You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நான் அதிர்ஷ்டசாலி, ஆனால்...' - ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் நிலை என்ன?
கடந்த ஜூன் மாதம் ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்தவர்களில் விஸ்வாஸ்குமார் ரமேஷ் மட்டுமே உயிர் தப்பினார். அதே விமானத்தில் சில இருக்கைகள் தள்ளி இருந்த விஸ்வாஸ்குமாரின் தம்பி அஜயும் உயிரிழந்தார்.
அதன் பின், 39 வயதான இவர் உலகளவில் கவனம் பெற்றார். இந்த சம்பவத்தை அடுத்து இவருக்கு post-traumatic stress disorder இருப்பது கண்டறியப்பட்டது. சமீபத்தில் பிரிட்டனின் லெஸ்டரில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார்.
விஸ்வாஸ்குமாருடன் நேர்காணல் செய்ய அவரது ஆலோசகர்களில் ஒருவரின் வீட்டுக்கு பிபிசி மற்றும் பிற ஊடகங்கள் அழைக்கப்பட்டன. இரண்டு ஆலோசகர்கள் அவருக்கு அருகே அமர்ந்திருந்தனர். ஒரு ஆவணப்படக் குழுவினரும் அறையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
உடல் ரீதியான காயங்களுடன் போராடி வருவதாகவும், வேலை செய்யவோ வாகனம் ஓட்டவோ முடியவில்லை என்றும் விஸ்வாஸ்குமார் கூறுகிறார். இவரது உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏர் இந்தியா கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவரது ஆலோசகர்கள் கூறுகின்றனர். அதே போல விமான நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் ஒரு சந்திப்பு வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரமேஷுக்கு ஆதரவு வழங்க வேண்டிய எங்கள் பொறுப்பை நாங்கள் ஆழமாக உணர்ந்துள்ளோம். அவரையும், துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களையும் கவனித்துக்கொள்வது எங்களின் முழுமையான முன்னுரிமையாக உள்ளது."
"டாடா குழுமம் முழுவதிலுமிருந்து மூத்த தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்க குடும்பங்களைச் சந்தித்து வருகின்றனர். அத்தகைய சந்திப்பை ஏற்பாடு செய்ய ரமேஷின் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது," எனத் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு