'சிறையா? போர்க்களமா?' - யுக்ரேன் போருக்கு ஆள் சேர்க்க ரஷ்யா பின்பற்றும் புதிய உத்தி

    • எழுதியவர், ஓல்கா இவ்ஷினா
    • பதவி, பிபிசி ரஷ்ய சேவை

கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி காலை சுமார் 06:45 மணியளவில், ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரில் இருக்கும் ஆந்த்ரே பெர்லோவ் என்பவரது வீட்டிற்குப் போலீசார் வந்தனர். அவர் ஜிம் செல்வதற்காக அதிகாலையில் கண் விழித்திருந்தார். அவரை வீட்டிற்கு அழைத்து வந்து சோதனை நடத்த அதிகாரிகள் அனுப்பப்பட்டிருந்தனர்.

அவர் நிர்வாக இயக்குநராக இருந்த நோவோசிபிர்ஸ்க் கால்பந்து கிளப்பில் இருந்து சுமார் 30 லட்சம் ரூபிள் (இந்திய மதிப்பில் சுமார் 27 லட்சம் ரூபாய்) திருடியதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

அவரின் குடும்பத்தினரோ ‘மைதானத்தில் விளையாடுவதற்கான வழக்கமான கட்டணத்தை வாங்காமல், குழந்தைகளை மைதானத்தில் பயிற்சிக்கு அனுமதிக்க மட்டுமே அவர் செய்தார்’ என்று கூறுகிறார்கள். அவர்கள் பயிற்சியாளருக்கான கட்டணத்தை மட்டுமே கொடுத்தனர், என்கின்றனர்.

ஆனால், அவர் மீது குற்றம் சாட்டுபவர்கள் அவர் பணத்தைக் கையாடல் செய்ததாகக் கூறுகிறார்கள்.

62 வயதான பெர்லோவ், ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். 1992-ஆம் ஆண்டு 50 கி.மீ நடை பந்தயத்தில் வெற்றி பெற்றார்.

இப்போது அவர் ஆறு மாதங்களுக்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். யுக்ரேன் போரில் சண்டையிடச் சம்மதிக்குமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். பதிலுக்கு அவர் மீதான பணக் கையாடல் வழக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும், போர் முடிவடையும் போது வழக்கு கைவிடப்படலாம் என்றும் அவரிடம் கூறப்பட்டுள்ளது.

‘கொலை செய்துவிட்டுக் கூட தப்பிக்கலாம்’

ஆனால் பெர்லோவ் இதற்குச் சம்மதிக்கவில்லை என்று அவரின் மகள் கூறுகிறார்.

“நாங்கள் இதுகுறித்து உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தோம். அதனால் அவர் கடுங்காவல் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு மீண்டும் இந்த தெரிவுகள் முன்வைக்கப்பட்டன," என்று அவரின் மகள் அலினா கூறுகிறார். அவர் இரண்டாவது முறையும் அதனை மறுத்த போது, ​​​​அவர் தனது குடும்பத்தைப் பார்க்கவும் அழைக்கவும் தடை விதிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

யுக்ரேனில் சண்டையிட ரஷ்யாவின் சிறையிலிருக்கும் கைதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது ஒன்றும் ரகசியமல்ல. ஆனால், ஆரம்பத்தில் மிகவும் தீவிரமான மற்றும் வன்முறைக் குற்றவாளிகள் மட்டும் போருக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில், அந்தப் போக்கு மாறியிருக்கிறது என்று பிபிசி நடத்திய பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்திய சட்டங்களின்படி, குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் நீதிமன்றத்திற்குப் பதிலாக போருக்குச் செல்வதற்கான தேர்வு இருக்கிறது.

2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, குற்றவாளிகள் கையெழுத்திட்டால், அவர்களுக்கெதிரான வழக்கு விசாரணை நிறுத்தப்படும். அவர்கள் மீதிருக்கும் வழக்குகள் போரின் முடிவில் முழுமையாக மூடப்படும்.

"இது ரஷ்யாவின் சட்ட அமலாக்க முறையை தலைகீழாக மாற்றியுள்ளது," என்று ‘ரஷ்யா பிஹைன்ட் பார்ஸ்’ அமைப்பின் இயக்குநர் ஓல்கா ரோமானோவா கூறுகிறார். இது கைதிகளுக்குச் சட்ட உதவி வழங்கும் ஒரு தன்னார்வ அமைப்பு.

“கொலை செய்த ஒருவரை போலீசார் கைது செய்து அவருக்கு விலங்கு மாட்டும் பொது, கொலையாளி, 'நான் சிறப்பு ராணுவப் பிரிவில் பணியாற்ற விரும்புகிறேன்’, என்றால் அவர் மீதிருந்த வழக்கு முடித்து வைக்கப்படும்,” என்கிறார் அவர்.

சிறையிலிருந்து போர்க்களத்துக்கு...

ரஷ்ய ராணுவத்துடன் இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் நன்மைகளை ஒரு புலனாய்வு அதிகாரி, மூன்று வருடச் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரது மனைவியிடம் விவரிக்கும் ஒரு ஆடியோ பதிவு கசிந்தது. அதனை பிபிசி கேட்டது.

அதில், "மற்றொரு குற்றத்திற்காக அவருக்கு மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை பெறலாம்," என்று அவர் அந்தப் பெண்ணிடம் கூறுகிறார். "நான் அவருக்கு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒரு வாய்ப்பை வழங்கினேன். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டால் அவர் போருக்குச் செல்வார். வழக்கை முடித்து விடுவோம்,” என்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர் கையொப்பமிட்டால், ஒரு சில நாட்களுக்குள் அவர் மீதிருக்கும் குற்ற வழக்கு இடைநிறுத்தப்பட்டு, அந்த நபர் விடுவிக்கப்படுவார். உடனடியாக போர்க்களத்துக்கு அனுப்பப்படுவார்.

இப்போது இது ரஷ்யா முழுவதும் வழக்கமாகிவிட்டது என, ரஷ்யாவில் பணிபுரியும் மூன்று வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தினர்.

‘கைதிகளை இழந்தால் பாதகமில்லை என்று ரஷ்யா நினைக்கிறது’

சிறைவாசத்தையும், குற்றப்பதிவையும் தவிர்க்க வேண்டும் என்ற நம்பிக்கையில் சிலர் இதற்குச் சம்மதிக்கிறார்கள். ஆனால் அது எளிதான வழி அல்ல என்று பதின்வயது யாரோஸ்லாவ் லிபாவ்ஸ்கியின் கதை உணர்த்துகிறது.

‘குழுவாக ஒருவரைத் தாக்கிய’ குற்றத்துக்காக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் அவர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அவர் யுக்ரேனுக்குச் சென்றார். ஒரு வாரம் கழித்து போரில் இறந்தார். போரில் இறந்த மிக இளம் வீரர்களில் அவரும் ஒருவர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் எத்தனை பேர் விசாரணையை எதிர்கொள்வதற்குப் பதிலாக போருக்குச் செல்லத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இந்தக் கொள்கை, பொதுமக்களை ராணுவத்தில் சேர்க்காமல், ரஷ்யாவின் துருப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதிபலிக்கிறது.

"குற்றவாளிகள், சிறைவாசிகள் ஆகியோரைப் பற்றி ரஷ்ய மக்கள் கவலைப்படுகிறார்களா? இல்லை என்று நினைக்கிறேன்,” என்கிறார் சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் அமைப்பின் ராணுவ ஆய்வாளர் மைக்கேல் கோஃப்மேன்.

"அவர்களை இழந்தால் ஒன்றும் நஷ்டமில்லை என்றும், அவர்களைப் பற்றி யாரும் கவலைப்படமட்டார்கள் என்றும், அவர்களது இழப்பு பொருளாதாரத்தில் கணிசமான, எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் ரஷ்ய அரசாங்கம் நினைக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.

போருக்குச் சென்ற 50,000 கைதிகள்

வாக்னர் கூலிப்படை குழு, முதலில் சிறைக் கைதிகளை ஆட்சேர்ப்பு செய்தபோது, ​​​​அதன் மறைந்த தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின், உயர் பாதுகாப்பு சிறைகளில் உள்ள குற்றவாளிகளைச் சேர்த்துக்கொண்டார். அவர்களது ‘குற்றவியல் திறமைகள்’ அவருக்குத் தேவை என்றும், அதற்கு ஈடாக அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாகவும் கூறினார்.

பிபிசி மற்றும் ரஷ்ய இணையதளமான Mediazona, சில ஆவணங்களைச் சரிபார்த்தன. அவை, கைதிகளை ஆள்சேர்ப்பு செய்யும் செயல்முறை, அவர்களில் பலருக்கு என்ன நடந்தது, தொடர்ந்து புதிய போர் வீரர்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதன் அவசியம் ஆகியவற்றின் மீது வெளிச்சம் போட்டுக் காட்டின.

யுக்ரேனில் இறந்த குற்றவாளிகளின் குறியீடுகள், அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தோம். அதன்மூலம், வாக்னர் குழு, சிறைகளில் இருந்து கிட்டத்தட்ட 50,000 கைதிகளை வேலைக்கு அமர்த்தியது என்றும், ஒரு கட்டத்தில் ஒவ்வொரு நாளும் 200 போர் வீரர்களை களத்தில் இழந்தது என்றும் தெரியவந்துள்ளது.

அனைத்து கைதிகளின் குறியீடுகளும் ‘K’ என்ற எழுத்தில் துவங்குகின்றன. இது ‘கொலோன்யா’ அல்லது சிறைக் காலனியைக் குறிக்கிறது. முதல் மூன்று எண்கள் அவர்கள் இருந்த சிறைச்சாலையை குறிக்கின்றன. கடைசி மூன்று எண்கள் போர் வீரரது வரிசை எண்ணைக் குறிக்கின்றன. எனவே அந்த எண் பெரிதாக இருந்தால், அந்த சிறைக் காலனியிலிருந்து அதிக எண்ணிக்கையிலான ஆட்கள் வந்தனர் என்று பொருள்.

கொல்லப்பட்ட 17,000 கைதிகள்

ஜூலை 2022 மற்றும் ஜூன் 2023-க்கு இடையில் கிழக்கு யுக்ரேனில் உள்ள பாக்முத் நகரைக் கைப்பற்ற முயன்ற 17,000-க்கும் மேற்பட்ட கைதிகள் கொல்லப்பட்டதாக இழப்பீட்டுப் பதிவு காட்டுகிறது.

இழப்புகளைச் சமாளிக்க வாக்னர் குழுவும், பின்னர் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும், தங்கள் ஆள் சேர்ப்பு உத்திகளை மாற்றியமைத்தனர்.

குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் ஒப்பந்தத்தை மறுக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் போருக்கு எதிரான கொள்கை உடையவர்கள். சிலர் போர்க்களத்தில் இறக்கும் அல்லது காயமடையும் ஆபத்து மிக அதிகம் என்பதால் அதனை மறுக்கிறார்கள். மற்றவர்கள் தங்கள் வழக்கை எதிர்த்துப் போராடுவதற்கு சொந்த நாட்டிலேயே இருக்க விரும்புகிறார்கள்.

ஆண்ட்ரி பெர்லோவின் குடும்பம் இன்னும் அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முடியும் என நம்புகிறது. ஆனால் கடைசியாக ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் அலினா தன் தந்தையை நீதிமன்றத்தில் பார்த்த போது அவரது எடை மிகவும் குறைந்திருந்தது. "அவர் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்கிறார். ஆனால் இது தொடர்ந்தால் அவர் உடைந்து போவார்," என்கிறார் அலினா.

நாங்கள் ரஷ்ய அதிகாரிகளிடம் ஆந்த்ரே பெர்லோவின் வழக்கு பற்றியும், ராணுவத்தில் சேருமாறு கைதிகளை நியாயமற்ற முறையில் அழுத்தம் கொடுக்கிறார்களா என்றும் கேட்டோம். அவர்கள் பதிலளிக்கவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)