தங்க நகைக்கடன்: நகை வாங்கிய ரசீது இல்லாவிட்டால் என்ன செய்யலாம்?
தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
நகைக்கடனில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில் புதிய விதிகள் கொண்டுவரப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ஆனால், இவை எளிய, நடுத்தர குடும்பங்கள் மத்தியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்கின்றன நுகர்வோர் அமைப்புகள்.
இந்தியாவில் வங்கி மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் முதன்மைப் பொதுமேலாளர் தருண் சிங் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தங்க நகைக்கடனில் முறைகேடுகள் (Irregular practices) நடப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தங்கநகைக்கடன் தொடர்பாக ஒன்பது வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
- தங்கத்தை அடமானம் வைக்கும்போது அதன் மதிப்பில் 75 சதவீதம் மட்டும் கடனாக பெறலாம். அதாவது, நகையின் மதிப்பு 100 ரூபாய் என இருந்தால் 75 ரூபாய் வரை கடன் கொடுக்கப்படும்.
- அடமானம் வைக்கப்படும் நகையின் உரிமையாளர் என்பதற்கான ஆதாரத்தை கடன் வாங்கும் நபர், வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
- தங்க நகையின் தரம், தூய்மை ஆகியவை குறித்து கடன் பெறுபவருக்கு வங்கியில் இருந்து சான்று வழங்க வேண்டும். இதில் வங்கியும் கடன் பெறுபவரும் கையொப்பமிட்ட சான்றிதழின் நகல் வங்கியில் வைக்கப்பட வேண்டும்.
- தங்க நகைகளில் 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டும் கடன் வழங்கப்படும்.
- 24 காரட் தங்க நகையாக இருந்தாலும் 22 காரட்டின் மதிப்பிலேயே எடையைக் கணக்கிட்டு கடன் வழங்க வேண்டும்.
- தங்க நகைகளுக்கு மட்டுமே கடன்கள் வழங்கப்படும். நகை அல்லாத தங்கக் கட்டிகளுக்கு கடன் வழங்கப்படாது.
- 1 கிலோ வரையிலான தங்க நகைகளை மட்டுமே வங்கியில் அடமானம் வைக்க முடியும்.
- நகைக்கடன் வழங்கும்போது கடன் தொடர்பான அனைத்து தகவல்களும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
- செலவு மற்றும் வருமானம் தொடர்பான இரு வகை கடன்களுக்கு இது பொருந்தும். செலவு வகை கடன் என்பது அவசர தேவைக் கடன்களாகவும் வருமான வகை கடன் என்பது முதலீடு செய்வதற்காக பெறப்படும் கடன்.
- தங்க நகைக்கடனை திருப்பிச் செலுத்திய உடன் 7 வேலை நாள்களில் நகையை வங்கியில் இருந்து ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கவில்லையென்றால் அடுத்து வரும் ஒவ்வொரு நாளுக்கும் ஐந்தாயிரம் ரூபாயை வாடிக்கையாளருக்கு அபராதமாக வழங்க வேண்டும்.
- நகைகளை ஏலத்துக்குக் கொண்டு செல்லும்போது அதுகுறித்து வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால் வங்கி மீது வழக்கு தொடரலாம்.
- வெள்ளி நகைகளுக்கும் கடன் பெறலாம். அதில், 999 தரத்தில் உள்ள வெள்ளி நகைகளை மட்டும் அடமானம் வைக்க முடியும்.
- நகை வாங்கியதற்கான ரசீது இல்லாத பட்சத்தில், நகை தன்னுடையதுதான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழை வங்கியிடம் வாடிக்கையாளர் அளிக்க வேண்டும். ஆடிட்டர் போன்றவர்களிடம் இந்த உறுதிமொழிப் பத்திரத்தை பெற்று வங்கியிடம் சமர்ப்பிக்கலாம்.
ரசீது கட்டாயம் சாத்தியமா?
"தங்கத்தை அடமானம் வைக்கும்போது உரிமையாளர் என்பதற்கான ரசீது கட்டாயமாக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று" என்கிறார், நாகப்பன்.
"ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் குறைவு. பல வீடுகளில் மூதாதையரின் நகைகள் உள்ளன. அதற்கான ஆவணங்களைக் காட்ட முடியாது" என்கிறார்.
நகைகளை கொள்ளையடிக்கும் கும்பல் அதை உருக்கி விற்றுவிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறும் நாகப்பன், "புதிய விதிகளின்படி ரசீது கட்டாயமாக்கப்பட்டால் அவற்றை விற்பது சிரமம்" எனக் கூறுகிறார்.
"இந்தியாவில் நகைகளுக்கான ரசீது பெரும்பாலான வீடுகளில் இருக்காது. கடைகளில் ரசீது இல்லாமல் தங்க நகைகளை சற்று குறைந்த விலையில் வாங்குவதும் நடக்கிறது. புதிய கட்டுப்பாடுகளால் இனி அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"தங்க நகைகளை கிலோ கணக்கில் யாரும் வாங்குவதில்லை. அதை சேமிப்பாக மக்கள் பார்க்கின்றனர். ரசீது இருந்தால் தான் அடமானம் என்ற விதியை செயல்படுத்துவதில் சாத்தியக் குறைவு ஏற்படும்" எனக் கூறுகிறார், நுகர்வோர் நலன் வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் நடராஜன்.
"தமிழ்நாட்டில் 90 சதவீத நகைக்கடைகள், ரசீது போட்டு நகைகளை விற்கின்றன. குறிப்பிட்ட நகை தனக்குச் சொந்தமானது எனக் கூறும் வகையில் ஆடிட்டர் மூலம் சான்றளித்தால் போதுமானது. நகைக்கடன் பெறலாம்," எனக் கூறுகிறார், சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி.
கட்டுப்பாடுகள் விதிப்பது சரியானதா?
"நகைகளை வசதியில்லாதவர்கள், பணம் தேவைப்படுகிறவர்கள், நெருக்கடியான சூழல்களில் உள்ளவர்கள் மட்டுமே அடமானம் வைக்கின்றனர். வசதியுள்ளவர்கள் வங்கி லாக்கர்களை நாடுகின்றனர்" எனக் கூறுகிறார், சென்னை மடிப்பாக்கத்தில் வசிக்கும் ஸ்ரீலட்சுமி.
"நகை அடமானத்துக்கான விதிகளை அதிகரிக்கும்போது வங்கியை நாடாமல் அங்கீகரிக்கப்படாத அடகுக் கடைகளை எளிய மக்கள் நாட வேண்டிய நிலை ஏற்படும். இது அவர்களை மேலும் துயரத்தில் கொண்டு போய் சேர்க்கும்" எனவும் அவர் தெரிவித்தார்.
தனியார் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்த நகைகளை மீட்க முடியாமல் மறு அடகு வைக்கும் நிலை அதிகரித்துள்ளதாகக் கூறும் ஸ்ரீலட்சுமி, "எளிதில் பணம் கிடைக்கும் இடத்துக்குத்தான் மக்கள் செல்வார்கள். அதற்குத் தடைகளை விதிக்கும்போது மேலும் சுமையை அதிகரிக்கவே செய்யும்" என்கிறார்.
இதே கருத்தை முன்வைக்கும் நகை அடகுக் கடை நடத்தி வரும் ஜீவன், "கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்போது வங்கியை நாடாமல் தனி நபர்களைத் தேடும் நிலை உருவாகும். இதன்மூலம் அதிக வட்டி வசூலிக்கும் நபர்களிடம் அவர்கள் சிக்க வேண்டியது வரலாம்" எனக் கூறுகிறார்.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



