You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓட்டுநரே இல்லாமல் 70கி.மீ வேகத்தில் சென்ற சரக்கு ரயில் – காணொளி
ஓட்டுநரே இல்லாமல் 70கி.மீ வேகத்தில் ஒரு சரக்கு ரயில் சீறிப்பாய்ந்த காட்சி இது.
ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் இருந்து பஞ்சாப் வரை சரக்கு ரயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமலேயே ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் திரைப்படமான அன் ஸ்டாப்பிள் பாணியில், ஞாயிறுக்கிழமை காலையில் இந்த சம்பவம் அரங்கேறியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கபப்ட்டதாகவும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது பிடிஐ செய்தி முகமையின்படி, ஜம்மு காஷ்மீரின் கத்துவாவிற்கு 53 பெட்டிகள் மற்றும் 2 எஞ்சின்களை கொண்ட சரக்கு ரயில் காலை 7:30 மணியளவில் வந்தடைந்தது.
ஏற்கனவே ரயிலில் இருந்த ஓட்டுநர்கள் பணியை முடித்துக்கொண்டு கத்துவாவில் இறங்கியதால் வேறு ஓட்டுநர்களைக் கொண்டு ரயில் பஞ்சாப் செல்லவிருந்தது. ஓட்டுநர்கள் ரயிலை விட்டு இறங்கியபோது ஹேண்ட் பிரேக் முறையாக போடப்படவில்லை என கூறப்படுகிறது.
ஜம்மு ஜலந்தர் பிரிவில் சாய்வான பாதையில் ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் எதிர்பாராதவிதமாக ஓட்டுநர்கள் இல்லாமேலெயே ரயில் புறப்பட்டுச் சென்றது. 70 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் ரயில் பயணித்ததால், ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர்.
ஜலந்தரைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி அஷோக் குமார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் ரயில் பயணிக்கும் மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில்வே கிராஸிங்குகளும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டது என்றார்.
காலை 7:25 மணி முதல் 9:00 மணி வரை கற்களை ஏற்றிக்கொண்டு சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் வரை தானாக பயணித்த சரக்கு ரயிலை பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்திஹ்ல் உள்ள ஊஞ்சி பஸ்ஸி அருகே மணல் மூட்டைகள் மற்றும் மரக்கட்டைகள் உதவியுடன் நிறுத்தியதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.
இந்த சம்வத்தால் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும், இந்த சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வேத்துறை அதிகாரி ப்ரதீக் ஸ்ரீவஸ்தவவை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)