You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச்சடங்கு: நினைவிடம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு டெல்லியில் உள்ள பொது தகன மைதானமான நிகம்போத் காட்-ல் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னாள் பிரதமருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் என பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
இதற்கிடையே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வந்தது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவரின் கடிதம் மற்றும் அதற்கு அரசாங்கத்தின் பதிலுக்கு பிறகு, பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று அகாலிதளமும் காங்கிரஸ் உடன் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கும் அரசு ஏன் இடம் ஒதுக்க முடியவில்லை என்பது நாட்டு மக்களுக்கு புரியவில்லை", என்று பதிவிட்டுள்ளார்.
- மன்மோகன் சிங் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கையால் தமிழ்நாடு அடைந்த பலன்கள் என்ன?
- மன்மோகன் சிங்: மூத்த அமைச்சர்கள் மீது புகார் எழுந்தபோது என்ன செய்தார்? பகிரும் பழனிமாணிக்கம்
- மன்மோகன் சிங்: இந்தியாவின் தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி
- மன்மோகன் சிங்: அரசியல் வாழ்வின் முக்கியமான உரைகள்
நினைவிடம் அமைக்க கோரிக்கை
காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே கூறுகையில், "அவர் ஒரு உன்னதமான மனிதர். அவர் நம் நாட்டின் முக்கியமான பிரதமர். அவர் அனைவரின் பேச்சையும் கேட்பார், ஏழைகளைப் பற்றி பேசுவார். நாடு முழுவதும் ஆதார் அட்டையை அமல்படுத்தியவர். அப்படிப்பட்டவருக்காக நாங்கள் குரல் எழுப்புவோம்", என்றார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "அவர் நாட்டுக்காகவும், அதன் மக்களுக்காகவும் உழைத்தார். அவர் நாட்டின் ஒவ்வொரு பிரிவினை சேர்ந்த மக்களையும் கவனித்துக் கொண்டார். அவரது நினைவிடத்திற்காக அரசு சரியான யோசனை செய்து காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்", என்றார்.
இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
"பிரணாப் முகர்ஜி இறந்தபோது, அதற்கு இரங்கல் தெரிவிக்க காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தைக் கூட கூட்டவில்லை. ஜனாதிபதிகளுக்கு இது செய்யப்படுவதில்லை என்று ஒரு மூத்த தலைவர் என்னிடம் கூறினார். இது முற்றிலும் முட்டாள்தனம். ஏனெனில் கே.ஆர். நாராயணன் மறைந்தபோது, காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, அவரது இரங்கல் செய்தியை பிரணாப் முகர்ஜிதான் தயாரித்தார் என அவரது குறிப்பேடுகளிலிருந்து தெரிந்துக்கொண்டேன்'' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இறந்தபோது, இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா நோய்தொற்று ஏற்பட்டிருந்தது. அவர் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி காலமானார்.
உள்துறை அமைச்சகம் சொன்னதென்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்திருந்தது.
அமைச்சரவைக் கூட்டம் நடந்த பிறகு, மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு அரசாங்கம் இடம் வழங்கும் என்று காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமரின் குடும்பத்தினரிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார் என மத்திய அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்ட பின்னரே நினைவிடத்திற்கு நிலம் ஒதுக்கப்படும் என்பதால், அவரது இறுதி சடங்குகள் மற்றும் பிற சடங்குகள் நடைபெறட்டும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோதிக்கு எழுதிய கடிதத்தில், முன்னாள் பிரதமருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது நினைவிடம் கட்டப்படும் இடத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த கடிதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு மற்றும் சாதனைகள் குறித்தும் கார்கே குறிப்பிட்டிருந்தார்.
நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் எப்படி நாட்டை நிதி நெருக்கடியில் இருந்து மீட்டார் என்பதையும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது பொருளாதார கொள்கைகள் நாட்டை பொருளாதார செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி கொண்டு செல்ல உதவின என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மன்மோகன் சிங் வகித்த உயர்ந்த பதவியைக் கருத்தில் கொண்டு, இந்த கடிதத்தில் உள்ள கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
பாஜக கூறுவது என்ன?
முன்னாள் பிரதமரின் நினைவிட விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி பதிலளித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட முன்னாள் பிரதமருக்கு உரிய மரியாதையை அளிப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
''மன்மோகன் சிங் நினைவிடம் கட்டுவது என நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்துதல், அறக்கட்டளை அமைப்பது போன்ற சம்பிரதாயங்களால் நேரம் தேவைப்படும் என காங்கிரஸ் கட்சிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த பணி கூடிய விரைவில் முடிக்கப்படும்.'' என்றார் அவர்
காங்கிரஸ் கட்சி மன்மோகன் சிங்கை மதிக்கவே இல்லை, இந்த சோக நேரத்திலாவது அரசியல் செய்ய கூடாது. பிரதமர் மோதியின் அரசியல் சார்பின்றி அனைத்து தலைவர்களையும் மதிக்கிறது எனவும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)