'நெய்மரின் முதிர்ச்சியற்ற செயல்': நார்வேயிடம் தோற்று வெளியேறிய பிரேசில் கோட்டை விட்டது எங்கே?

பட மூலாதாரம், Rob Newell - CameraSport via Getty Images
- எழுதியவர், டிம் விக்கரி
- பதவி, பிபிசி ஸ்போர்ட்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் குரோஷியாவிடம் தோற்று பிரேசில் துரதிர்ஷ்டவசமாக வெளியேறியது. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பும், அதே கட்டத்தில் பெல்ஜியத்திடம் தோற்ற போதும் அவர்கள் சற்றே துரதிர்ஷ்டவசமாக இருந்தனர். இந்த முறை அவர்களால் அந்த நிலையைக்கூட எட்ட முடியவில்லை. நார்வேயிடம் பிரேசில் அடைந்த தோல்வியில் துரதிர்ஷ்டம் என்று எதுவும் இல்லை.
உண்மையைச் சொல்வதானால், இது ஒரு முழுமையான தோல்வி.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அர்ஜென்டினாவிடம் 4-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்த பிறகு, கார்லோ அன்செலோட்டி பிரேசில் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.
பிரேசில் அணியின் பொறுப்பில் அவர் இருந்த 16 ஆட்டங்களில், 10-ல் வெற்றி, மூன்றில் டிரா மற்றும் மூன்றில் தோல்வி கண்டுள்ளார். தான் வருவதற்கு முன்பு, உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஐந்து ஆட்டங்களில் நான்கில் தோற்றுத் தடுமாறிய ஓர் அணியை அவர் மாற்றியமைத்தார்.
ஆனால் அது போதுமானதாக அமையவில்லை.
பிரேசில் அணியில் இப்போது ஒரு பெரியளவிலான சீரமைப்பு தேவைப்படுகிறது. அதை அவர்கள் முன்பு மிகவும் வலிமையாகவும், ஆக்கப்பூர்வமாகவும், வசீகரிக்கும் வகையிலும் இருந்த ஆடுகளத்தின் பகுதியான நடுக்களத்தில் இருந்து தொடங்க வேண்டும்.
கற்பனைத்திறன் மிக்க மத்திய கள ஆட்டத்தை பிரேசில் புறக்கணித்ததால், சிலரை இழந்துள்ளது. அது போட்டிகளிலும் அவர்களுக்குத் தோல்வியை அளித்துள்ளது. இந்த உலகக் கோப்பையில், ஓர் இதமான கோடை மதியத்தில் நார்வேயிடம் அவர்கள் பந்தை தன் வசம் வைத்திருப்பதில் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டது திகைக்க வைக்கிறது. இதற்குக் காரணம் அணியின் கட்டமைப்புதான்.

பட மூலாதாரம், MAURO PIMENTEL / AFP via Getty Images
பயிற்சியாளர் அன்செலோட்டி செய்த முதல் காரியம், 18 மாதங்களாக சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த காஸ்மிரோவை மீண்டும் அணிக்கு அழைத்ததுதான்.
இதனால் அணிக்கு சாதகமான அம்சங்களும் இருந்தன. காஸ்மிரோ அணிக்கு ஒரு கட்டமைப்பைக் கொடுத்தார். புருனோ குய்மரேஸுக்கு சுதந்திரமாக விளையாடும் சூழலை அளித்தார். நார்வேக்கு எதிரான போட்டியில் அவர் தொடக்கத்தில் பெனால்டியைத் தவறவிடும் வரை (அது எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்) அவருக்கு இந்த தொடர் சிறப்பான ஒன்றாகவே அமைந்தது.
ஆனால், அதிக இடைவெளி இருக்கும் சூழலில் காஸ்மிரோவின் பலவீனமான ஆட்டம் எப்போதுமே ஒரு பிரச்னையாக இருந்துள்ளது. இரண்டாவது நிமிடத்திலேயே நார்வேயின் கோல் நிராகரிக்கப்பட்டபோது இது தெளிவாகத் தெரிந்தது. எனவே, பிரேசில் தற்காப்பில் ஈடுபட்ட விதம், பின்வாங்கி நின்று, நார்வே வீரர்கள் பந்துகளைப் பரிமாறிக்கொண்டு நம்பிக்கையுடன் முன்னேறுவதைப் பார்ப்பதாகவே இருந்தது.
முந்தைய சுற்றில் ஜப்பானுக்கு எதிராகக் காயமடைந்த லூகாஸ் பக்கேட்டா இல்லாததும் ஒரு காரணமாகும். அதே மாதிரியான வேறு வீரர் தன்னிடம் இல்லை என்று அன்செலோட்டி ஒப்புக்கொள்ளும் வகையில் இருந்தது. அதன் விளைவாக, கிளப் போட்டிகளில் ஆர்செனல் அணிக்காக ஆடும் கேப்ரியல் மார்டினெல்லி களமிறங்கினார், இது அணியின் தாக்குதலை ஏறக்குறைய முழுவதுமாக வேகமான நேரடித் தாக்குதல்களையே சார்ந்திருக்கும்படி செய்தது.
பயிற்சியாளர் அன்செலோட்டி தனது ஆரம்பக்கட்ட வீரர் தேர்வில் தவறு செய்தார். வெறும் ஐந்து நடுக்கள வீரர்களை (midfielders) மட்டுமே தேர்வு செய்தது ஒரு பெரிய குறைபாடாகும். இறுதிப் பயிற்சி ஆட்டத்தில் வலது-பின்புறத் தற்காப்பு வீரர் வெஸ்லி காயமடைந்தபோது, எடர்சனை உள்ளே கொண்டுவர அன்செலோட்டி அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். ஆனால் பயிற்சியாளர் மீது குற்றம் சுமத்திவிட முடியாது, அதற்காக நாடும் பொறுப்பேற்க வேண்டும்.
பிரேசில் தேவைக்கு அதிகமான 'வைட் ஸ்ட்ரைக்கர்' (wide strikers) எனப்படும் தாக்குதல் ஆட்டக்காரர்களை உருவாக்குகிறது. ஆனால் தரமான நடுக்கள வீரர்களை போதிய அளவு உருவாக்குவதில்லை.

பட மூலாதாரம், Wu ZhizhaoVCG via Getty Images
அடுத்ததாக நெய்மர் விவகாரம். இது முழுக்க முழுக்க பயிற்சியாளரின் பொறுப்பு. உண்மைதான், சூழல் எளிதானதாக இருக்கவில்லை. நட்சத்திர வீரர் மீதான மோகத்தில் இருந்த மக்கள், நெய்மர் முன்பு இருந்த நிலையில் இல்லை என்பதை உணராமல், அவரை அணியில் சேர்க்குமாறு கூச்சலிட்டனர்.
உடல் தகுதி இருந்தால் மட்டுமே நெய்மர் அழைக்கப்படுவார் என்றும், காயமடைந்த வீரர்களை அணியில் சேர்க்கமாட்டேன் என்றும் அன்செலோட்டி கூறியிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் நெய்மருக்காக அந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மீறினார்.
ஸ்காட்லாந்துக்கு எதிராக குறுகிய நேரமே களத்தில் இருந்த நெய்மர், காட்சிப் போட்டியில் விளையாட வந்த ஓய்வுபெற்ற வீரரைப் போல காணப்பட்டார். ஒரு முக்கியமான நேரடிப் போட்டியில் அன்செலோட்டி அவரை நாடியது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. இது அணியின் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டிய சூழலை உருவாக்கியது.
அணியின் தற்காப்புக்காகப் பின்னோக்கி நகரும் வேகம் இல்லாததால், நெய்மரை 'சென்டர்-ஃபார்வர்ட்' நிலையில் பயன்படுத்த வேண்டியிருந்தது. இதனால் வினிசியஸ் ஜூனியர் மற்றும் என்ட்ரிக் ஆகியோர் பக்கவாட்டிலும் ஆடுகளத்தில் கோல் அடிக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவிலும் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; அவர்கள் அங்கு இருக்கக்கூடாது என்பதே உண்மை. இது அணியின் தற்காப்பை பலவீனப்படுத்தியது. தன் விளைவாக, நார்வே அணி எர்லிங் ஹாலண்டிற்கு கோலடிக்க வாய்ப்புள்ள சிறந்த பாஸ்களை வழங்கத் தொடங்கியது. அவருக்குத் தேவைப்பட்டது அதுமட்டுமே.

