You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத்தில் போலி சான்றிதழ் மூலம் மருத்துவரானவர் 43 ஆண்டுக்குப் பிறகு போலி என நிரூபணமானது எப்படி?
- எழுதியவர், லக்ஷ்மி படேல்
- பதவி, பிபிசி குஜராத்தி
மனிதர்களான நமக்கு உடலில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ, உடனடியாக மருத்துவரை நாடுகிறோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துரைகளையும், வழிமுறைகளையும் நம்பி பின்பற்றுகிறோம்.
அப்படி பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு பல ஆண்டுகளாக சிகிச்சையளித்த மருத்துவர் ஒருவர் போலி என தெரிய வந்தால் அடுத்து என்ன நடக்கும்?
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இதுபோன்ற ஒரு வழக்கு நடந்துள்ளது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
17 வயதில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்காக பன்னிரெண்டாம் வகுப்பின் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்து டாக்டரானவர் மாட்டியது எப்படி? 41 வருடங்கள் மற்றும் 10 மாதங்களாக நடைபெற்ற வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதம், பிரதிவாதங்கள் என்னென்ன?
யார் இந்த 'போலி மருத்துவர்' எப்படி தேர்ச்சி அடைந்தார், நீதிமன்றத்தில் அவருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது?
போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ சேர்க்கை
1980ஆம் ஆண்டு ஜூலை மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள பி.ஜே. மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்காக 2 விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தார், 17 வயதான உத்பால் அம்புபாய் படேல் .
அதில் ஒரு விண்ணப்பத்தில் அவர் 48.44% மதிபெண்கள் பெற்று இருந்த மதிப்பெண் சான்றிதழை இணைத்திருந்தார் உத்பால்.
ஆனால் அவரது அந்த விண்ணப்பம் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. அப்போது நடைமுறையில் இருந்த விதிகளின்படி மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 55% மதிபெண்கள் பெற்று இருக்க வேண்டும்.
முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, உத்பால் மீண்டும் ஒரு விண்ணப்பத்தை சமர்பித்தார். அதில் புதிய மதிபெண் சான்றிதழ் சேர்க்கப்பட்டிருந்தது.
புதிய மதிப்பெண் சான்றிதழ் 68% சதவீத மதிப்பெண்களை உத்பால் பெற்றுள்ளதாக தெரிவித்தது. அதன் அடிப்படையில் அவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு மருத்துவ படிப்பில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
மெரிட் பட்டியலில் 114வது இடத்தை பிடித்த உத்பால், எம்பிபிஎஸ் படிப்பில் முதலாமாண்டில் சேர்ந்தார்.
போலி மதிப்பெண் சான்றிதழ் - எப்படி மாட்டினார்?
மாணவர் சேர்க்கை கிடைத்த பிறகும், உத்பாலுக்கு சில சிக்கல் நீடித்தது. அவர் கல்லூரியில் சேர விண்ணப்பித்த மதிப்பெண் பட்டியல் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால், அப்போதைய கல்லூரி முதல்வரால் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இது தொடர்பான விசாரணை நடக்கும் போதே, தனது கல்லூரி படிப்பை முடித்து மருத்துவராக பணி செய்யத் தொடங்கினார் உத்பால் படேல்.
கல்லூரி நிர்வாகம் நடத்திய விசாரணையில், உத்பால் எம்பிபிஎஸ் படிப்பில் சேர கொடுத்த மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்றும், அவர் குறைந்த மதிப்பெண்களை மட்டுமே எடுத்திருந்தார் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலி ஆவணங்களை கொடுத்து மருத்துவப் படிப்பில் சேர்ந்ததற்காக உத்பால் மீது கல்லூரி நிர்வாகம் சார்பாக காவல்துறையில் 1991ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டு, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 9 சாட்சிகள் மற்றும் 39 ஆவண ஆதாரங்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர், போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்ததாக நீதிமன்றம் கூறியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மருத்துவருக்கு 61 வயதாகும்போது, அதாவது சம்பவம் நடந்து 43 ஆண்டுகளுக்குப் பிறகு, கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் பவன்குமார் எம். நவீன், இந்த வழக்கில் உத்பாலுக்கு தண்டனை வழங்கினார்.
43 ஆண்டுக்குப் பிறகு போலி என நிரூபணம் ஆனது எப்படி?
“இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் செயலால், தகுதியான மற்றொரு மாணவரில் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீவிரமான தண்டனை வழங்கப்படாமல் விட்டால் அது கல்விக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்” என்று அரசு தரப்பில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
“குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிய தகுதி இல்லாத நிலையில், அவரின் செயலால் மற்றொரு தகுதி வாய்ந்த நபரின் இடம் பறிபோய் உள்ளது.இது சமூகத்திற்கு எதிரான செயல். இதுபோன்ற வழக்குகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வது நீதிமன்றத்தின் கடமை,” நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
இந்த வழக்கு விவரம் குறித்து பிபிசியிடம் பேசிய அரசு வழக்கறிஞர் பிரஜாபதி, “12வது அறிவியல் தேர்வில் உத்பால் படேல் 48 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார். அதன்பின், மருத்துவக் கல்லூரியில் சேர, போலியாக மற்றொரு மதிப்பெண் சான்றிதழை தயாரித்துள்ளார். இந்த வழக்கில் சாட்சிகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட 39 ஆவணங்கள் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது."
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மற்ற வாதங்கள் குறித்து அவர் பேசுகையில், “ஒரு மருத்துவரின் பதவி சமூகத்தில் மதிப்புமிக்கது என்று நாங்கள் வாதிட்டோம். எனவே இந்த வழக்கில் முன்மாதிரியான நடவடிக்கை எடுத்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவருக்கு வயதாகிவிட்டதால் அவரை விடுவிக்க முடியாது.”
போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த குற்றத்திற்காக உத்பால் படேலுக்கு மூன்று பிரிவுகளின் கீழ் தலா பத்தாயிரம் அபராதமும், மூன்றாண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)