You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு தரப்பட்ட 5 ஏக்கர் நிலம் என்ன ஆயிற்று? பிபிசி கள ஆய்வு
கடந்த 2019-ஆம் ஆண்டு அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்தை ஒரு அறக்கட்டளைக்கு அளித்து அதில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது. அதேபோல உத்தரப்பிரதேச சுன்னி வக்பு வாரியத்திடம் 5 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்து அதில் ஒரு மசூதி கட்டிக் கொள்ளலாம் என்று கூறியது.
சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட ‘ராமஜென்ம பூமி தீர்த்தக்ஷேத்திர அறக்கட்டளை’ மிக மும்முரமாகப் பணிசெய்து கோவிலின் முதற்கட்டத்தைக் கட்டிமுடிக்கவிருக்கும் சமயம், மசூதி கட்டப்படக் கொடுக்கப்பட்ட நிலத்தில் எந்தவொரு பணியும் தொடங்கப்படவே இல்லை.
அந்த நிலத்தில் ஏற்கனவே இருந்த ஒரு பழைய தர்கா புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு படத்தில், கட்டப்படவிருக்கும் மசூதியின் புதுப்பிக்கப்பட்ட வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘மஸ்ஜித் முகமது பின் அப்துல்லா’ என்று வரவிருக்கும் மசூதியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிபிசி தன்னிபூர் கிராமத்திற்குச் சென்ற போது அங்கிருந்தவர்கள் மசூதியின் இடத்தைப் பற்றியோ, ஊரின் நிலைமையைப் பற்றியோ பேச முன்வரவில்லை. ஊடகத்தினர் என்று தெரிந்தவுடன் வெளியில் இருந்த சில மக்களும் வீட்டுக்குள் சென்றுவிட்டனர்.
மசூதி கட்ட 5 ஏக்கர் ஒதுக்கியும் பணிகள் தொடங்காதது ஏன்?
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த நிலத்தின் சர்ச்சை குறித்த வழக்கில் வழக்காடுபவராக இருந்தவர் இக்பால் அன்சாரி. அவரது தந்தை ஹஷிம் அன்சாரி அந்த வழக்கில் மிக மூத்த வழக்காடுபவராக இருந்தவர். கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் காலமானதும், இக்பால் அந்த வழக்கைத் தொடர்ந்தார்.
தற்போது கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு மிக அருகில் ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறார் இக்பால். அவருக்கு இப்போது ஆயுதம் ஏந்திய போலீசார் இருவர் பாதுகாப்புக்காக உடனிருக்கிறார்கள்.
அவரது வீட்டின் வரவேற்பறையின் சுவர்களில் அவரது தந்தையின் படமும் பாபர் மசூதியின் படமும் நம்மை வரவேற்கின்றன.
ஊடகங்கள் அவரை மொய்த்த வண்ணம் உள்ளன. ஒரு பேட்டியை முடித்துவிட்டு நம்மிடம் பேசத் துவங்கிய அவர் கிடைத்த நிலத்தில் மசூதி கட்டப்பட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து விரக்தியான தொனியில் பேசினார்.
“வக்பு வாரியத்திறகு நிலம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு மசூதி கட்டுவது அவர்கள் பொறுப்பு. அதற்காக ஒரு அறக்கடளை நிறுவினார்கள். ஆனால் அதன்பின் எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. இந்தியாவின் இஸ்லாமியர்களும் அதைப் பற்றி எந்த கேள்வியும் கேட்பதில்லை,” என்றார்.
பாபர் மசூதி இருந்தவரை தன் தந்தை அதை கவனித்துக் கொண்டதாகக் கூறும் அன்சாரி, பேசாமல் அந்த நிலத்தில் விவசாயம் செய்து, அதில் விளைபவற்றை இந்துக்கள், இஸ்லாமியர்கள் என அனைவருக்கும் பகிர்ந்து அளித்துவிடலாம் என்று கூறினார்.
அங்கிருக்கும் இஸ்லாமியர்களுக்கு போதுமான மசூதிகள் உள்ளன என்பதால் அவர்கள் புதிய மசூதியைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்றார்.
‘ஒரு மசூதிக்கு மாற்று என்பது கிடையாது’
இந்த வழக்கில் இஸ்லாமியர் தரப்பைச் சேர்ந்த மற்றொரு பிரதிநிதியும், இந்த வழக்கை உன்னிப்பாக தொடர்ந்து வந்தவருமான அயோத்தியைச் சேர்ந்த காலிக் அகமது கானும் இஸ்லாமியர்களுக்கு புதிய மசூதி கட்டப்படுவதில் அதிக ஆர்வம் இல்லை என்றார்.
இஸ்லாமிய ஷரியா சட்டம் மற்றும் வக்பு வாரிய விதிகளின்படி "ஓரிடத்தில் இருந்த மசூதியை இன்னொரு இடத்திற்கு மாற்ற முடியாது, அதேபோல் ஒரு மசூதிக்கு மாற்றாக இன்னொரு மசூதியைக் கொண்டுவர முடியாது" என்றார்.
“இஸ்லாமியச் சட்டங்களின்படி, ஒரு மசூதியின் இடத்தை மாற்றவோ, ஒரு மசூதியை அடமானம் வைக்கவோ, ஒரு மசூதிக்கு பதிலாக மற்றொன்றையோ கட்டமுடியாது. அதன்படி பாபர் மசூதிக்கு மாற்றாக மற்றொரு மசூதியைக் கட்ட முடியாது. இதனால் இஸ்லாமியர்கள் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்ட புதிய மசூதியின் மீது அதிக அக்கறை காட்டவில்லை,” என்றார்.
ஆனால், கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய மசூதிக்கு யாரும் எதிராக இல்லை என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)