You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஏர் பேக் மீது மோதி சிறுவன் பலி': காப்பாற்ற வேண்டிய ஏர் பேக் உயிரையே பறிக்குமா?
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
கார் மோதி விபத்து ஏற்பட்டு ஏர் பேக் வெடித்ததில், முன் இருக்கையில் தந்தையின் மடியில் அமர்ந்திருந்த 7 வயது சிறுவன் காயங்களால் உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வீராமுத்து. இவர் தனது 7 வயது மகன் கெவின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இருவருடன் வாடகை காரில் பழைய மகாபலிபுரம் சாலை வழியாக சென்னையை நோக்கி பயணித்துள்ளார்.
''திருப்போரூரைக் கடந்து சென்றபோது முன்னே சென்ற வாகனம் வலதுபுறம் திரும்ப உடனடியாக நின்றதால் பின்னே வந்த இவர்களின் கார் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் உள்ள ஏர் பேக் உடனடியாக வேலை செய்யவே முன்னே தந்தையின் மடியில் அமர்ந்திருந்த கெவினுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.'' என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
காவல்துறையினர் அனைவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கெவின் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். முன்னே சென்ற வாகனத்தின் ஓட்டுநரான சுரேஷ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏர் பேக் பயன்பாடு, வாகனத்தில் சிறுவர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்ல பாதுக்காப்பான முறைகள் பற்றி ஆட்டோமொபைல் துறை வல்லுநரான த முரளியிடம் பிபிசி பேசியது.
தற்போது இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான கார்களில் முன்புறம் இரண்டு, முன் இருக்கைக்கு பின் புறம் இரண்டு பக்கவாட்டில் இரண்டு என மொத்தம் 6 ஏர் பேக்குகள் இருக்கும் எனத் தெரிவிக்கிறார் முரளி.
ஏர் பேக் மற்றும் சீட் பெல்ட் சென்சார்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.
சீட் பெல்டின் அவசியம்
ஆட்டோமொபைல் துறையில், சீட் பெல்ட் மிகவும் முக்கியமான அம்சமாக இடம்பெறுகிறது. சீட் பெல்டின் அவசியம் கருதியதால்தான் அதற்கு காப்புரிமை பெறப்படவில்லை என்கிறார் முரளி
அமெரிக்காவில் 1987 முதல் 2017 வரையிலான 30 ஆண்டு காலத்தில் 50,457 உயிர்கள் சீட் பெல்ட் அணிந்ததால் பாதுகாக்கப்பட்டதாக அமெரிக்க போக்குவரத்துறை தெரிவிக்கிறது.
கார் என்று வருகையில் சீட் பெல்டும் ஏர் பேக்கும் இரு அவசியமான, இன்றியமையாத அம்சங்கள் எனக் கூறும் முரளி, "சீட் பெல்ட் அணிந்தால்தான் ஏர் பேக் சரியாக வேலை செய்யும்." என்றார்.
ஏர் பேக்கிற்கு முந்தைய முதல் கட்ட பாதுகாப்பு சீட் பெல்ட்தான் என்கிறார் முரளி
"கார் திடீரென இடது அல்லது வலது புறம் திரும்பினாலோ அல்லது மெதுவாக எங்காவது மோதினாலோ ஏர் பேக் வேலை செய்யாது. தீவிர விபத்துகளின்போது ஏர் பேக் உடனடியாக வெளிவரும். அத்தகைய சூழல்களில் சீட் பெல்ட்தான் முதல் கட்ட பாதுகாப்பு." என்றார்.
ஏர் பேக் எப்போது வேலை செய்யும்?
வாகனம் நேராக மோதினால் முன் பக்கம் உள்ள நான்கு ஏர் பேக் மட்டுமே திறக்கும். பக்கவாட்டில் மோதினாலோ அல்லது வாகனம் தடம் புரண்டாலோ தான் பக்கவாட்டில் உள்ள ஏர் பேக் திறக்கும்.
"வாகனம் விபத்துக்கு உள்ளாகிறபோது உடல் முன்னே தள்ளப்படும். அப்போது சீட் பெல்ட் தான் உடனடியாக உடலை பின்னுக்கு இழுக்கும். ஏர் பேக்கும் மைக்ரோ நொடிகளில் திறந்துவிடும். அப்போது உடல் பின்னே இருக்க வேண்டும், இல்லையென்றால் ஏர் பேக்கால் பலன் இருக்காது." எனத் தெரிவித்தார்.
இருக்கையில் உள்ள ஹெட் ரெஸ்டை நீக்கக்கூடாது எனக் கூறும் அவர் அதற்கான காரணத்தையும் விளக்கினார்.
"தற்போது பலரும் ஹெட் ரெஸ்டை நீக்கிவிட்டு பயணிக்கின்றனர். முன் இருக்கையில் தான் தாக்கம் அதிகமாக இருக்கும். உடல் முன்னே சென்று பின்னுக்கு வருவது, ஏர் பேக் திறப்பது என அனைத்துமே சில மைக்ரோ விநாடி இடைவெளியில் நடக்கக்கூடியவை. உடல் இருக்கையில் பின் வந்துமோதுகிறபோது ஹெட் ரெஸ்ட் இல்லையென்றால் முதுகெலும்பு உடைந்துவிடக்கூடிய ஆபத்து உள்ளது." எனத் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு உள்ள கட்டுப்பாடு என்ன?
குழந்தைகள், அவர்களுக்கு என்ன வயது என்றாலும் நாம் செய்யக்கூடாத முதல் விஷயம் மடியில் அமர வைத்து பயணிப்பதுதான் என்கிறார் முரளி.
மேலும் "குழந்தைகளை பின் இருக்கையில்தான் அமர வைக்க வேண்டும்." என்றார்.
"உயிரைப் பாதுகாக்கும் ஏர் பேக்காலும் காயங்கள் ஏற்படும். உரிய இடைவெளியில் அமர்ந்திருந்தால்தான் ஏர் பேக் பயனுள்ளதாக இருக்கும்." என்றும் தெரிவித்தார் முரளி.
சிறுவயதுள்ள குழந்தைகளுக்கு என ஐசோபிக்ஸ் என்கிற பிரத்யேக இருக்கை இருக்கிறது. இதனை பின் இருக்கையில் பொருத்திக் கொள்ள முடியும். அதை நிறுவி, குழந்தைகளை அதில் அமர்த்தி முறையாக சீட் பெல்ட் அணிந்தால் தான் ஏர் பேக் வேலை செய்யும் என்கிறார் முரளி.
பின் இருக்கையிலும் குழந்தைகளை மடியில் அமர வைக்கக்கூடாது எனக் கூறும் முரளி அந்தச் சூழலில் ஏர் பேக் குழந்தைகளுக்கு கிடைக்காது. வாகனம் மோதுகிற வேகத்தில் அவர்கள் தூக்கி வீசப்படுவார்கள். குழந்தைகளாக இருந்தாலும் சீட் பெல்ட் அணிந்து இருக்கையில் அமர்த்தி பயணிப்பது தான் பாதுகாப்பானது எனத் தெரிவித்தார்.
"முன்னர் கார்களில் 4 சீட் பெல்ட் மட்டுமே இருக்கும். தற்போது விதிகள் கடுமையாக்கப்பட்டு அனைத்து இருக்கைகளிலும் சீட் பெல்ட் இடம்பெறுகிறது. அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
வாகனங்களில் பம்பர்களை தவிர்க்க வேண்டும் எனக் கூறும் முரளி, "வாகனம் அதிர்வை உணர்ந்தால் தான் ஏர் பேக் திறக்கும். பம்பர் மாற்றினால் ஏர் பேக் திறக்காது. அது மிகவும் ஆபத்தானது." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு