இரானில் முடிவுகளை எடுப்பது யார்? அதிபரா அல்லது புரட்சிகர காவல் படையா?

பட மூலாதாரம், EPA
- எழுதியவர், அமிர் அஸிமி
- பதவி, பிபிசி பாரசீக மொழி சேவை ஆசிரியர்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடுத்துள்ள போரின் முதல் தாக்குதல் நடந்ததிலிருந்து இரானின் முன் உள்ள மிகப்பெரிய கேள்வி, யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதுதான்.
அதிகாரப்பூர்வமாக பார்க்கையில் பதில் தெளிவாக இருக்கிறது.
மொஜ்தமா காமமெயி போர் தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று அவரின் தந்தை அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதி உயர் தலைவர் பொறுப்பை ஏற்றார். இஸ்லாமிய குடியரசு அமைப்பில் இந்தப் பதவி இறுதியானது. போர், அமைதி மற்றும் நாடு பயணிக்க வேண்டிய உத்தி சார் திசை என முக்கியமான அனைத்து விஷயங்களிலும் அவரின் சொல்லே இறுதியானது.
ஆனால் நடைமுறையில் அனைத்தும் வேறாக உள்ளது. இரானிய தலைமை முறிந்த நிலையில் உள்ளது என கூறும் டிரம்ப், அந்நாடு "ஒன்றுபட்ட முன்மொழிவை" வழங்க அமெரிக்கா காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
சமீபத்தில் இரானியர்களுக்கு அவர்களின் கைப்பேசியில் இரான் தலைவர்கள் செய்தி அனுப்பியபோது ஒற்றுமை என்பது அவர்களின் எண்ணங்களில் நிச்சயமாக இருந்தது.
"இரானில் தீவிர போக்கு கொண்டவர்கள் அல்லது மிதமான போக்கு கொண்டவர்கள் என யாரும் இல்லை - இங்கு ஒரே நாடு, ஒரே போக்கு மட்டுமே உள்ளது." என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
கண்ணுக்குத் தெரியாத தலைவர்
அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து மொஜ்தபா காமனெயியை பொதுவெளியில் யாரும் பார்த்ததே இல்லை. ஹோர்மூஸ் நீரிணை மூடியே இருக்கும் என வலியுறுத்திய அறிக்கை உட்பட சில எழுத்துப்பூர்வ அறிக்கைகளைத் தாண்டி அவரின் அன்றாட நடவடிக்கைகள் பற்றி எந்த நேரடியான ஆதாரமும் இல்லை.
முதல்கட்ட தாக்குதல்களில் அவர் காயமடைந்ததை இரான் அதிகாரிகள் ஒப்புக்கொண்ட நிலையில் குறைவான தகவல்கள் மட்டுமே வழங்கியுள்ளனர்.
இரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி தி நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அவருக்கு முகத்தில் உட்பட கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். அது அவர் பேசுவதைக் கடினமாக்கியிருக்கும்.
இந்த இல்லாமை முக்கியமானது. இரானின் அரசியல் அமைப்பில், அதிகாரம் என்பது நிறுவனமயப்படுத்தப்பட்டது மட்டுமல்ல,அது செயல்பாடு அடிப்படையிலுமானது.
மொஜ்தபா காமனெயியின் தந்தையான மறைந்த ஆயதுல்லா அலி காமனெயி பேச்சுக்கள், பொது வெளி தோற்றங்கள் மற்றும் பிரிவுகளுக்கு இடையேயான மத்தியஸ்தம் மூலம் தனது நோக்கங்களை வெளிப்படுத்தினார். அந்த வெளிப்பாடு தற்போது இல்லாமல் இருக்கிறது.
இது புரிதலில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. மொஜ்தபா காமனெயி போர்க்காலத்தில் அதிகாரத்துக்கு வந்திருப்பது தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அதிகாரத்தை நிறுவ அனுமதிக்கவில்லை என சிலர் வாதிடுகின்றனர். வேறு சிலர் அவரது காயங்கள் பற்றிய செய்திகளைச் சுட்டிக்காட்டி அவரால் அமைப்பைத் தொடர்ந்து நிர்வகிக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
எப்படிப் பார்த்தாலும் தற்போது முடிவெடுப்பது போருக்கு முன்பிருந்ததைவிட குறைவாக மையப்படுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ராஜீய தொடர்புகளின் நிலை என்ன?
சட்டப்படி ராஜீய நடவடிக்கைகள் என்பது அரசாங்கத்திடம் இருக்கிறது. இரான் அதிபர் மசூத் பெஷெக்சியனுக்கு கீழ், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகளில் இரானை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஆனால் இருவரும் உத்தியைத் தீர்மானிப்பதாக தெரியவில்லை மற்றும் இரான் குழுவை நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் கலிபாஃப் வழிநடத்துவது இருவரின் அதிகாரத்தை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது.
அராக்சியின் பங்கு வழிகாட்டும் ஒன்றாக அல்லாமல் வெறும் செயலாற்றுவதாக உள்ளது. ஹோர்மூஸ் நீரிணை திறந்திருக்கிறதா அல்லது மூடப்பட்டிருக்கிறதா என்கிற விவகாரத்தில், போக்குவரத்து தொடங்கிவிட்டது என முதலில் கூறிவிட்டு பின்னர் உடனடியாக அவர் பின்வாங்கியது ராணுவ முடிவுகளின் மீது ராஜீய நகர்வுகள் எவ்வளவு குறைந்த கட்டுப்பாடு கொண்டுள்ளது என்பது பற்றிய அரிதான பார்வையைக் காட்டுகிறது.
இந்த ஆட்சியின் பரந்துபட்ட திசையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பெஷெக்சியன் மிதமான போக்கு கொண்டவராக அறியப்படுகிறார். அவர் தற்போது வரை சுதந்திரமாக செயல்படுவதை தவிர்த்து வருகிறார்.
இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா உடன் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தடைபட்டது இந்தப் புள்ளியை மீண்டும் வலியுறுத்துகிறது. ராஜீய தொடர்புகள் திறந்தே இருந்தாலும் அதற்கு ஒப்புக்கொள்ள இரான் அமைப்பு தயாராக இல்லை அல்லது அதனால் முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
கட்டுப்பாட்டை அதிகரித்து வரும் ராணுவம்
ஹோர்மூஸ் நீரிணை மீதான கட்டுப்பாடுதான் இரானின் ஆதிக்கத்திற்கான ஆதாரமாக உள்ளது. ஆனால் அதனை மூடுவது தொடர்பான முடிவு ராஜீய குழுவிடம் அல்லாமல், அஹமது வாஹிதியால் வழிநடத்தப்படும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வசம் உள்ளது.
இது திரை மறைவில் இயங்குபவர்களின் கைகளில்தான் உண்மையான அதிகாரம் இருப்பதைக் காட்டுகிறது.
முந்தைய நெருக்கடிகளை போல் அல்லாமல், அடையாளம் காணக்கூடிய ஒற்றைத் தலைமை இல்லை. ஆனால் புதிய முறை ஒன்று உருவாகி வருகிறது. முதலில் நடவடிக்கை வருகிறது, அதன் பிறகு செய்தி வருகிறது. இவை எப்போதும் நிலையானதாக இல்லை.
நடைமுறையில் ஹோர்மூஸ் மூடலை அமல்படுத்துவது தொடங்கி வளைகுடா முழுவதும் இலக்குகளைத் தாக்குவது வரை அனைத்தும் புரட்சிகர காவல்படையின் நடவடிக்கைகளாகவே உள்ளன. இந்த நெருக்கடியின் வேகத்தை இவை தான் தீர்மானிக்கின்றன. அரசியல் மற்றும் ராஜீய வட்டாரங்கள் வழிநடத்துவதைவிட நடவடிக்கைகளைப் பின்பற்றவே செய்கின்றன.
இது நிர்வாகப் பிரிவுகள் செயலிழந்துவிட்டது எனக் காட்டுவதாக அர்த்தமாகாது. ஆனால் புரட்சிகர காவல்படையின் நிர்வாக சுயாட்சி, தெளிவான அரசியல் மத்தியஸ்தம் இல்லாத சூழலில், குறைந்தபட்சம் தற்காலிகமாக விரிவடைந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

பட மூலாதாரம், Reuters
முன்னிலை பெறும் கலிபாஃப்
இந்த தெளிவற்ற சூழலில் முகமது பாகர் கலிபாஃப் நுழைகிறார்.
புரட்சிகர காவல்படையின் முன்னாள் தளபதியான இவர் தற்போது நாடாளுமன்ற அவைத் தலைவராக இருக்கிறார். தற்போதைய நிகழ்வுகளின் முக்கியமான நபராக கலிபாஃப் உருவெடுத்துள்ளார். அவர் பேச்சுவார்த்தைகளுக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு பொதுமக்களிடம் உரையாற்றி வருகிறார். சமயங்களில் போரை சித்தாந்த அடிப்படையில் இல்லாமல் நடைமுறை அடிப்படையில் கட்டமைத்து வருகிறார்.
நாடாளுமன்றத்துக்குள்ளும் மற்றும் கடும்போக்கு அமைப்புகள் மத்தியில் பேச்சுவார்த்தைகளுக்கான எதிர்ப்பு வலுவாக இருந்து வருகிறது.
கடுமையான நிலைப்பாடு கொண்ட செய்தி பரப்பப்படுவது தீவிரமடைந்து வருகிறது. அரசு ஊடகங்கள் மற்றும் பொது பரப்புரைகள் ஆகியவை தொடர்ந்து பேச்சுவார்த்தைகள், நாட்டின் எதிரிகளுக்கு முன்னால் பலவீனத்தின் அறிகுறி என்றே கட்டமைக்கின்றன.
இந்த நிலையில் கலிபாஃபின் நிலை என்பது தற்போது சிக்கலானதாக உள்ளது. அவர் துடிப்பாக இருந்தாலும் தெளிவாக அதிகாரமளிக்கப்பட்டவர் போல இல்லை. தனது செயல்பாடுகள் மொஜ்தபா காமனெயியின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு இருப்பதாக அவர் கூறினாலும் நேரடி ஒருங்கிணைப்பிற்கான தெளிவான ஆதாரம் குறைவாகவே உள்ளது.
மேலிடத்திலிருந்து வரும் சமிக்ஞைகளைச் சார்ந்திருக்கும் அமைப்பில் இந்த தெளிவற்ற நிலை பல செய்திகளைச் சொல்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
இணக்கம் உண்மையில் இருக்கிறதா?
இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்ந்து பார்த்தால் செயல்பாட்டில் இருக்கும் அமைப்பு ஒன்று தெரிந்தாலும், அவை தெளிவாக வழிநடத்தப்படும் ஒன்றாக தெரிவதில்லை.
அதி உயர் தலைவரின் அதிகாரம் இருந்தாலும் அது வெளிப்படையாக பயன்படுத்தப்படுவதில்ல. அதிபர் பொறுப்பு வழிநடத்தும் ஒன்றாக இல்லை. ராஜீய முயற்சிகள் துடிப்புடன் இருந்தாலும் இறுதியான ஒன்றாக இல்லை. ராணுவத்திடம் முக்கியமான அதிகாரங்கள் இருந்தாலும் அதற்கு தெளிவான பொது கட்டமைப்பு இல்லை. அரசியல் தலைவர்கள் முன் வருகிறார்கள், ஆனால் சவாலுக்கு உள்ளாகாத நம்பகத்தன்மையுடன் அவர்கள் வருவதில்லை.
இது சரிவு இல்லை. இஸ்லாமிய குடியரசு அப்படியேதான் உள்ளது. ஆனால் நுட்பமான வேறொரு விஷயத்தை அது காட்டுகிறது. உதாரணத்திற்கு, தெளிவான அழுத்தம் நிலவும் சூழலில், தனக்கு உள்ள சாதகங்களைப் பயன்படுத்தி ஹோர்மூஸ் நீரிணையின் மூடலை ஒரு தெளிவான உத்தியாக மாற்ற முடியாமல் அது கஷ்டப்படுகிறது.
அது பல்வேறு முனைகளிலிருந்து செயல்பட்டாலும் தனது அதிகார மையங்களுக்கு தெளிவான திசையைக் காட்ட சிரம்ப்படுகிறது.
இரானின் அரசியல் அமைப்பில், சமிக்ஞை அனுப்புவதன் மூலமே இணக்கம் பேணப்படுகிறது.
தற்போதைக்கு இந்த அமைப்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டை நிறுவி எந்த தெளிவான பிளவையும் தவிர்த்து வருகிறது. ஆனால் இணக்கம் என்பது நிலைநிறுத்தப்பட்டுள்ளதா அல்லது அவ்வாறு காட்டப்படுகிறதா என்கிற கேள்வியை எழுப்புகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































