ஜம்மு-காஷ்மீர்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல் - கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்

செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும், ஹரியாணாவில் அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மாநில அந்தஸ்து குறித்த பிரச்னையைக் கிளப்பியுள்ளன.

காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் வலியுறுத்தியுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் அறிவிப்பை வரவேற்றுள்ள நிலையில், "கடந்த 10 ஆண்டுகளில், ஜம்மு-காஷ்மீரில் அமைதி, வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் புதிய சகாப்தத்தை அரசாங்கம் பல அயராத முயற்சிகள் மூலம் தொடங்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் மூலம் இது மேலும் வலுப்பெறும். ஜனநாயகத்தின் வேர்கள், பிராந்தியத்திற்கான வளர்ச்சியின் புதிய சகாப்தத்திற்கான கதவைத் திறக்கின்றன” எனத் தெரிவித்தார்.

"ஜம்மு-காஷ்மீர் மக்கள் தேர்தலில் தீவிரமாகப் பங்கேற்கவும், அமைதி மற்றும் வளர்ச்சியைப் பராமரிக்கவும், இளைஞர்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் ஓர் அரசாங்கத்தை அமைக்க அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எதிர்க்கட்சிகள் கூறியது என்ன?

ஜம்மு காஷ்மீரில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், அங்கு அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது.

ஆகஸ்ட் 5, 2019 அன்று, சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததன் மூலம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

அப்போதிருந்து, பள்ளத்தாக்கின் முக்கியக் கட்சிகள் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோரி வருகின்றன.

தற்போது தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முழு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் மீண்டும் வலியுறுத்தின.

தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறுகையில் , "நாங்கள் மாநில அந்தஸ்து வரவேண்டும் என வலியுறுத்துகிறோம். தேசிய மாநாட்டுக் கட்சி மட்டுமல்ல, ஜம்மு-காஷ்மீரின் அனைத்துக் கட்சிகளும் இது நடக்க வேண்டும் என்று விரும்புகின்றன. மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பது இந்திய அரசின் வாக்குறுதியாக உள்ளது,” என்றார்.

இம்முறை தேர்தலில்தான் போட்டியிடப் போவதில்லை என அவர் கூறினார். “ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைத்ததும், நான் என் பதவியை விட்டு விலகி, எனக்குப் பதிலாக உமர் அப்துல்லா தேர்தலில் போட்டியிடுவார்” என்றும் அவர் கூறினார்.

மறுபுறம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீர் முழு மாநில அந்தஸ்தைப் பெற இன்னும் காத்திருக்கிறது. மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகள், துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களை மேலும் அதிகரித்து, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரங்களைக் கேலி செய்கிறது” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறுகையில், "சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோதி ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' என்று பேசினார். அவர்களால் நான்கு மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியவில்லை, இரண்டு மாநிலங்களில் மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மெகபூபா முஃப்தியின் மகள் என்ன சொன்னார்?

மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி கூறுகையில், "நாங்கள் தேர்தலை வரவேற்கிறோம் ஆனால் சில கேள்விகள் உள்ளன... அரை தன்னாட்சி மாநிலமாக இருந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளோம் என்பதை நாங்கள் அறிவோம்” என்றார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நடத்த வேண்டிய தேர்தல் ஏன் இவ்வளவு காலதாமதமாக நடத்தப்படுவதாக அவர் கேள்வி எழுப்பினார்.

"பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஒவ்வொரு பிரிவினரும் இங்கு அதிகாரிகள் ஆட்சி செய்வதால் சிரமப்படுகின்றனர். மேலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் இங்கு வைஸ்ராய்கள் போலப் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு அரசியல் பொறுப்பு இல்லை” என அவர் கூறினார்.

"சிறப்பு அந்தஸ்து உள்ள மாநிலத்தில் தேர்தலை நடத்துவதன் நீங்கள் நன்மை செய்வதாகக் காட்ட முனைகிறீர்கள். நீங்கள் எந்த உதவியும் செய்யவில்லை. தேர்தல்கள் எந்தவொரு வலுவான ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்” என்று அவர் கூறினார்.

பள்ளத்தாக்கின் சில அரசியல் கட்சிகளும் தேர்தல் தேதி அறிவிப்பை வரவேற்றுள்ளன.

முன்னதாக காங்கிரஸில் முன்பு இருந்த ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்கும் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது எனக் கூறினார்.

தேர்தலின்போது வாக்காளர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

“வாக்காளர்கள், தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரசாரம் செய்பவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என முழுமையாக நம்புகிறோம்” என்றார்.

பிடிபி தலைவர் முகமது இக்பால் கூறுகையில், மக்களவைத் தேர்தலில் மக்கள் எப்படி ஆர்வத்துடன் பங்கேற்றார்களோ, அதேபோல் சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் பங்கேற்பார்கள் என நம்புகிறோம்” எனக் கூறினார்.

அரசியல் குழப்பம்

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆனால், மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பிடிபி அதிகபட்சமாக 28 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றன.

மெகபூபா முஃப்தி பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார். ஆனால் இரு கட்சிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக அந்த அரசால் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ய முடியவில்லை.

மெகபூபா முஃப்தி 19 ஜூன் 2018 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முஃப்தியின் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்த முடியாததால், துணைநிலை ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு, மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையைப் பலமுறை எழுப்பியும், தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஜம்மு-காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன. மேலும் மாநிலத்தின் அரசியல் கட்சிகளும் துணைநிலை ஆளுநர் ஆட்சியை அரசாங்கம் பலமுறை நீட்டிப்பதாகக் குற்றம் சாட்டின.

ஜம்மு காஷ்மீரில் தற்போது எந்தவொரு அரசியல் கட்சியும் கூட்டணியில் இல்லை. இருப்பினும் தேசிய அளவிலான ‘இந்தியா’ கூட்டணியில் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரஸும் இடம்பெற்றுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் முழு மாநில அந்தஸ்து விவகாரம்

ஆகஸ்ட் 5, 2019 அன்று, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொலைபேசி நெட்வர்க் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டன.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்து வைக்கப்பட்டனர், கைது செய்யப்பட்டனர் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் பல லட்சம் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். 2ஜி இணையம் சில மாதங்களுக்குப் பிறகு ஜனவரி 2020இல் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது, அதேநேரத்தில் 4ஜி இணையம் பிப்ரவரி 2021இல் செயல்பாட்டுக்கு வந்தது.

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, அதை எதிர்த்து உச்சநீதிமன்றங்களில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆகஸ்ட் 2019இல், உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்பியது.

டிசம்பர் 2023இல், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவை ஒருமனதாக உறுதி செய்தது.

ஆனால் அதேநேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

'ஜம்மு-காஷ்மீர் விரைவில் முழு மாநில அந்தஸ்து பெற வேண்டும்' என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)