பட மூலாதாரம், Wu ZhizhaoVCG via Getty Images
நெய்மர் பெனால்டி வாய்ப்பின் மூலம் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை முடித்தார். ஆனால், களத்தை விட்டு வெளியேறும் முன் காட்டிய ஒரு முதிர்ச்சியற்ற கோபமான செயல் மற்றும் கட்டுப்பாடற்ற உதைக்காக அவர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். தனது உச்சக்கட்ட காலத்தில் அவர் ஒரு அற்புதமான திறமையாளராகவும், மேதைக்கு இணையானவராகவும் திகழ்ந்தார்; ஆனால் இது அவரது பயணத்தின் முடிவு. வயதாகும் பல வீரர்களைக் கொண்ட அந்த அணிக்கு இதுவே நிலைமை.
ஆட்டத்திற்குப் பிறகு, இது தனக்கான பயணத்தின் முடிவு என்பதை அவர் சுட்டிக்காட்டினார். "நான் முயற்சித்தேன், முயற்சித்தேன்... இப்போது எல்லாம் முடிந்துவிட்டது! நான் இங்கே தொடங்கினேன், இங்கே முடிக்கிறேன்," என்று பிரேசிலிய தொலைக்காட்சியிடம்(ge tv) அவர் கூறினார். 2010-ல் நியூ ஜெர்சியில் அமெரிக்காவுக்கு எதிரான நட்பு ரீதியான போட்டியில் இதே மைதானத்தில் அவர் அறிமுகமானதை இது குறிக்கிறது.
"இது முடிவு என்று நான் நினைக்கவில்லை. இது ஒரு புதிய சுழற்சியின் தொடக்கம் என்று நான் கருதுகிறேன்," என்று நார்வேக்கு எதிரான தோல்விக்குப் பிறகு அன்செலோட்டி உறுதியாகக் கூறினார்.
"என்னால் சொல்ல முடிந்தது, எங்களால் செய்ய முடிந்தது மற்றும் இனி நாங்கள் செய்யப்போவது இதுதான்: தேசிய அணிக்காகத் தொடர்ந்து கடினமாக உழைப்பது, தொடர்ந்து முன்னேற முயற்சிப்பது மற்றும் புதிய உத்திகளைக் கண்டறிவது."
"நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டதாகவே கருதுகிறேன்; ஆனால் இது கால்பந்து, இது ஒரு விளையாட்டு. எனவே, தோல்வியின் சோதனையையும் கசப்பையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.
"இத்தகைய சூழல்களைக் கையாள்வதில் எனக்கு நல்ல அனுபவம் உண்டு; இதையும் நாங்கள் கடந்து செல்வோம். இனிவரும் காலங்களில் முன்னேறுவதற்கான உந்துசக்தியாக இதை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்."

பட மூலாதாரம், Steph Chambers - FIFAFIFA via Getty Images
ஆக, 2030-ஆம் ஆண்டுக்கான பயணமும் ஆயத்தப் பணிகளும் இப்போதே தொடங்கிவிட்டன.
தகுதிச் சுற்று மிகவும் எளிதாகவே அமையும். ஏனெனில் அர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் போட்டியை நடத்தும் உரிமையை ஏற்கனவே பெற்றுவிட்டன; உலகக் கோப்பைத் தொடக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, அந்நாடுகள் ஒவ்வொன்றும் தலா ஒரு போட்டியை நடத்தவுள்ளன.
அன்செலோட்டி நீண்ட கால ஒப்பந்தத்தில் உள்ளார். அணியில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்து சீரமைக்க அவர்தான் சரியான நபரா? அல்லது சிக்கல்களைச் சரிசெய்து வெற்றியைத் தேடித்தரும் ஒரு நிபுணராகவே அவர் சிறந்தவரா? ஐரோப்பா முழுவதும் சிறிய மாற்றங்கள் மற்றும் நுணுக்கமான அணுகுமுறைகள் மூலம் பல வெற்றிகளைக் குவித்தவர் அவர்.
ஆனால் பிரேசிலுடன் அல்ல. இம்முறை அல்ல. அடுத்த முறை ஒன்று இருக்குமா?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























