பூவை ஜெகன்மூர்த்திக்கு உயர் நீதிமன்றம் கண்டனம், ஏடிஜிபி கைது - சிறுவன் கடத்தல் வழக்கின் பின்னணி என்ன?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஒரு சிறுவனைக் கடத்திய விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீதும் காவல் துறை ஏடிஜிபி மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. இதில் ஏடிஜிபியை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் என்ன நடக்கிறது?

ஒரு காதல் திருமண விவகாரம் தொடர்பாக 18 வயது நிரம்பாத சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் ஏடிஜிபி எச்.எம். ஜெயராமைக் கைதுசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

என்ன நடந்தது?

திருவள்ளூர் மாவட்டத்தில் களாம்பாக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ். 23 வயதான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக, தேனி மாவட்டத்திற்கு ஒரு விளையாட்டுப் போட்டிக்காகச் சென்றபோது, அந்த ஊரைச் சேர்ந்த பெண்ணுடன் அறிமுகமாகி பழக ஆரம்பித்தார்.

இவர்கள் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்தப் பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகளைச் செய்யவும் ஆரம்பித்தனர்.

இதனால், கடந்த மாதம் 14ஆம் தேதிவாக்கில் அந்தப் பெண் சென்னைக்கு வந்துவிட்டார். இதற்குப் பிறகு, இருவரும் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டனர். இதற்கு அடுத்த நாள் ஒரு கோவிலிலும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி சிலர் 2 கார்களில் வந்து, தனுஷ் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு தனுஷோ, அந்தப் பெண்ணோ இல்லாததால், தனுஷின் 18 வயது நிரம்பாத சகோதரனை தூக்கிச் சென்றனர்.

இதயைடுத்து அவரது தாயார் லக்ஷ்மி, காவல்துறைக்குத் தகவல் அளித்தார். இதற்குப் பிறகு அதிகாலை 3 மணியளவில் அந்த சிறுவனை அந்த கும்பல் விட்டுச் சென்றது.

ஐந்து பேர் கைது

இந்த விவகாரம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பாக பெண்ணின் தந்தை உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே.வி. குப்பத்தின் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தியிடம் விசாரிக்க காவல்துறையினர் முடிவுசெய்தனர்.

இதற்காக, ஞாயிற்றுக்கிழமையன்று திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர், ஆன்டர்சன் பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர்.

காவல்துறையினர் அங்கு வந்திருப்பதையறிந்த அவரது கட்சித் தொண்டர்கள், ஜெகன்மூர்த்தி வீடு உள்ள பகுதியில் குவிந்தனர்.

இதையடுத்து 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். அவரது ஆதரவாளர்களுடன் காவல்துறை நடத்திய நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சில காவல்துறையினர் மட்டும் அவரது வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

ஆனால், ஜெகன்மூர்த்தி வீட்டில் இல்லாததால் காவல்துறையினர் திரும்பிச் சென்றனர்.

'காவல்துறை வாகனத்தில் கடத்தப்பட்ட நபர்'

இந்த நிலையில், தனக்கு முன் ஜாமீன் கேட்டு ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன் மூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சம்பந்தமே இல்லாத இந்த வழக்கில் மனுதாரரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சிக்கின்றனர்" என்று கூறினார்.

ஆனால், காவல் துறை தரப்பு இதனை மறுத்தது.

"கடத்தப்பட்ட சிறுவனின் தாயார் லக்ஷ்மி அளித்த புகாரின் அடிப்படையில்தான் இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. தனது பெண்ணிற்குத் திருமணம் நடந்த தகவல் கிடைத்ததும், தம்பதியைப் பிரிப்பதற்காக பெண்ணின் தந்தையான வனராஜா என்பவர் காவல்துறையிலிருந்து நீக்கப்பட்ட மகேஸ்வரி என்ற காவலரின் உதவியை நாடினார்.

அவர் பதவியில் உள்ள ஏடிஜிபியின் உதவியை நாடினார். அந்த ஏடிஜிபி சட்டமன்ற உறுப்பினரின் உதவியை நாடியுள்ளார். இதையடுத்து இரண்டு கார்களில் வந்த எம்.எல்.ஏவின் ஆட்கள் சம்பந்தப்பட்ட இளைஞரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு அந்த இளைஞர் இல்லை என்பதால், மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தம்பியை தூக்கிச் சென்றனர்.

அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் அந்த சிறுவனை காவல்துறை தேட ஆரம்பித்து. இதையடுத்து ஏடிஜிபியின் அலுவல் வாகனத்தில் அந்தச் சிறுவனை அழைத்துவந்து பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர். ஒரு காவலரே அந்த வண்டியை ஓட்டிவந்தார். வனராஜாவும் மகேஸ்வரியும்கூட அந்த அதிகாரபூர்வ வாகனத்தில் பயணம் செய்தனர்" என காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஏடிஜிபியை கைது செய்ய உத்தரவு

தற்போதுவரை இந்த வழக்கில் வனராஜா, மகேஸ்வரி, புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பெண் காவலரும் வழக்கறிஞரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் எம்.எல்.ஏவுக்கு இதில் தொடர்பிருப்பதை தெரிவித்திருப்பதாகவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து ஏ.டி.ஜி.பியை இதுவரை ஏன் கைதுசெய்து விசாரிக்கவில்லை என நீதிபதி காவல்துறையினரிடம் கேள்வியெழுப்பினார்.

முதலில் எம்.எல்.ஏவை கைதுசெய்து விசாரிக்க விரும்பியதாகவும் ஆனால், அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் விசாரிக்க முடியவில்லை என்றும் காவல்துறை தரப்பு தெரிவித்தது.

இதையடுத்து, ஏ.டி.ஜி.பி. ஜெயராம், எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி ஆகிய இருவரும் பிற்பகல் 2.35 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். கூடுதல் டி.ஜி.பி. ஆஜராக மறுத்தால், அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

பிற்பகல் இரண்டரை மணிக்கு மீண்டும் நீதிமன்றம் கூடியபோது, ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் ஆஜரானார். ஆனால், ஜெகன்மூர்த்தி வந்துகொண்டிருப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு மீண்டும் சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, நான்கு மணியளவில் ஜெகன்மூர்த்தி ஆஜரானவுடன் வழக்கின் விசாரணை துவங்கியது.

இந்த விசாரணையின்போது நீதிபதி பல கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

"இப்படித்தான் ஒரு எம்.எல்.ஏ. நடந்துகொள்வதா? கைதுசெய்வதை ஏன் தொண்டர்கள் தடுக்கிறார்கள்? ஒரு எம்.எல்.ஏ. எதற்காக கட்டப்பஞ்சாயத்து வேலைகளில் ஈடுபடுகிறார்? 70,000 பேரின் வாக்குகளைப் பெற்று எம்.எல்.ஏவாகியிருக்கும் ஒருவர், முன்மாதிரியானவராக இருக்க வேண்டும்." என்று கூறிய நீதிபதி, ஜெகன்மூர்த்தி காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஆதரவாளர்கள் இல்லாமல் விசாரணைக்குச் செல்ல வேண்டுமென்றும் கூறினார்.

ஏடிஜிபியும் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அவரைக் கைதுசெய்ய வேண்டுமென நீதிபதி குறிப்பிட்டதையடுத்து காவல்துறை அவரை கைது செய்தது. வழக்கின் விசாரணை ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், ஊடகங்களிடம் பேசிய தனுஷ், இந்த விவகாரத்தில் ஜெகன்மூர்த்தி சம்பந்தப்பட்டிருக்கிறாரா என்பது தனக்குத் தெரியாது எனத் தெரிவித்திருக்கிறார்.

"தம்பியை பெண் வீட்டினர் கடத்தியிருப்பதாக கூறினார்கள் . தம்பியை காணோம் என்றவுடன் அம்மா காலையில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இது வரைக்கும்தான் எங்களுக்குத் தெரியும். ஜெகன் மூர்த்தி இதில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என்று கூறினார் தனுஷ்.

புரட்சி பாரதம் கட்சியின் தலைவரான பூவை ஜெகன்மூர்த்தி, 2021ஆம் ஆண்டில் அ.தி.மு.க. கூட்டணியில் அக்கட்சியின் சின்னத்திலேயே வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்வைத்தியனான்குப்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரைவிட பத்தாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று ஜெகன் மூர்த்தி வெற்றிபெற்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு