You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
7,000 கி.மீ. பயணித்து பிறந்த இடத்திலேயே மரணிக்கும் மீன்
ஐரோப்பிய விலாங்கு மீன்கள் 7000 கி.மீ வரை பயணித்து முட்டையிடும் என்று கூறினால் நம்ப முடிகிறதா?
இந்த ஐரோப்பிய விலாங்கு மீன்கள் அஜியன் - மத்தியத் தரைக்கடல் கரைகளை அடைய இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றன.
நன்னீர் நிலைகளில் துவங்கி உப்பு நீர் நிலைகளில் தன்னுடைய வாழ்க்கை சுழற்சியை இந்த விலாங்கு மீன்கள் முடித்துக் கொள்கின்றன
நைல் நதியின் நீரை சூரிய ஒளி கதகதப்பாக்கும் காலத்தில் தான் விலாங்கு மீன்கள் உருவாயின என்று பழங்கால எகிப்தியர்கள் நம்பினார்கள்.
தத்துவஞானி அரிஸ்டாட்டிலோ இந்த விலாங்கு மீன்கள் ஈரமான சேற்றில் இருந்து உருவாயின என்று கூறினார்
1900களின் முதற்பாதி வரை இந்த மீன்கள் குறித்து பலருக்கும் பெரிய அளவில் தெரியவில்லை. டேனிஷ் உயிரியலாளர் ஜோஹான்னேஸ் ஸ்ச்மித் அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த மீன் குறித்த ஆராய்ச்சிக்காக 20 ஆண்டுகளை செலவிட்டார். இறுதியாக சர்காஸோ கடலில் விலாங்கு மீனின் லார்வாக்களை கண்டறிந்தார்.
அங்கிருந்து அந்த விலாங்கு மீன்கள், கடலின் ஓட்டத்தில் ஐரோப்பாவின் மேற்கு கடற்கரைகளை நோக்கி பயணிக்கின்றன. அங்கிருந்து வட அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரை வழியே பயணித்து இறுதியாக மத்திய தரைக் கடலை அடைகிறது. பின்னர் அவை அங்கிருந்து துருக்கியின் நதிகளையும் ஏரிகளையும் அடைகின்றன.
இந்த விலாங்கு மீன்கள் அஜியன் மற்றும் மத்தியத் தரைக்கடல், சிறிய மர்மரா கடல், தென்கிழக்கு துருக்கியில் உள்ள பாஃபா ஏரிகளை இணைக்கும் நீரோட்டங்களில் காண முடியும். இந்த நீர் நிலைகளில் அவை 8 முதல் 13 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. பிறகு அவை பிறந்த இடம் நோக்கி நீந்தத் துவங்குகின்றன.
சர்காஸோ கடலை அடைய ஒரு ஆண்டு வரை எடுத்துக் கொளின்றன. அங்கு அவை இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு மரணிக்கின்றன.
1980களில் துவங்கி ஐரோப்பிய விலாங்கு மீன்களின் எண்ணிக்கையானது 98% வரை குறைந்துள்ளது. அணைகள், காலநிலை மாற்றம், வாழ்விட இழப்பு போன்றவை இந்த மீன்களின் உயிர்பிழைத்திருக்கும் வாய்ப்புகளை குறைத்துள்ளன.
2008-ஆம் ஆண்டில் இந்த விலாங்கு மீன்கள் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினமாக (Critically Endangered) வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய விலாங்கு மீன்களின் இந்த பயணம் இயற்கையின் சிக்கலான அமைப்பை எடுத்துக் காட்டுகிறது.
இந்த விலாங்கு மீன்களின் வாழ்க்கைச் சுழற்சி குறித்த முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு