You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்த மகளை தந்தை உடனே குதித்து காப்பாற்றிய காட்சி
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், 14 தளங்கள் கொண்ட டிஸ்னி சொகுசுக் கப்பலின் நான்காவது தளத்திலிருந்து தவறி விழுந்த மகளைக் காப்பாற்ற அவரது தந்தை கடலில் குதித்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
மீட்புப் படகு மூலம் இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட போது பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதை சமூக ஊடக காணொளிகள் காட்டுகின்றன. 10 நிமிடங்கள் தண்ணீரில் மிதந்த அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
கப்பலின் நான்காவது மாடியில் இருந்தபடி சிறுமியின் தந்தை புகைப்படம் எடுத்தபோது, சிறுமி தவறி விழுந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். கப்பலில் உடனே எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டது. கடலில் விழுந்த தந்தை - மகளை மீட்க குழுவினர் விரைந்தனர்.
"கப்பல் வேகமாக நகர்ந்தது, மிக விரைவாக, மக்கள் கடலில் சிறிய புள்ளிகளாக மாறிப் போயினர். பின்னர் நீங்கள் அவர்களைப் பார்க்காமல் போய்விட்டீர்கள்," என்று பயணி லாரா அமடோர் கூறினார்.
"கேப்டன் கப்பலின் வேகத்தைக் குறைத்து அதைத் திருப்பினார், பின்னர் தந்தை-மகளை அழைத்து வர ஒரு படகை அனுப்பினர், அவர்கள் தந்தையையும் மகளையும் மீட்பதை நாங்கள் கண்டோம்," என்று அவர் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்-சிடம் கூறினார்.
4,000 பேர் பயணிக்கக் கூடிய டிஸ்னி டிரீம், பஹாமாஸைச் சுற்றி 4 நாட்கள் பயணம் செய்துவிட்டு, புளோரிடாவின் ஃபோர்ட் லாடர்டேலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
இரண்டு பயணிகள் மீட்கப்பட்டதாக டிஸ்னி ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது, ஆனால் என்ன நடந்தது என்பது குறித்து சில விவரங்களை மட்டுமே வழங்கியது.
"டிஸ்னி டிரீமில் இருந்த குழுவினர் இரண்டு விருந்தினர்களை தண்ணீரில் இருந்து விரைவாக மீட்டனர்" என்று டிஸ்னி குரூஸ் லைன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
"எங்கள் குழு உறுப்பினர்களின் திறமைகள் மற்றும் உடனடி நடவடிக்கைகளுக்காக நாங்கள் பாராட்டுகிறோம், இது இரண்டு விருந்தினர்களும் சில நிமிடங்களில் கப்பலுக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்தது." என்று அவர் கூறினார்.
"நாங்கள் அதைப் பார்த்தோம். மிக்சிறிய இரண்டு புள்ளிகளைப் போலவே தெரிந்தது. அது பைத்தியக்காரத்தனமாக இருந்தது, அது பயங்கரமானது," என்று பயணி கார் ஃபிரான்ட்ஸ் என்.பி.சி. செய்தி நிறுவனத்திடம் கூறினார், இருவரும் கடலுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட அடிவானத்தில் மறைந்து போவதை அவர் எவ்வாறு கண்டார் என்பதை விவரித்தார்.
இந்த சம்பவம் டிஸ்னி சொகுசுக் கப்பல் பயணத்தின் கடைசி நாளில் நடந்தது. கப்பல் வழக்கம் போல் புளோரிடாவில் உள்ள துறைமுகத்திற்குத் திரும்பியது.
கப்பல்களில் இருந்து பயணிகள் விழுவது அரிதானது என்றாலும், மீட்புப் பணிகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை.
2019ஆம் ஆண்டு குரூயிஸ் லைன்ஸ் சர்வதேச சங்க அறிக்கையின்படி, அந்த ஆண்டு 25 பேர் கப்பல்களில் இருந்து கடலில் விழுந்தனர். அவர்களில் ஒன்பது பேர் மட்டுமே தண்ணீரில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.
முழு விவரம் வீடியோவில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு