"என் வெற்றிக்கு பின்னால் இருப்பது ‘ஜீரோ’ தான்" - 3அடி உயர புகைப்பட கலைஞர்

    • எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

’ஸ்டூடியோவிற்குள் வருபவர்கள் முதலில் என் உயரத்தை பார்த்துவிட்டு போட்டோ எடுப்பதற்கு தயங்குவார்கள். ஆனால் படம் எடுத்து கையில் பிரிண்ட்டு போட்டு கொடுத்த பின் அதன் நேர்த்தியை பார்த்துவிட்டு ஆச்சரியமடைவார்கள்’ என்று நெகிழ்கிறார் சென்னையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் தினேஷ்.

பொதுவாக புகைப்பட கலைஞர்களுக்கு உயரம் என்பது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. ஆனால் தினேஷ் அதற்கெல்லாம் விதிவிலக்காக இருக்கிறார். ஆம் இவரின் உயரம் 3 அடி மட்டுமே!

’என்னுடைய உயரம் காரணமாக சிறு வயதிலிருந்தே பல புறக்கணிப்புகளையும், கேலி கிண்டல்களையும் சந்தித்து இருக்கிறேன். வாழ்க்கையில் கஷ்டங்களை மட்டுமே பிரதானமாக பார்த்து வந்தவன் நான். ஆனால் இது எல்லாவற்றிலிருந்தும் என்னை மீட்டு வந்து, இந்த உலகில் தொடர்ச்சியாக இயங்க வைத்துக்கொண்டிருப்பது என்னுடைய புகைப்பட தொழில்தான்’ என்று பிபிசியிடம் பேசத்துவங்குகிறார் தினேஷ்.

’எனக்கு அப்போது 18 வயது. அதுவரை என்னை ஒரு மாற்றுத்திறனாளியாக மட்டுமே அனைவரும் பார்த்து வந்த நிலையில், என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு போட்டோ ஸ்டூடியோவில் வேலை கொடுத்தவர் என் முதலாளி ஏழுமலை. ஒரு பிறந்தநாள் விழாவில் நான் அவரை சந்தித்தேன். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று கேட்டிருந்தேன். ஒரு விசிட்டிங் கார்டை கொடுத்து நேரில் வந்து பார்க்க சொன்னார்.

பின் ஒருநாள் அவர் சொன்ன இடத்திற்கு சென்றேன். அது சென்னை போரூரில் அமைந்திருந்த ஒரு போட்டோ ஸ்டூடியோ. என்னை வரவேற்ற அவர், உடனடியாக ஸ்டூடியோவில் வேலை கொடுத்து தொழிலை கற்றுக்கொள் என கூறிவிட்டார். அதை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அன்றிலிருந்துதான் என் வாழ்க்கை மாறியது. இப்போது இந்த தொழிலுக்கு வந்து 12 ஆண்டுகள் ஓடிவிட்டது’ என்கிறார் தினேஷ்.

தன்னுடைய இந்த பயணம் குறித்து தினேஷ் மேலும் பேசும்போது ‘என் முதலாளி எனக்களித்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன். ஆரம்ப நாட்களில் இரவு முழுவதும் ஸ்டூடியோவிலேயே தங்கி இந்த தொழிலை முழுமையாக புரிந்துக்கொண்டேன். ஒரு புகைப்படம் எப்படி எடுக்க வேண்டும், லைட்டிங் எப்படி செய்ய வேண்டும் மற்றும் கஸ்டமர்களை எப்படி கையாள வேண்டும் போன்ற அனைத்தையும் நானாகவே கற்றுக்கொண்டேன்.

அது தவிர இங்கே போட்டோ ஆல்பமும் தயார் செய்கிறோம். போட்டோ பிரிண்ட்டுகளை சரியாக வெட்டி எடுத்து ‘ஃப்ரேம்’ போடுவதும், ஆல்பம் போடுவதும் கடினமான வேலை. உயரமாக இருப்பவர்கள் மட்டுமே இதனை எளிதாக கையாள முடியும். ஆனால் அதையும் நான் செய்ய துவங்கினேன். உயரத்திற்காக இரண்டு தகர டின்களை எடுத்து வைத்து, அதன் மேல் ஏறி ஆல்பங்கள் தயார் செய்வேன். என்னுடைய ஆர்வத்தையும், உழைப்பையும் பார்த்து, இந்த ஸ்டூடியோவை கவனித்து கொள்ளும் முழு பொறுப்பையும் என்னிடமே என் முதலாளி ஒப்படைத்து விட்டார்’ என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

புகைப்படம் எடுப்பதற்கும், ஸ்டூடியோவை கவனித்துகொள்வதற்கும் தன்னுடைய உயரம் தனக்கு ஒரு பெரிய தடையாக இல்லை என்கிறார் இவர்.

இது குறித்து அவர் பேசும்போது, ’புகைப்படம் எடுக்கும்போது ’லைட்’ ஸ்டாண்டுகளை சரியான இடத்தில் வைப்பது, கஸ்டமர்களை சரியான முறையில் நிற்கவோ, அமரவோ வைத்து சரியான அமைப்பை(position) முடிவு செய்வது போன்ற அனைத்து வேலைகளையும் யார் உதவியும் இல்லாமல் நான் தனியாகவே செய்துவிடுவேன். பின் நாற்காலிகளின் உதவியுடன் அவர்களை படம் எடுத்து கொடுப்பேன். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஜடை அலங்கார போட்டோ, குரூப் போட்டோ, திருமண வரன் பார்ப்பதற்காக எடுக்கப்படும் தனி நபர் போட்டோ போன்ற ஸ்டூடியோவிற்குள் எடுக்கப்படும் அனைத்து வகையான படங்களையும் நான் எடுத்து கொடுக்கிறேன்.

ஸ்டூடியோவிற்குள் வருபவர்கள் முதலில் என் உயரத்தை பார்த்துவிட்டு போட்டோ எடுப்பதற்கு தயங்குவார்கள். ஆனால் படம் எடுத்து கையில் பிரிண்ட்டு போட்டு கொடுத்தப்பின் அதன் நேர்த்தியை பார்த்துவிட்டு ஆச்சரியமடைவார்கள். சிலர் என் வேலையை பாராட்டி என் தோளில் தட்டுக்கொடுப்பார்கள். அதுதான் எனக்கு ஆத்ம திருப்தி அளிக்கிறது’ என்று நெகிழ்கிறார் தினேஷ்.

ஒரு ’புகைப்பட கலைஞராக’ தினேஷ் தற்போது தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருந்தாலும், இவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது அல்ல. தன்னுடைய உயரக்குறைபாடு காரணமாக பல மோசமான அனுபவங்களை அவர் சந்தித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கர்ப்பப்பையில் இருக்கும்போதே எனக்கு உயரக்குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதேசமயம் என் அம்மாவிற்கும், அப்பாவிற்கும் இடையே சில சண்டைகளும் நடந்துவந்தது. இதனால் நான் பிறந்தவுடனேயே என் அம்மா என்னைவிட்டுச் சென்றுவிட்டார். அவரின் முகத்தை கூட நான் பார்த்தது இல்லை. என் அப்பாவும், பாட்டியும்தான் என்னை வளர்த்தார்கள்.

குழந்தையாக இருக்கும்போது எனது உடல்நிலை அடிக்கடி மோசமடையும். எனது அப்பா நிறைய கடன் வாங்கி எனக்கான மருத்துவ செலவுகளை செய்து வந்தார். ஒருகட்டத்தில் கஷ்டம் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின் எனக்கு எல்லாமுமாக இருந்தது எனது பாட்டி மட்டுமே’ என்று கூறும் தினேஷ், தொடர்ந்து தன் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை பிபிசியிடம் பகிர்ந்துக்கொண்டார்.

