You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரை நூற்றாண்டில் 10,000 பாடல்கள் பாடிய டி.எம்.எஸ் எப்படி சினிமாவுக்குள் வந்தார் தெரியுமா?
தமிழ் சினிமா வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை அவர் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார்.
டிஎம்எஸ் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவருடைய நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தவெளி வெளிவட்ட சாலை பகுதிக்கு `டி.எம்.சௌந்தரராஜன் சாலை` எனப் பெயர் சூட்டுகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது குறித்த அரசாணை ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கிறது.
டி.எம்.எஸ். சினிமாவுக்குள் வந்தது எப்படி?
டி.எம்.சௌந்திரராஜன் மதுரையில் 1922ஆம் ஆண்டு, மார்ச் 24ஆம் தேதி பிறந்தார். அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த காரைக்குடி ராஜாமணி ஐங்காரிடம் இசை பயிற்சி பெற்ற டி.எம்.எஸ், மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார். கச்சேரிகளில் தனது தனித்துவமான குரல் வளத்தால் மக்களைக் கவர்ந்து வந்த டி.எம்.சௌந்தரராஜனுக்கு, 1950ஆம் ஆண்டு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
`ராதே என்னை விட்டுப் போகாதடி` என்று கிருஷ்ணவிஜயம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல், டி.எம். சௌந்திரராஜனின் முதல் திரையுலகப் பாடலாக அமைந்தது. அதைத் தொடர்ந்து மந்திர குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற பல படங்களில் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன.
டி.எம். எஸ் அவர்களின் குரல் வளத்துடன், அவரது உச்சரிப்பும் மக்களிடையே பிரபலமடைந்தது. பாடல் பாடுவதோடு சில படங்களில் கதாநாயகனாகவும் தோன்றினார் டி.எம்.சௌந்திரராஜன். 1960களில் வெளியான பட்டினத்தார், அருணகிரி நாதர் போன்ற படங்களில் அவர் நடித்திருந்தார். இதில் மிக குறிப்பாக அருணகிரி நாதர் திரைப்படத்தில் இவர் பாடிய, ”முத்தைத்தரு பக்தித் திருநகை” பாடல் இன்றைய தலைமுறையினர் வரை சிறந்த பாடலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கதாநாயகர்களுக்கு ஏற்ப குரலை மாற்றும் டி.எம்.எஸ்.
டி.எம். சௌந்திரராஜனின் மற்றொரு தனி அடையாளமாகக் கூறப்படுவது, ஒவ்வொரு கதாநாயகர்களுக்கும் ஏற்ப தனது குரலை மாற்றி பாடுவார் என்பதுதான்.
அவரது குரலை தீவிரமாக கவனிக்கும் ரசிகர்கள், ஒரு பாடலில் அவர் எடுத்திருக்கும் குரல் மூலமாகவே, அது அவர் எம்.ஜி.ஆருக்கு பாடிய பாடலா அல்லது சிவாஜிக்குப் பாடிய பாடலா என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று கூறுகின்றனர் இசை ஆர்வலர்கள்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் தொடங்கி எழுபதுகளில் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ஒருதலை ராகம் திரைப்படத்தின் நாயகன் வரை, பல்வேறு தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார் டி.எம்.சௌந்திரராஜன். ஒவ்வொரு கதாநாயகர்களுக்கு பாடல் பாடும்போதும், அவர்களது குரலுக்கு ஏற்றவாறு தனது குரலை அவர் மாற்றியமைத்துக் கொண்டது, மற்ற பாடகர்களிடமிருந்து அவரை தனித்துவமாக விளங்கச் செய்தது.
பாசமலர் திரைப்படத்தின் ’மலர்ந்தும் மலராத பாடல்’, பாலும் பழமும் படத்தின் 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’, திருவிளையாடல் படத்தின் ‘பாட்டும் நானே பாவமும் நானே’, படகோட்டி படத்தின் ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்’ என அவர் முத்திரை பதித்த பாடல்களின் பட்டியல் நீள்கிறது.
11 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடலை பாடியிருக்கும் டி.எம்.எஸ்., ஆயிரத்திற்கும் மேலான பக்தி பாடல்களுக்கு சுயமாக இசையமைத்துப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து. இவர் பாடிய பக்தி பாடல்கள் இன்று வரை தமிழ்நாட்டின் அனைத்து கோயில்களிலும் திருவிழாக்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ் கடவுளாக அறியப்படும் முருகனுக்கு இவர் பாடிய பாடல்கள் மிகப் பிரபலமானவை.
டி.எம்.எஸ் இசை பயணம்:
1955 ஆம் ஆண்டிலிருந்து 80களின் காலகட்டம் வரை டி.எம்.சௌந்திரராஜன் புகழின் உச்சியில் இருந்ததாக மூத்த சினிமா பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
கிட்டதட்ட 65 ஆண்டுகள் அவர் திரையுலகில் தன்னுடைய இசை பயணத்தைத் தொடர்ந்து வந்தார். தன்னுடைய தனித்துவமான இசைப் பயணத்தில், இவர் செய்த சாதனைக்காக பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகள் இவருக்குக் கிடைத்துள்ளன.
இது தவிர கலா ரத்னம், கான ரத்னம், அருள் இசை சித்தர், நவரச பவ நளின கான வர்ஷினி, ஞானாமிர்த வர்ஷினி, சாதனை சக்கரவர்த்தி, பாரதிய இசை மேகம், கான குரலோன் போன்ற பட்டங்களும் அவருக்கு ரசிகர்களால் சூட்டப்பட்டது.
டி.எம்.சௌந்திர ராஜனின் இசைப் பயணத்தில் கவிஞர் கண்ணதாசனின் பங்கும் மிகப்பெரிய அளவில் இருந்தது. டி.எம்.எஸ்ஸின் பாடல்களுக்கு, கண்ணதாசனின் பாடல் வரிகள் பலமாக அமைந்தன. அவரது பாடல்கள் வெற்றி பெறுவதற்கு அது மற்றுமொரு காரணமாக இருந்தது.
2002ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக டி.எம்.எஸ். நியமிக்கப்பட்டார். 24 வயதில் திரையுலகில் பாடத்துவங்கிய இவர், தன்னுடைய 88வது வயது வரை பாடி வந்தார்.
ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான ’செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடலில், மற்ற இளம் பாடகர்களுடன் இணைந்து டி.எம்.எஸ் பாடியிருந்தார். அதுவே அவர் பாடிய கடைசி பாடல் என கூறப்படுகிறது.
2013ஆம் ஆண்டு, தன்னுடைய 91வது வயதில் சென்னையில் இருக்கும் அவரது வீட்டில், வயது மூப்பு காரணமாக காலமானார் டி.எம். சௌந்தரராஜன். தன்னுடைய இறுதி காலம் வரை சென்னை மந்தவெளி பகுதியில்தான் அவர் வசித்து வந்தார். அதன் காரணமாகவே தற்போது அவரது பெயரை சென்னை மந்தவெளி வட்டவெளி சாலைக்கு சூட்டுகிறது தமிழக அரசு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்