சென்னையில் இளைஞர் மரணம்: மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது?

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மாரத்தான் ஒன்றில் கலந்து கொண்ட 24 வயது இளைஞர் போட்டியின்போதே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

கோட்டூர்புரம் அருகே நடைபெற்ற இந்த மாரத்தானில் பங்கேற்ற, தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான பரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துவிட்டனர்.

மருத்துவ பரிசோதனை மற்றும் உடல்தகுதி பரிசோதனை இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்கிறார் உடற்பயிற்சி நிபுணரான சுஜாதா.

மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ள குறைந்தது 3 மாதம் பயிற்சி தேவை என்கிறார் அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த நரம்பியல் மருத்துவரான வி சதீஷ் குமார்.

மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்களால் முடிந்த தூரம் மட்டுமே செல்ல வேண்டும் என்கிறார் சதிஷ் குமார்.

"பெரும்பாலான மாரத்தான் போட்டிகளில் கட்டணம் செலுத்தி தான் கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதனால் கட்டணம் செலுத்தி நுழைவுச்சீட்டு பெறுபவர்கள் எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று கருதி அவர்கள் உடல் ஒத்துழைக்கும் தூரத்தையும் தாண்டி செல்வது தான் சிக்கல்களுக்கு காரணம்," என்கிறார் சுஜாதா.

இதய துடிப்பின் முக்கியத்துவம்

மாரத்தான், மலையேற்றம் போன்ற தீவிர செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அதற்கான முன் தயாரிப்பின்றி செல்லக்கூடாது என்றும் கூறுகிறார்.

"தசை, எலும்பு ஆரோக்கியம் இதில் முக்கியமானது. மாரத்தான் போட்டிக்கு முன்பாக நம்முடைய உடல் தகுதியை தீர்மானிக்க சில வழிகள் உள்ளன. இதயம் மற்றும் சுவாசம் சீராக இருப்பது முதன்மையானது. இதய துடிப்பின் அளவை கணிக்க வேண்டும்." என்கிறார் சுஜாதா.

இதில் ரெஸ்ட்டிங் ரேட் (resting rate), ரிக்கவரி ரேட் (recovery rate) என்கிற இரண்டு அம்சங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ரெஸ்ட்டிங் ரேட் என்பது நாம் தூங்கி எழுந்த உடன் உள்ள நமது இதயத் துடிப்பின் அளவைக் குறிப்பதாகக் கூறும் அவர், அது 60 - 80 என்கிற அளவில் இருக்க வேண்டும்.

மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது?

"முன் அனுபவம் இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் படிப்படியாகத் தான் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிக்கு பின்பு இதய துடிப்பு அதிகரிப்பது இயல்பானது. ரிக்கவரி ரேட் என்பது நாம் உடற்பயிற்சியை நிறுத்திய பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் கால அளவை தான் இது குறிக்கிறது. இந்த அளவை நாம் கண்காணிக்க வேண்டும். 1 நிமிடத்திற்குள் நமது இதய துடிப்பு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்." என்றார்.

பல்வேறு அம்சங்கள் நாம் இயல்புநிலைக்கு திரும்புவதை பாதிப்பதாகக் கூறும் அவர், "அழுத்தம், தூக்கமின்மை மற்றும் தீவிர பணிச் சுமை இருப்பவர்கள் மாரத்தானில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். சுவாசம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள் அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்." என்கிறார்.

இரு கட்ட பரிசோதனை

மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனை அவசியம் என்கிறார் சுஜாதா.

"நம்முடைய உடலில் அறியப்படாமல் நோய்கள் அல்லது அறிகுறிகள் ஏதேனும் இருக்கின்றவா என்பதை உறுதி செய்து முழுமையான சான்று பெற்றுக் கொள்ள வேண்டும். மலையேற்றம் செல்வதற்கு உள்ளதைப் போலவே மாரத்தான் போட்டிகளுக்கும் உடல்தகுதி சான்று கட்டாயமாக்கப்பட வேண்டும்." என்று தெரிவித்தார்.

மாரத்தான் ஒடுவதற்கு இதயமும் தசைகளும் பழக வேண்டும் என்கிறார் மருத்துவர் சதீஷ்குமார்.

"மாரத்தான் போட்டிகளில் அட்ரினலின் அதிக அளவில் வெளியேறும் என்பதால் ஜோன் 2 (Zone 2) என்கிற பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய அதிகபட்ச இதய துடிப்பிலிருந்து ஒரு சீரான அளவில் பயிற்சி மேற்கொள்வதை அது குறிக்கிறது." என்றார்.

முன் பயிற்சியோ அல்லது அனுபவமோ இல்லாமல் மாரத்தான் சென்றால் இதயத்தின் மீது அழுத்தம் அதிகரிக்கும் என்று குறிப்பிடுகிறார்.

அதனை மேலும் விவரித்த அவர், "குறைந்தது ஆறு வார காலம் பயிற்சி எடுத்துக் கொண்டால் தான் அதிகரித்த இதய துடிப்புக்கு நம் உடல் தகவமைத்துக் கொள்ளும். இதயத்தின் மீது சுமை அதிகரிக்கும் போது சமநிலை பாதிக்கப்பட்டு ரத்த சுழற்சி நின்றுவிடும். இதனால் ரத்த நாளங்கள் அடைக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகின்றது." என்றார்.

மாரத்தான் போட்டி அல்லது பயிற்சியில் அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக நிற்க வேண்டும் என்றும் கூறுகிறார். "நம்மால் தொடர முடியாதபோது நம் உடல் அதனை வெளிப்படுத்தும். அதனை புறந்தள்ளிவிட்டு தொடர்வது தவறு." என்றும் குறிப்பிட்டார்.

மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவது எப்படி?

முதலில் நாம் ஓட நினைக்கும் தூரத்தை தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார் சதீஷ்குமார்.

"நீண்ட தூரம் செல்ல வேண்டுமென்றால் குறைந்தது 4 மாதம் பயிற்சி அவசியம். உதாரணத்திற்கு 40 கிமீ மாரத்தான் என்றால் 10 கிலோமீட்டரிலிருந்து தொடங்க வேண்டும், வாரத்திற்கு மூன்று நாட்களாவது ஓடி பயிற்சி எடுக்க வேண்டும். அதனை பகுதியாக மேற்கொள்ளலாம். வாரத்தில் ஒருநாள் இடைவெளி இல்லாமல் நீண்ட தூர பயிற்சியில் ஈடுபட வேண்டும். தூரத்தை ஒவ்வொரு வாரமும் சீராக அதிகரிக்க வேண்டும். அதிகரித்த இதய துடிப்பை சமாளிக்க இதயம் பழக வேண்டும், அதற்கான கால அவகாசத்தை நாம் கொடுக்க வேண்டும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு