மூன்று சகோதரிகள் உயிரிழக்க செல்போன் மற்றும் கொரிய கலாசார மோகம் காரணமா? தந்தை பகிர்ந்த தகவல்

(இச்செய்தியில் தற்கொலை தொடர்பாக சில விவரங்கள் உள்ளன, அது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)
உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் 18 வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகள் உயிரிழந்தது தொழில்நுட்ப யுகத்தில் குழந்தைகளை வளர்ப்பது குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
காஸியாபாத்தின் ஷாலிமர் கார்டன் பகுதியில் நடந்த சம்பவம் பல நாட்களாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது, இதுகுறித்து பல்வேறு விஷயங்கள் கூறப்படுகின்றன.
ஷாலிமர் கார்டன் பகுதியின் காவல் உதவி ஆணையர் குமார் சிங் செய்தியாளர்களிடம், "பிப்ரவரி 4ஆம் தேதி அதிகாலை 2:15 மணியளவில், திலா மோர் காவல்நிலையத்துக்குட்பட்ட பாரத் சிட்டி பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது." என்றார்.
"தகவல் கிடைத்ததும் காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்றது. உயரமான கட்டடத்தில் இருந்து குதித்து அந்த மூன்று சிறுமிகளும் உயிரிழந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் லோனி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமிகள் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை விசாரித்துவருகிறது."
இதுகுறித்து காவல்துறை இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றாலும், அச்சிறுமிகளின் மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவி த்தனர்.
டிரான்ஸ் ஹிண்டன் காஸியாபாத் துணை ஆணையர் நிமிஷ் பட்டீல் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், இச்சம்பவத்தை தற்கொலை வழக்காக போலீஸார் விசாரித்துவருவதாக தெரிவித்தார்.
காவல்துறை கூறுவது என்ன?

பட மூலாதாரம், ANI
துணை ஆணையர் நிமிஷ் பட்டீல் கூறுகையில், இந்த வழக்கில் காவல்துறை இன்னும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. அச்சிறுமிகளுக்கு மொபைல் போன் மற்றும் கொரிய கலாசாரம் மீதிருந்த ஆர்வமே இச்சம்பவத்திற்கு முக்கிய காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன" என்றார்.
"அச்சிறுமிகளுக்கு கொரிய இசை, நாடகங்கள், பிரபலங்கள், ஜப்பானிய திரைப்படங்கள் மற்றும் 'ஷின் -சான்', 'டோரேமான்' போன்ற கார்ட்டூன்கள் மீதும் ஆன்லைன் விளையாட்டுகள் மீதும் விருப்பம் கொண்டிருந்தனர்."
"தங்களுடைய பெயர்களை மாற்றும் அளவுக்கு கொரிய கலாசாரத்தால் அச்சிறுமிகள் ஈர்க்கப்பட்டிருந்தனர். எனினும், 'ப்ளூ வேல்' (Blue Whale) போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் மட்டும் இச்சம்பவத்தின் ஒரே காரணமாக கருதப்பட முடியாது."
மூன்று சிறுமிகளும் அதிக ரத்தப்போக்கு மற்றும் காயங்கள் காரணமாக இறந்ததாக அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. உயரமான இடத்தில் இருந்து குதித்ததால் பல எலும்புகளும் உடைந்துள்ளன.
காவல்துறை கண்டெடுத்த தற்கொலை கடிதத்தில் தங்களை அடித்ததாக குறிப்பிட்டுள்ளனர், ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அத்தகைய காயம் இல்லை என நிமிஷ் பட்டீல் தெரிவித்தார்.
மேலும் அவர், "அவர்களின் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியான பிரச்னைகள் இருந்துள்ளன, குடும்ப நெருக்கடிகளும் விஷயங்களை கடினமாக்கியுள்ளன. கோவிட் தொற்றுக்குப் பிறகு, அக்குடும்பம் அதிகமான நிதி இழப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளது, அதிக கடன் சுமையிலும் சிக்கியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, அச்சிறுமிகள் பள்ளியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்."
