வந்ததும், நாகப்பட்டினத்தில் சிறுத்தை வந்ததும் இப்படித்தான்.'' என்கிறார் வன கால்நடை மருத்துவ நிபுணர் மனோகரன்.
பெயர் கூற விரும்பாத வன கால்நடை மருத்துவர், ''இதற்கு முன்பாக அந்தந்தப் பகுதியிலுள்ள வனத்துறை அலுவலகங்களில் வைத்து, காயம்பட்ட காட்டுயிர்களுக்கு சிகிச்சை அளிப்போம். அதை அங்கே பாதுகாப்பதும் சிரமம். அதற்கான வசதிகள், மருத்துவ ஆய்வகங்கள், மருந்துகள் எல்லாவற்றுக்கும் வெளியிடங்களை நாட வேண்டும். அதன் காரணமாக சில காட்டுயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மையத்தில் எல்லா வசதிகளும் இருப்பதால் அங்கே கொண்டு போனால் எந்த காட்டுயிரையும் காப்பாற்ற முடியும்.'' என்றார்.
போதிய பணியாளர்களை நியமிக்க கோரிக்கை
சிறுமுகை வனவிலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம் திறக்கப்பட்ட பின்பு, இதுவரை அங்கு எந்த வனவிலங்கும் சிகிச்சைக்காக சேர்க்கப்படவில்லை. இடமாற்றம் தொடர்பான பணிக்கும் மையத்தின் உதவி கோரப்படவில்லை. கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருப்பினும் இந்த மையம் முழு வீச்சில் செயல்படுவதற்குத் தேவையான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய காட்டுயிர் ஆர்வலர் மேக் மோகன், ''உண்மையிலேயே இந்த மையம் அமைக்கப்பட்டது வரவேற்கத்தக்க முயற்சி. இன்றைய நிலையில் இதன் தேவையும் அதிகம். ஆனால், எங்களுடைய அச்சமெல்லாம் இந்த மையத்துக்குத் தேவையான அளவுக்கு வனகால்நடை மருத்துவர்களையும், பிற வன அலுவலர்களையும் வனத்துறை நியமிக்குமா என்பதுதான். வெறும் கட்டமைப்பை மட்டும் வைத்துக் கொண்டு இந்த மையத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாது.'' என்றார்.
ஆனால், இப்போதே மையம் செயல்படுவதற்குத் தயார் நிலையில் இருப்பதாக பிபிசி தமிழிடம் கூறிய ஆனைமலை புலிகள் காப்பகத்தின் களஇயக்குநரும், கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலருமான வெங்கடேஷ், எந்த வகையான வனவிலங்குக்கும் சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளும், வசதிகளும் மையத்தில் உள்ளன என்றார். அதனால் மையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
சிறுமுகை வனவிலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தின் வனகால்நடை மருத்துவர் விஜயராகவன், ''அறுவை சிகிச்சை அரங்கு, அதற்குரிய பணியாளர்கள், மருந்துகள் எல்லாமே தயார் நிலையில் உள்ளன. ஒரு சில பரிசோதனைகளைத் தவிர, பெரும்பாலான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான ஆய்வகங்களும் இங்குள்ளன. அதற்குரிய பணியாளர்களும் இருக்கின்றனர்.'' என்றார்.
''யானை, புலி, சிறுத்தை மட்டுமின்றி, சிறிய வனவிலங்குகள், பறவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படும். அதேபோன்று, தமிழகத்தில் எந்தப் பகுதியில் ஒரு வனவிலங்குக்கு காயம்பட்டிருந்தாலும் அவற்றை இங்கே கொண்டு வந்து சிகிச்சை அளித்து குணமளித்து மீண்டும் அதே இடங்களில் விடுவதற்கும் வசதிகள் உள்ளன.'' என்றார் வன கால்நடை மருத்துவர் விஜயராகவன்.
யானைகள் வழித்தடம் மீட்பு உள்ளிட்ட பல்வேறு பொதுநல மனுக்களை தாக்கல் செய்து நடத்தி வரும் காட்டுயிர் ஆர்வலர் முரளீதரன், இந்த மையம் திறக்கப்பட்டதை வரவேற்கும் அதேநேரத்தில் இந்த மையத்தில் காட்டுயிர் சிகிச்சையில் சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற வன கால்நடை மருத்துவர்களை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைக்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய முரளீதரன், ''தமிழகத்தில் இடமாற்றம் மற்றும் மீட்புப்பணிகளின்போது, யானைகள் உள்ளிட்ட காட்டுயிர்கள் இறந்துள்ளன. இதைத்தடுக்க வேண்டுமெனில், இங்குள்ள வன கால்நடை மருத்துவர்களுக்கு தாய்லாந்து போன்ற யானை, புலி சிறுத்தைகளில் முன்னோடியாகவுள்ள மருத்துவர்களைக் கொண்டு பயிற்சியளிக்க வேண்டும். வெளிநாட்டு வன கால்நடை மருத்துவர்களை கொண்டு வெவ்வேறு விதமான காட்டுயிர்களுக்கான சிகிச்சை முறைகளைக் கற்றுத்தர வேண்டும்.'' என்கிறார்.
மையத்திற்குத் தேவையான வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்கள் நியமனம் குறித்து பிபிசி தமிழ் முன் வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், ''மையத்துக்கான வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் அவருக்கு உதவியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள், வனச்சரக அலுவலர், வன அலுவலர், ஓட்டுநர்கள் என பலரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மையம் இப்போதே முழுமையாக செயல்படத் தயாராக உள்ளது. எதிர்காலத்தில் மையத்தின் தேவைகளின் அடிப்படையில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு