க்ரிதி சனோனின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் அவரின் உடை குறித்து விவாதம் எழுவது ஏன்? ராகுல் காந்தி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு முன்பாக, ஒரு நகை பிராண்டின் விளம்பரம் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
அந்த விளம்பரத்தில் நடிகை க்ரிதி சனோன் தோன்றுகிறார். சிலருக்கு அவர் அணிந்திருந்த உடை பிடிக்கவில்லை. இன்னும் சிலர், அவர் தனது செல்ல நாய்க்கு ராக்கி கட்டியிருப்பதை ஆட்சேபித்தனர்.
இந்த விவகாரத்தில் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்ததையடுத்து சர்ச்சை மேலும் பெரிதானது.
அவர் அந்த விளம்பரத்தை "திட்டமிட்டு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது" என்று விமர்சித்தார்.
மறுபுறம், க்ரிதி சனோன், "பாரம்பரியம் என்பது இதயத்தில் இருக்கிறது, உடையின் கழுத்துப் பகுதியில் அல்ல" என்று பதிலளித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, க்ரிதி சனோனுக்கு ஆதரவு தெரிவித்து, பெண்கள் தங்களது சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்காக அவர்களை ட்ரோல் செய்வதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
விளம்பரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?
ஜீவா என்ற நகை பிராண்டின் அந்த விளம்பரம், சுமார் 35 விநாடிகள் ஓடுகிறதும் . அந்த விளம்பரம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.
விளம்பரத்தில், க்ரிதி சனோன் ரக்ஷா பந்தன் கொண்டாடுவதாகக் காட்டப்படுகிறது. அவர் வெள்ளை நிற லெஹங்காவும், ஆழமான கழுத்து வடிவமைப்புடைய பிராலெட் பாணி பிளவுஸும் அணிந்திருக்கிறார்.
அதில் அவர் தன் சகோதரருக்கு ராக்கி கட்டுகிறார். அதேபோல் தனது செல்ல நாய்க்கும் ராக்கி கட்டுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
எதற்கு எதிர்ப்பு?
மிகப் பெரிய எதிர்ப்பு அவருடைய உடையைச் சுற்றியே இருந்தது. பல சமூக வலைதள பயனர்கள், பண்டிகை நாளுக்கு இப்படியான உடை பொருத்தமல்ல என்று கூறினர்.
ஒரு பயனர், "ஒரு புனிதமான பண்டிகையை அவமதிக்க திட்டமிட்டு முயற்சி செய்திருக்கிறார்கள். நடிகை க்ரிதி சனோனும் அதற்குச் சம அளவில் பொறுப்பானவர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு பயனர், "இத்தகைய முட்டாள்தனமான விளம்பரங்கள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் மீண்டும் மீண்டும் வருகின்றன" என்று கூறினார்.
சிலர், விளம்பரத்தில் திலகம், ஆரத்தி போன்ற வழக்கமான சடங்குகள் காட்டப்படவில்லை என்றும் விமர்சித்தனர்.
நாய்க்கு ராக்கி கட்டும் காட்சியும் விமர்சனத்துக்குள்ளானது. சிலர் அந்த பிராண்டை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
க்ரிதி சனோனுக்கு ஆதரவு

பட மூலாதாரம், rahulgandhi/Instagram
ஆனால் பலர் க்ரிதி சனோனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். ராகுல் காந்தி, க்ரிதி சனோனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
அவர், "ஒரு பெண் என்ன அணிகிறார், என்ன செய்கிறார், எங்கு செல்கிறார் என்பது அவருடைய விருப்பம். பெண்கள் தங்களது சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்காக அவர்களை ட்ரோல் செய்வதை நிறுத்துங்கள்" என்று கூறினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தனது பதிவில் #SmashThePatriarchy (ஆணாதிக்கத்தை உடைத்தெறிவோம்) என்ற ஹாஷ்டேக்கையும் பயன்படுத்தினார்.
ஒரு பயனர், "பெண்களின் உடைகளை கண்காணிப்பதை நிறுத்த முடியாதா? ஒவ்வொரு முறையும் இதை பாரம்பரிய விவகாரம் என்று பாசாங்கு செய்வதை விட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், "க்ரிதியின் உடை எப்படி ஒழுக்கநெறி விவகாரமாக மாறிவிட்டது என்று புரியவில்லை. இது ஒரு விளம்பரம்தான். எல்லோரும் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
கங்கனா ரணாவத் என்ன கூறினார்?

பட மூலாதாரம், kanganaranaut/Instagram
இந்த விவாதம் நடைபெற்று கொண்டிருக்கும்போது, கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது விரிவான கருத்துகளைப் பகிர்ந்தார். அவர் க்ரிதி சனோனையோ, அந்த பிராண்டையோ நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால் அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்பது தெளிவாக இருந்தது.
"பெண்ணாக இருப்பதற்கு இது ஒரு அற்புதமான காலம். நமது அலமாரிகள் பலவிதமான ஆடைகளால் நிரம்பியுள்ளன. இன்றைய பெண் உலகளாவிய பெண். காக்டெயில் உடையிலிருந்து லெஹங்கா-சோலி வரை, ஜீன்ஸிலிருந்து சேலை வரை, பிகினியிலிருந்து சல்வார் கமீஸ் வரை நமக்குப் பல தேர்வுகள் உள்ளன. அப்படியிருக்க, உங்கள் சகோதரருக்கு பிகினி அல்லது உள்ளாடையுடன் ஏன் ராக்கி கட்ட வேண்டும்? உங்களின் மற்ற ஆடைத் தேர்வுகள் எங்கே போயின?" என அவர் பதிவிட்டுள்ளார்.
அதே பதிவில், அந்த விளம்பரம் "திட்டமிட்டு அசௌகரியத்தை உருவாக்கும் முயற்சி" என்றும் அவர் குறிப்பிட்டார்.
விளம்பரத்தைப் பற்றி க்ரிதி சனோன் அளித்த விளக்கம்

பட மூலாதாரம், kritisanon/Instagram
இந்த சர்ச்சைக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பதிலளித்த க்ரிதி சனோன், ஒரு பெண்ணின் பாரம்பரிய நம்பிக்கையையோ கலாசார பற்றையோ அவள் அணியும் உடையை வைத்து மதிப்பிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.
"ஒரு பண்டிகையின் உண்மையான உணர்வு உங்கள் உடையில் இல்லை. நீங்கள் மனப்பூர்வமாக பின்பற்றும் மரபுகளிலும் பாரம்பரியங்களிலும் அது இருக்கிறது. ரக்ஷா பந்தன் என்பது அன்பும் பாதுகாப்பும் கொண்ட உறவு. நானும் என் சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக் கொள்கிறோம். ஒருவரை ஒருவர் பாதுகாப்பதாக உறுதி அளிக்கிறோம். ஒருவரின் ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுக்காக மற்றொருவர் பிரார்த்திக்கிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாய்க்கு ராக்கி கட்டிய காட்சியைப் பற்றி குறிப்பிட்ட அவர், "எங்கள் குடும்பத்தில் இந்த அன்பும் பிரார்த்தனையும் எங்கள் நாய்க்கும் பொருந்தும். ஏனெனில் அது எங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினர்." என தெரிவித்துள்ளார்.
"என்ன அணிய வேண்டும் என்று பெண்களிடம் கூறுவதை நாம் எப்போது நிறுத்தப் போகிறோம்? காலப்போக்கில் பாரம்பரிய ஆடை அலங்காரங்களும் மாறியுள்ளன. ஆனால் இன்னும் ஏன் ஒரு பெண்ணின் கலாசார மரியாதை அவள் அணியும் உடையை வைத்து மட்டுமே மதிப்பிடப்படுகிறது? கலாசாரமும் பாரம்பரியமும் அவளது இதயத்தில் இருக்கிறது, அவளது உடையின் கழுத்து வடிவமைப்பில் அல்ல" என அவர் மேலும் எழுதியுள்ளார்.
