You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் கட்சிக் கொடியில் உள்ள வாகை மலர் எதைக் குறிக்கிறது? தமிழ்நாட்டிற்கும் அதற்கும் என்ன தொடர்பு?
- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் தனிக்கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், அதன் கொடியை அறிமுகம் செய்த பிறகு வாகை மலர் அதிக அளவில் பேசுபடு பொருளாக மாறியுள்ளது. அந்த கொடியின் மையத்தில் வாகை மலர் இருப்பதே அதற்குக் காரணம்.
சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வாகை மலர் குறித்த பல்வேறு தகவல்களும் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
வாகை மலருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு? தமிழர் வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் என்ன?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
போரில் வெல்லும் வீரர்கள் சூடும் வாகை மலர்
தாவரவியல் பெயர் : அல்பிசியா லெப்பெக்
குடும்பம் : ஃபபேசியா
வாகை மரம் 5-20 மீட்டர் உயரம் வளரும தன்மையுடையது. வாகையில் சிறுவகை ,பெருவாகை, நிலவாகை, காட்டு வாகை, செவ்வாகை, கருவாகை, தூங்குவாகை என பல வகைகள் உள்ளன.
சங்க காலத்தில் போரில் வெற்றி பெறும் வீரர்கள் வாகை மலர் சூடி வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. தற்போது கூட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை "வெற்றி வாகை சூடினார்" என்று அழைப்பதையும், புகழ்வதையும் கேட்க முடியும் என்கிறார் கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் தமிழ் துறை பேராசிரியர் முனைவர். நாகராஜன்.
"போரில் வெற்றி பெற்றவர்கள் சூடுவது வாகை மலர்க் கொத்தாகும். வாகைப்பூவை வெற்றிப் பூ என்பர். வாகைப் பூ தமிழ் கடவுள் கொற்றவைக்கு உரியதாகும்" என்று அவர் கூறினார்.
இலக்கியங்களில் வாகை மலர் - நாகராஜன் கூறியது என்ன?
மிக மெல்லிய இழைகளாலான மயில்களின் தலையில் இருக்கும் கொண்டை போல் உள்ள இந்த வாகை மலர் இலக்கிய பாடல்களில் பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாகை என்பது வாழ்க்கையின் மேம்பட்ட வெற்றிநிலையைக் குறிப்பது என்று தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுதலைக் குறிக்கும் என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.
வாகை என்பதற்குத் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், "ஒழுக்கத்தான் மிகுதல் வாகையாம்" எனக் குறிப்பிடுவது வாகை என்பது வெற்றியின் அடையாளம் என்பதனைத் தெளிவுபடுத்தும் குறிப்பாகும்.
போர்களில் வெற்றி பெற்றவர்கள் ‘வாகை’ சூடியவராவர்.
“வடவனம் வாகை வான்பூங் குடசம்”
என்று குறிஞ்சிப் பாட்டு பாடல் வரிகள் குறிப்பிடுகிறது.
வாகையின் பூ ஆண் மயிலின் தலைக்குடுமி போல் இருக்கும் என்பதை,
"குமரி வாகை கோல் உடை நறு வீ
மட மா தோகை குடுமியின் தோன்றும்"
என்ற குறுந்தொகையின் பாடல் வரிகள் மூலம் அறிய முடியும்.
வாகைப்பூ பஞ்சுபோல் மென்மையாக இருக்கும், அதன் இலைகள் இரண்டிரண்டாகப் பிரிந்திருக்கும் என்பதை "மென் பூ வாகை புன் புற கவட்டு இலை " என்ற அகத்திணை பாடல் வரிகள் உணர்த்துகின்றது.
சிற்றரசன் நன்னனது கொங்கண நாட்டில் வாகை மரம் மிகுதி. அவன் வாகை மரத்தைக் காவல் மரமாகக் கொண்டான். அதனைக் கழங்காய்ச் சென்னி நார் முடிச் சேரல் என்ற மற்றொரு சிற்றரசன் வெட்டி வீழ்த்தினான். இதை,
“பொன்படு கொண்கான நன்னன் நன்னாடு ”
“பொன்அம் கண்ணி பொலந்தேர் நன்னன் சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்”
என்ற வரிகள் மூலம் அறிய முடியும். இலக்கியப் பாடல்களில் வாகை மலர் பற்றி அதிகமான குறிப்புகள் உள்ளன.
மருத நிலமும் வாகையும்
தமிழர்கள் தங்களின் வாழ்வியல் அடிப்படையில் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைகளாக பிரித்தனர். அதில் வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நிலப்பகுதி என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிலப் பரப்பிற்கு சொந்தமான மலர் வாகை மலராகும். மருதம் விவசாயம் மற்றும் மேய்ச்சல் நிலப்பரப்பை குறிக்கிறது.
"பண்டைய காலத்திலும் தமிழர்கள் விவசாயத்தில் சிறந்து விளங்கினர். அதன்படி அந்த நிலப்பரப்பிற்கு சொந்தமான வாகை மலரை வெற்றியின் அடையாளமாகக் கருதி அதை சூடியிருக்கலாம்" என்று முனைவர் நாகராஜன் கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர் "பெண்கள் இதை காதணியாக அணிந்து கொள்வர் என்று சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. அக்கால தமிழ் மக்களின் இறை வழிபாட்டில் பூக்கள் முக்கியத்துவம் கொண்டிருந்தன. அவை சிலைகளை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன. பூக்கள் வெற்றியின் அடையாளமாக மங்களகரமான சின்னமாக பார்க்கப்பட்டன. அப்படித்தான் வெற்றியின் பின்னணியில் வாகை மலர் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்" என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)