அவர் கூறுகையில், "குடும்பத்தில் சண்டைகளும் நடந்துள்ளன. மகள்கள் மீது அவர்களின் தந்தை மிகக் கடுமையாக நடந்துகொள்வார். ஆரம்பத்தில், அச்சிறுமிகளிடம் இருந்த மொபைல் போன்களை தங்களுக்குள் பகிர்ந்து கோண்டுள்ளனர். ஆனால், பொருளாதார அழுத்தத்தால் அதில் ஒரு செல்போனை ஆறு மாதங்களுக்கு முன்பு அவர்களின் தந்தை விற்றுள்ளார். இச்சம்பவத்திற்கு 10-15 நாட்களுக்கு முன்பு மற்றொரு மொபைல்போனையும் விற்றுள்ளார்."
சிறுமிகளின் தந்தை மற்றும் குடியிருப்புவாசிகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
உயிரிழந்த சிறுமிகளின் தந்தை சேத்தன் குமாரிடம் பொருளாதார சிக்கல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "20-30 லட்ச ரூபாய் அளவுக்கு எனக்கு இழப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் அதற்காக குழந்தைகள் தற்கொலை போன்ற ஒரு முடிவை எடுப்பார்கள் என்று நினைக்கவில்லை. அவர்கள் தங்கள் பெயர்களை கூட மாற்றியுள்ளனர்." என்றார்.
காவல்துறை கூறுகையில், "சேத்தன் குமாருக்கு இரு மனைவிகள் உள்ளனர், அவர்கள் இருவரும் சகோதரிகளாவர். அவரது மைத்துனியும் அவர்களின் வீட்டில் வசித்துவருகிறார். அவருடைய இரு மனைவிகள் மூலம் சேத்தன் குமாருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்."
பங்குதரகரான சேத்தன் செய்தியாளர்களிடம், "என் மகள்கள் என்னிடம், 'அப்பா நாங்கள் கொரியாவுக்கு செல்கிறோம்' என கூறுவார்கள். தங்களின் இந்திய பெயர்களால் அவர்கள் எரிச்சலடைய ஆரம்பித்தனர்." என்றார்.
அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகளிடம் இச்சம்பவம் குறித்து பிபிசி பேசியது. அவர்கள் வசித்த குடியிருப்புக்கு இரண்டு தளங்களுக்கு கீழே வசித்துவரும் ஆர்கே சிங்கானியா கூறுகையில், அன்றைய நாள் இரவில் சத்தம் கேட்டு தாங்கள் எழுந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து, அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, மூன்று சிறுமிகளின் உடல்களும் தரையில் இருந்துள்ளன, இதைத் தொடர்ந்து போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
குடியிருப்பின் செயலாளர் ராகுல் குமார் ஜா பிபிசி ஹிந்தியிடம் கூறுமையில், "நான் மேலே சென்று பார்த்தபோது அவர்களின் அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அந்த அறையிலிருந்துதான் சிறுமிகள் குதித்ததாக கூறப்படுகிறது. போலீஸார் அந்த அறையின் கதவை உடைத்தனர். அந்த அறையின் உள்ளே குடும்ப புகைப்படங்கள் தரையில் ஆங்காங்கே கிடந்தன. அந்த அறையில் தற்கொலை கடிதமும் கிடைத்தது, அதில் 'மன்னித்து விடுங்கள், அப்பா' (Sorry Papa) என எழுதப்பட்டிருந்தது." என்றார்.
இந்த சம்பவத்திற்கு பின் குழந்தைகள் மொபைல் போனுக்கு அடிமையாகுதல் குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமெடுத்துள்ளன.
அந்த குடியிருப்புப் பகுதியை சேர்ந்த குசும் கூறுகையில், "எங்கள் குழந்தைகளால் இரவில் தூங்க முடியவில்லை. அவர்கள் மிகவும் பயந்துள்ளனர். தங்கள் குழந்தைகள் மொபைல்போன்களை பயன்படுத்துகின்றனர் என்பதையாவது பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்." என்றார்.
மேலும், அப்பகுதியில் வசிக்கும் பலரும் மொபைல்போனை கையாளுதல் மற்றும் ஆலோசனைகளை பெறுவது குறித்து விவாதிப்பதை பார்க்க முடிந்தது.

குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாதலை கட்டுப்படுத்துவது எப்படி?