இதற்கு முன் விளம்பரங்கள் எப்போது சர்ச்சையில் சிக்கின?
இந்தியாவில் பண்டிகைகளுடன் தொடர்புடைய விளம்பரங்கள் சர்ச்சையில் சிக்குவது புதிய விஷயம் அல்ல. கடந்த சில ஆண்டுகளில் பல பெரிய பிராண்டுகள் இதுபோன்ற அழுத்தங்களால் தங்களது விளம்பரங்களைத் திரும்பப் பெற்றுள்ளன.
தனிஷ்க், 2020:
நகை பிராண்டான தனிஷ்க் தனது 'ஏகத்வம்' பிரசாரத்தின் 43 வினாடி விளம்பரத்தை 13 அக்டோபர் 2020 அன்று நீக்கியது.. அதில் ஒரு முஸ்லிம் குடும்பம், தங்களது இந்து மருமகளுக்காக வளைகாப்பு போன்ற நிகழ்ச்சியை நடத்துவதாகக் காட்டப்பட்டது. சமூக வலைதளங்களில் #BoycottTanishq என்ற ஹாஷ்டேக் டிரெண்டானது. அந்த விளம்பரம் "லவ் ஜிஹாத்" கருத்தை ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
சர்ஃப் எக்செல், 2019:
ஹோலி பண்டிகை விளம்பரத்தில், ஒரு சிறுமி தனது முஸ்லிம் நண்பனை சாயம் படுவதிலிருந்து காப்பாற்றி மசூதிவரை அழைத்துச் செல்கிறாள். தொழுகைக்குப் பிறகு இருவரும் சேர்ந்து ஹோலி விளையாடுவதாக உறுதியளிக்கிறார்கள். இதற்கும் #BoycottSurfExcel என்ற ஹாஷ்டேக் டிரெண்டானது. விளம்பரம் இந்து மதத்துக்கு எதிரானது என்று விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் அது திரும்பப் பெறப்படவில்லை.
ஃபேப் இந்தியா, 2021:
ஆடை பிராண்டான ஃபேப் இந்தியா 'ஜஷ்ன்-ஏ-ரிவாஸ்' என்ற பெயரில் பண்டிகைக் கால ஆடைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. அதில் பயன்படுத்தப்பட்ட உருது பெயருக்கு எதிர்ப்பு எழுந்தது. #DiwaliIsNotJashnERiwaaz என்ற ஹாஷ்டேக் டிரெண்டானது.
டாபர் 2021:
கர்வா சௌத் பண்டிகை விளம்பரத்தில் இரண்டு பெண்கள் ஒருவருக்காக மற்றொருவர் நோன்பு இருப்பதாகக் காட்டப்பட்டது. அப்போது மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சராக இருந்த நரோத்தம் மிஸ்ரா இதற்கு எதிராக நடவடிக்கை எச்சரிக்கை விடுத்தார். அடுத்த நாளே நிறுவனம் விளம்பரத்தை நீக்கி, "மக்களின் உணர்வுகளை தெரியாமலேயே புண்படுத்தியதற்காக நாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்" என்று தெரிவித்தது.
இந்த அனைத்து சம்பவங்களிலும் ஒரு பொதுவான அம்சம் இருந்தது. சர்ச்சை சமூக வலைதளங்களில் தொடங்கியது, அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர், மேலும் பல சந்தர்ப்பங்களில் நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களைத் திரும்பப் பெற்றன. க்ரிதி சனோனின் தற்போதைய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பிராண்ட் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை. விளம்பரத்தைச் சுற்றிய விவாதம் தொடர்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































