You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிட்டுக் குருவிகளை காக்கப் போராடும் ஆந்திராவின் ஓய்வு பெற்ற ஆசிரியர்
வேகமாக அழிந்துவரும் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற போராடி வருகிறார் ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பொலுவர்த்தி தலிநாயுடு. தனது ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு, சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவதற்காக உணவுக்கூடுகளை உருவாக்கி வருகிறார் இவர்.
மேலும் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பிற்காக ஹரிதா விகாஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கியுள்ளார்.
வரி குச்சுலு எனும் உணவுக் கூடுகளை தயாரிப்பதும் அதை செய்வது எப்படி என மக்களுக்கு கற்றுக்கொடுப்பதும் இந்த அறக்கட்டளையின் முக்கியப் பணி. சமீபத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் கதிர்களைக் கொண்டு பறவைகளுக்காக இந்த உணவுக்கூடுகள் உருவாக்கப்படுகின்றன.
இது குறித்து பேசிய அவர், “எங்கள் முக்கிய நோக்கம் பறவை உணவுக்கூடுகளைத் தயாரிப்பது. அதை செய்வது எப்படி என்பதை கிராமத்தில் பலரும் மறந்துவிட்டனர்.
நான் ஆசிரியராக வேலை செய்த போது, சுப்பா ராவ் என்பவர் கோவில்களில் நெல் உணவுக்கூடுகளை தொங்கவிடுவார்.
அதைப் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கும். அவரிடமிருந்து தான் இதை எப்படிச் செய்வது என் கற்றுக்கொண்டேன். இதை விதவிதமாக செய்து, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க எண்ணினேன். பலரும் தீவனக்கூடுகளை செய்து, வீட்டில் வைத்தால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கூடும்.
அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தால், மைனாக்கள், கிளிகள், போன்ற பல பறவைகள் மற்றும் அணில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்த உயிர்கள் நமது வாழ்வாதாரங்களை உயர்த்தும். இதுவே எனது நோக்கம்” என்கிறார்.
பணி ஓய்வுக்குப் பிறகு கிராமங்களுக்குச் சென்று, சிட்டுக்குருவிகளுக்கான உணவுக்கூடுகளை வீடுகளில் தொங்க விடுவது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார். இவரது முயற்சியால், பல கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தங்கள் வீடுகளில், ஊர் கோவில்களில், சுற்றுப்புறங்களில் தீவனக்கூடுகளை வைக்கத் தொடங்கியுள்ளனர்.
தனது ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறார் தலிநாயுடு. இதிலிருந்து கிடைக்கும் நெல்லை தீவனக்கூடுகளைத் தயாரிக்க மட்டுமே பயன்படுத்துவதாக கூறுகிறார்.
பறவை கூடுகளை உருவாக்குபவர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்ய ஒரு லட்ச ரூபாய் செலவாகிறது என்கிறார் தலிநாயுடு.
சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற இவர் எடுத்துள்ள முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
2012 முதல், பறவைகள் குறிப்பாக சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதற்கான இவரது முயற்சிகளைப் பாராட்டி பல விருதுகளை அளித்துள்ளது அரசு. 2019 முதல் ஹரிதா விகாஸ் அறக்கட்டளை மூலமாக சிட்டுக்குருவிகளை பாதுகாக்கவும் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் தலிநாயுடு.
செய்தியாளர்: வி.சங்கர்
ஒளிப்பதிவு: ரவி பெடாபொலு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)