‘சிறுவயதிலிருந்தே என் உயரக்குறைபாடு காரணமாக பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். உறவினர்கள் யாருமே என்னிடம் பேசியதில்லை. அப்பா இறந்தபின் என்னை ஹாஸ்டலில் விட்டுவிடும்படி உறவினர்கள் பாட்டியை கட்டாயப்படுத்த துவங்கினர். அவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் என்னை என் பாட்டி ஒரு ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார். அப்போது நான் 5ஆம் வகுப்பு முடித்திருந்தேன். ஆனால் அந்த ஹாஸ்டலை உள்ளடக்கிய அந்த பள்ளி நிர்வாகம், என் உயரத்தின் காரணமாக என்னை மீண்டும் ஒன்றாம் வகுப்பில் அமர வைத்தது. தொண்டையை அடைக்கும் அளவிற்கான துக்கம் எனக்கு அப்போது ஏற்பட்டது.

என்னுடைய உயரம் காரணமாக எனக்கு நல்ல நண்பர்கள் கூட கிடைக்கவில்லை. சக மாணவர்கள் விளையாட செல்லும்போது, நானும் வருகிறேன் என்று கூறுவேன். ஆனால் உன்னால் நீண்ட தூரம் எங்களுடன் நடந்து வர முடியாது என்று கூறி என்னை மட்டும் தனியே விட்டுச்செல்வார்கள். எத்தனையோ நாட்கள் மனதளவில் உடைந்து போய் அமர்ந்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் எனக்காகவே வாழ்ந்து வந்த என் பாட்டியை நினைத்துக்கொண்டு மனதை ஆறுதல்படுத்திக்கொள்வேன். ஆனால் இப்போது அவரும் உயிருடன் இல்லை. உடல்நிலை சரியில்லாமல் சமீபத்தில் அவரும் இறந்துப்போனார்’ என்று கவலையுடன் தெரிவிக்கிறார் தினேஷ்.

இப்போது தினேஷிற்கு உறவினர்கள், நண்பர்கள் என யாரும் இல்லை. அவருக்கு துணையாக இருப்பது அவரது புகைப்பட தொழிலும், அதன் வாடிக்கையாளர்களும்தான். வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து தவிக்கும் ஒவ்வொரு சமயத்திலும், தன்னை தொடர்ந்து இயங்க வைத்துக்கொண்டிருப்பது தன்னுடைய ’கேமரா’ மட்டுமே என்கிறார் தினேஷ்.

’என்னுடைய சொந்த ஊர் கூடுவாஞ்சேரி. அங்கே எனக்கென யாரும் இல்லை. ஆனால் இன்று என்னுடைய தொழில், போரூரில் என்னை பலருக்கு அடையாளப்படுத்தியுள்ளது. என்னை ஒதுக்கிவைத்த அத்தனை உறவினர்களின் வீடுகளிலும் இன்று நான் எடுத்துக்கொடுத்த புகைப்படம் இருக்கிறது. இந்த சமூகத்தில் எனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தியது என் தொழில்தான். இப்போது எனக்கென சில லட்சியங்கள் உள்ளது. சொந்தமாக ஒரு ஸ்டூடியோ வைக்க வேண்டும், பின் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இதையெல்லாம் என்னால் செய்ய முடியுமா என சிலர் நினைக்கிறார்கள். அதற்கெல்லாம் என்னுடைய பதில் ‘முடியும்’ என்பது மட்டுமே. ஏனென்றால் என்னுடைய வெற்றிக்கு பின்னால் எப்போதும் ‘ஜீரோதான்’ இருந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான். முற்றுப்புள்ளிக்கு பின்னால் துவக்கப்புள்ளியை வைப்பது நம்முடைய கைகளில்தானே இருக்கிறது!’ என்று கண்கள் மிளிர கூறுகிறார் இந்த நம்பிக்கை மனிதர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: