விழுப்புரத்தில் திருமணமான 3 மாதத்தில் 'சாதி ரீதியிலான துன்புறுத்தலால்' இளம்பெண் மரணமா?

- எழுதியவர், விவேக்குமார் விஜயவீரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கிராமத்தில், 21 வயதான இளம்பெண் திருமணமான மூன்று மாதங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தற்கொலை என்று கணவர் தரப்பு கூறினாலும், பெண்ணின் குடும்பத்தினரும் சமூக அமைப்புகளும் இதை "சாதி ரீதியிலான" கொலை என்று குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கு தற்போது கோட்டாட்சியர் விசாரணையில் உள்ளது.

வழக்கின் பின்னணி
கடலூரை சேர்ந்த தேவ ஜெசிப்பிரியா(21), தலித் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர். சென்னை அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரும் வேறு சமூகத்தை சேர்ந்த வசந்தராஜ் என்பவரும் காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் சொர்ணாவூரில் வசித்து வந்தனர் என காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 31ஆம் தேதியன்று பிற்பகல், தேவஜெசிப்பிரியா தற்கொலை செய்துகொண்டதாக அவரது கணவர் வசந்தராஜ், பெண்ணின் சகோதரர் ரிச்சர்ட் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

சகோதரர் வைத்த குற்றச்சாட்டுகள்
பெண்ணின் சகோதரர் ரிச்சர்ட் அளித்த புகாரின்பேரில் வளவனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமணத்துக்குப் பிறகு, கணவர் வசந்தராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் தேவ ஜெசிப்பிரியாவை சாதிப்பெயரைச் சொல்லி அவமதித்து வந்தனர் என்றும், வரதட்சணை கோரி துன்புறுத்தினர் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் உள்ளது. உடலில் வயிறு, கை போன்ற பகுதிகளில் காயங்கள் உள்ளன'' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''தேவஜெசிப்பிரியா தொலைபேசியில் 'என்ன செய்வது என்று தெரியவில்லை' என்று கூறியிருந்தார்'' என புகாரில் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வசந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து போலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
" வசந்தராஜிடம் பெண்ணை துன்புறுத்தியது என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் " என விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன் பிபிசி தமிழிடம் கூறினார்.
விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''இறந்த பெண் சாதி ரீதியிலான அவதூறுகளை எதிர்கொண்டதாகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் பெண்ணின் குடும்பத்தினர் கூறுகின்றனர். வசந்தராஜின் தாய் தந்தையை தேடும் பணி நடந்து வருகிறது. கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்." என்று கூறினார்.
குறிப்பு
நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