குழந்தைகள் மனநல மருத்துவர் நிலேஷ் தேசாய் கூறுகையில், செல்போனுக்கு அடிமையாவது என்பது எந்தவொரு போதைப்பொருளுக்கும் அடிமையாவதை போன்றது என்றார்.
அவர் விளக்குகையில், "பதின்பருவத்தினரிடம் இருந்து செல்போனை பிடுங்குவது என்பது ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குழந்தை செல்போனுக்கு அடிமையாவது என்பது போதைப்பொருளுக்கு அடிமையாவது போன்றதுதான்." என்றார்.
அவர் கூறுகையில், "மொபைல் போனை பயன்படுத்தும்போது மகிழ்ச்சியை வரவழைக்கும் டோபமைன் ஹார்மோன் தூண்டப்படுகிறது. இது, எந்தவொரு வேதிப்பொருளை போன்றும் வலிமைமிக்கது. குழந்தைகளிடமிருந்து செல்போனை பிடுங்கும்போது, அவர்களிடமிருந்து அந்த வேதிப்பொருள் விடுபடுகிறது." என்றார்.
டெல்லியை சேர்ந்த மனநல மருத்துவர் பாவனா பார்மி விளக்குகையில், "பள்ளிக்கு அடிக்கடி வராமல் இருப்பது கல்வியைத் தவறவிடுவதாக அர்த்தமல்ல. மாறாக அது, மனநல ரீதியான பாதிப்புகளின் சங்கிலியை உருவாக்குகிறது. வளரிளம் பருவத்தினருக்கு பள்ளி என்பது தகவல்களை பெறும் இடமாக மட்டும் அல்லாமல், ஆரோக்கியமான வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான அமைப்பாக செயல்படுகிறது" என்றார்.
பாவனா கூறுகையில், "கொரிய கலாசாரத்துடன் இணைந்த பாப், தொடர்கள், அழகு சார்ந்த டிரெண்டுகள், பிரபலங்கள் ஆகியவற்றின் மீதான தீவிரமான ஆர்வம் குறித்து பல பதின்பருவத்தினர் மற்றும் குடும்பங்களுக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன், அந்த ஆர்வம் ஒரு சாதாரண ஆர்வமாக மட்டும் இருப்பதில்லை. அளவில்லாத இத்தகைய நிகழ்ச்சிகளும் ஏஐ சாட்பாட் உதவியுடன் அத்தகைய கதாபாத்திரங்கள் போன்று நடிப்பதும் இன்னும் ஆபத்தானதாக மாறலாம்." என்றார்.
"பல ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த அந்த சகோதரிகள் கொரிய கலாசாரத்துடன் ஆழமான நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அவர்கள் ஒன்றாகக் கவனித்து, விவாதித்து, ஒருங்கிணைந்த கொரிய அடையாளத்தை உருவாக்குகின்றனர். இதனால், தனிமையான ஒரு வட்டம் உருவாகிறது. அந்தச் சூழலில், கற்பனையே அவர்களுக்கு பாதுகாப்பானதும், உற்சாகமூட்டுவதுமான ஒரே இடமாக மாறுகிறது," என்று அவர் விளக்குகிறார்.
அத்தகைய சூழலில் பெற்றோர்கள் பயப்பட தேவையில்லை என, இரு மருத்துவர்களும் கூறுகின்றனர். இத்தகைய வழிமுறைகளை பின்பற்றலாம் என்றும் கூறுகின்றனர். அதன்படி,
- தாங்கள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் குறைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
- தங்களுடைய செல்போன் அல்லது ஐபேடை குழந்தைகள் எவ்வளவு மணிநேரம் பயன்படுத்தலாம் என்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
- விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும், அவர்களுடன் தொடர்ந்து உரையாட வேண்டும்.
(பிபிசி ஹிந்தி பயிற்சி செய்தியாளர் சுப் ராணாவின் கூடுதல் தகவல்களுடன்)
முக்கிய குறிப்பு
தற்கொலை என்பது ஒரு தீவிரமான உளவியல் மற்றும் சமூகப் பிரச்னை. நீங்கள் மன அழுத்தத்தை அனுபவித்தால், இந்திய அரசின் ஜீவன்சதி உதவி எண்ணை 18002333330 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் பேச வேண்டும்.
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












