"நாங்கள் இணைந்து வாழ கல்யாணம் தேவையில்லை, காதல் போதும்" - லிவ்-இன் உறவில் வாழ்ந்த பெண்ணின் அனுபவம்

    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழ்

"என்னுடைய சுதந்திரத்தையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்தாத உறவும், வாழ்க்கையும் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த வகையில் 10 ஆண்டு காதல் தராத புரிதலையும் நெருக்கத்தையும் லிவ்-இன் வாழ்க்கை தந்துள்ளது" என்கிறார் கவிதா கஜேந்திரன்.

சென்னையைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்துப் பெண்ணான இவர் இடதுசாரி அரசியல் தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர். பழைமைவாதமும் ஆணாதிக்கமும் மிகுந்த, ஆண்-பெண் இடையே இயல்பாக அரும்பும் காதலைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் நமது சமூகத்தில், காதல் மண வாழ்க்கை விரும்பியபடி அமையாமல் போனதால் லிவிங் டுகெதர் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.

இடதுசாரி எழுத்தாளர் ராஜ சங்கீதனுடன் சுமார் 4 ஆண்டுகள் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்த கவிதா கஜேந்திரன் இடதுசாரி அரசியல் தளத்தில் இளம் வயது முதலே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்.

தனது அரசியல் தெளிவு, வாழ்க்கை குறித்த புரிதல் மட்டுமின்றி, காதல் , திருமணம், லிவிங் டுகெதர் வாழ்க்கை அனுபவங்ளையும் அதற்கு குடும்பத்தினர், உறவுகள் மட்டுமல்லாது இந்த சமூகம் எவ்வாறு எதிர்வினையாற்றியது என்பது குறித்தும் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். அவை அனைத்தும் இனி அவரது வார்த்தைகளில்...

வட சென்னையை பூர்வீகமாகக் கொண்டவராக என் அப்பாவின் குடும்பப் பின்னணி வசதியானதாக இருந்தாலும், அவரது வாழ்க்கை வசதியானதாக அமையவில்லை. எட்டாம் வகுப்பு வரை படித்திருந்த அவர் லாரி டிரைவராக பணிபுரிந்தார். அம்மா, தம்பி என்று எங்களுடையது சிறிய, நடுத்தர குடும்பம்.

கல்லூரிப் படிப்பை முடித்தபோதே நான் அரசியல் தெளிவு பெற்றுவிட்டேன். என் அரசியல் களத்தையும், இயங்கு தளத்தையும் தீர்மானித்துக் கொண்டுவிட்ட நான், அதற்கான என்னுடைய சுதந்திரத்தையும் இயங்கும் வெளியையும் எதற்காகவும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

எனக்கு 26 வயதாக இருக்கும் போது, வீட்டில் திருமணம் முடித்தே தீர வேண்டும் என்று என்னை நிர்பந்தித்தார்கள். உறவுகள், தெரிந்தவர்கள் மூலம் மட்டுமின்றி, மேட்ரிமோனி மூலமாகவும் வரன் பார்த்தார்கள். ஆனால், எனக்கோ யார், எப்படிப்பட்டவர் என்று தெரியாத ஒருவரை எப்படித் திருமணம் செய்வது என்ற எண்ணம் இருந்தது.

என் நட்பு வட்டத்தில் 10 ஆண்டுக்கும் மேலாக இருந்தவரும் கிட்டத்தட்ட அதே எண்ணத்துடன்தான் இருந்தார். வெறும் நட்பு மட்டுமல்ல, எங்களுக்குள் காதலும் இருந்தது. ஒரே பள்ளி, கல்லூரியில் பழகிய எங்களுக்கு ஒருவரை ஒருவர் நன்கு தெரியும். காதலில் இருந்த நாங்கள் இருவரும் பிரிந்திருந்த கால கட்டம் அது. ஆனாலும்கூட எங்களிடைய ஆரோக்கியமான நட்பு தொடரவே செய்தது.

ஒரே எண்ணத்துடன் இருந்த நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்யக் கூடாது என்று நண்பர்கள் வற்புறுத்தினர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். எங்கள் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அந்த மணவாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை. எங்களுக்குள் புரிதல் இருந்தாலும், திருமணம் என்ற அமைப்பில் குடும்பம், உறவுகள், சமுகத்தின் தலையீடுகள் அதிகம் இருந்தன.

இவையே, என் சுதந்திரத்தையும் என் இயக்கத்தையும் தடுத்தன. குடும்ப அமைப்பின் அழுத்தத்தால் ஒரு கட்டத்தில் என் கணவரும் கட்டுப்பாடுகளை விதிக்க முற்பட்டதால் இருவருக்கும் இடையே கருத்து முரண்கள் எழுந்தன.

இருவரும் சுமூகமாகப் பிரிவது என தீர்மானித்தோம். நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றோம். மூன்றே ஆண்டுகளில் எங்கள் மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது. என்னுடைய சான்றிதழ்கள், சில ஆடைகள், 1,500 ரூபாய் பணத்துடன் வீட்டில் இருந்து வெளியேறினேன்.

முதலில் ஒரு மாதம் என்னுடைய உறவினர் வீட்டில் தங்கியிருந்த நான், பின்னர் சில பெண் நட்புகளுடன் சேர்ந்து அபார்ட்மென்ட்டில் வீடு எடுத்து தங்கினேன். சென்னையில் வசித்தாலும் பெற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் தனித்தே வாழ்ந்தேன். சுமார் 2 ஆண்டு காலம் நீடித்த இந்த வாழ்க்கையே நான் யார் என்பதைப் புரிய வைத்தது.

எனக்கு விருப்பமான இடதுசாரி அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த எனக்கு அதே தளத்தில் இயங்கிய, ஒத்த கருத்து கொண்ட எழுத்தாளர் ராஜசங்கீதனின் அறிமுகம் சமூக ஊடகம் வாயிலாகக் கிடைத்தது.

பெரியார் பிறந்தநாளன்று இருவரும் முதன் முறையாக நேரில் சந்தித்துக் கொண்டோம். அது முதல் சுமார் ஒரு வார காலம் நிறைய பேசினோம். அதன் பிறகு 2 - 3 மாதங்கள் வட இந்தியாவில் பயணம், பிரசாரம் என்று எனக்குக் கழிந்தது. அப்போதும் அவ்வப்போது அவர் நேரில் வந்து சந்தித்தார்.

இருவரும் ஒரே அரசியல் சித்தாந்த பின்புலம் கொண்டிருந்ததால் புரிதல் எளிதில் நிகழ்ந்தது. நான் தான் முதலில் விருப்பத்தைத் தெரியப்படுத்தினேன். முந்தைய கசப்பான அனுபவங்களால் கல்யாணம் வேண்டாம், அது தேவைப்படவில்லை என்றும் அவரிடம் நான் தெளிவுபடுத்தினேன்.

சுமார் 4 ஆண்டுகள் லிவிங் டுகெதர் முறையில் விரும்பியபடி வாழ்க்கையைச் செலுத்தினோம். நாங்கள் சேர்ந்து வாழ காதல் இருந்தது. ஆனால் திருமணம் தேவைப்படவில்லை.

பிறகு, பாஸ்போர்ட், விசா தேவைகளை முன்னிட்டு கடந்த ஆண்டு பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். இது எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை எந்தவிதத்திலும் மாற்றிவிடவில்லை.

திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தது ஏன்?

திருமணம் என்பது பெண்களை ஒடுக்கும் இடமாகவே இருக்கிறது. ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் வாழ வேண்டும் என்று அது வரையறுக்கிறது. திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றுமே, இந்த ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண்ணின் காலை கட்டி அதல பாதாளத்தில் இறக்குவதாகவே அமைந்துள்ளன.

ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஒட்டுமொத்த குடும்பமுமே கட்டுப்படுத்த அல்லது தீர்மானிக்க முயல்கிறது. ஆயிரம் பேர் முன்பு கோலாகலமாக நடந்தேறும் திருமணங்கள், நம்மைச் சேர்ந்து வாழ அழுத்தம் கொடுக்கின்றன; நிர்பந்திக்கின்றன. இதில் நமக்கான வாழ்வு காணாமல் போய் விடுகிறது. நான் மனுஷியாக இயங்குவதை அது தடுக்கிறது.

ஆண்-பெண் சேர்ந்து வாழும் வாழ்க்கையை ஒரு கயிறோ, பேப்பரோ, கையெழுத்தோ தீர்மானித்துவிட முடியாது. வயது வந்த ஆண்-பெண் இடையே நல்லதொரு உரையாடல் நிகழ வேண்டும். இருவருக்கும் இடையிலான ஆத்மார்த்தமான புரிதலும், நெருக்கமுமே அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.

'ஓ பக்கங்கள்' என்ற எழுத்தாளர் ஞானியின் படைப்பால் கவரப்பட்டு, அவருடைய பரீக்ஷா நாடக அமைப்பில் இணைந்து பணியாற்றினேன். 10 ஆண்டுகள் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்த பிறகு வெறும் சம்பிரதாயத்திற்காக மாலை மாற்றிக் கொண்டவர் அவர். அவரது எழுத்துகளும் வாழ்க்கை முறையும் என்னில் தாக்கத்தை ஏற்படுத்தின.

கல்லூரி முடித்ததுமே அரசியல் தேடலில் இருந்த நான், எனக்கு விருப்பமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள திருமணம் என்ற அமைப்பு தடைக்கல்லாக இருப்பதை உணர்ந்து கொண்டேன். என்னுடைய சுதந்திரத்திற்கும், தடையற்ற இயக்கத்திற்கும் சரியான புரிதலுடன் கூடிய பார்ட்னருடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஒதுக்கி வைத்த உறவுகளும் நட்புகளும்

முன்னாள் கணவரை 10 ஆண்டு காலம் காதலித்திருக்கிறேன். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. அதற்காக, வீட்டிற்குள் நிறைய சண்டை நடந்திருக்கிறது. குடும்பத்தினர், உறவினர்கள் கூடி பஞ்சாயத்து செய்துள்ளார்கள். நான் பலமுறை அடி வாங்கியிருக்கிறேன்.

அப்போதெல்லாம் என் அம்மாவுடன் அமர்ந்து நிறைய பேசுவேன். காதல் தப்பில்லை என்று அவருக்குப் புரிய வைத்தேன். அது முதல் என் வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களையும் அம்மாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். என் காதல், திருமணம், மணமுறிவு என அனைத்தையும் என் அம்மா அறிவார். நான் பட்ட கஷ்டங்களை அவர் அறிந்து கொண்டிருந்தார். என்னையும் அவர் நன்றாகப் புரிந்து கொண்டார்.

தனியாக இருக்கவும் முடியாது, அதேநேரத்தில் திருமணம் செய்து கொள்ளவும் முடியாது என்பதை அவரிடம் புரிய வைத்தேன். நம் வாழ்க்கையில் யார் முக்கியம், யார் நம்முடன் இருக்கப் போகிறார்கள் என்பது குறித்து அவரிடம் விளக்கினேன்.

நான் விரும்பியபடி மேற்படிப்பைத் தொடர விடாததாலும், என் மண வாழ்க்கை வெற்றிகரமாக அமையாததாலும் வருத்தத்தில் இருந்த என் அம்மா, "அவளுக்குப் பிடித்த வாழ்க்கையை நல்ல ஒழுக்கத்தோட நடத்துறா" என்று கூறி எனக்கு ஆதரவாக இருந்தார்.

என் அம்மா மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுமே குழந்தைகளின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டவர்கள்தான். ஆனால், உறவுகளும் சமூகமும் கொடுக்கும் அழுத்தமே அவர்களை வாய் மூடி மௌனமாக இருக்கச் செய்துவிடுகின்றன.

ஆனால் என் அம்மாவோ துணிச்சலாக எனக்கு ஆதரவாக இருந்தார். அவர் இப்போதும் என்னுடனே இருக்கிறார். என்னுடை லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த என் தம்பி, இப்போது என்னைப் புரிந்துகொண்டு ஆதரவாக இருக்கிறான்.

உறவுகளும், நட்புகளும் என் முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. என்னை ஆதரித்தமைக்காக, என் அம்மாவையும் அவர்கள் புறக்கணித்தார்கள். அவருடன் பேசுவதைத் தவிர்த்தார்கள். அது மட்டுமே என் அம்மாவுக்கு வருத்தமாக இருந்தது. என் வீட்டில் இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக என் அம்மாவை அவரது நெருங்கிய உறவினர்கூட பார்க்க மறுத்துவிட்ட நிகழ்வும் நடந்திருக்கிறது.

லிவிங் டுகெதர் தம்பதியராக நாங்கள் வீடு பார்க்கச் செல்கையில் எந்தவொரு புறக்கணிப்பையும் சந்திக்கவில்லை. அதுகுறித்துப் பல விஷயங்களைக் கேள்விப்பட்டிருந்தாலும், என் நண்பர் ஒருவருக்கே மோசமான அனுபவம் ஏற்பட்டிருந்தாலும்கூட எனக்கு அதுபோன்ற அனுபவம் இல்லை. நாங்கள் தம்பதியராகச் சென்று வீடு கேட்டபோது யாரும் மறுப்பு சொல்லவில்லை.

10 ஆண்டு கால காதல் தராத புரிதலை லிவிங் டுகெதர் உறவு கொடுத்தது

மண வாழ்க்கையில் என்னுடைய இயக்கத்தைத் தடை செய்வதாக குடும்ப அமைப்பு இருந்தது. ஒரு பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சமூக அழுத்தம் என் மீது திணிக்கப்பட்டது. குடும்பம், உறவுகள், சமூகத்தின் அழுத்தத்தைத் தாண்டி என்னுடைய கணவரும் என்னுடைய சுதந்திரமான இயக்கத்திற்குத் தடை போடத் தொடங்கியதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மனிதர்கள் எப்போதும் இப்படித்தான் இருப்பார்கள் என்று கணிக்க முடியாது அல்லவா!

ஆகவே, இது இனிமேல் சரிப்பட்டு வராது, இந்தக் கட்டத்தைக் கடந்தே தீர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் எந்தவொரு கசப்புணர்வும் இல்லை. ஆனால், எங்களுக்குள் ஒத்துவரவில்லை என்பதே பிரிவுக்குக் காரணமாகிவிட்டது.

நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றதும், இருவரும் நேரே ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டே வந்தோம். இன்றும் நல்ல நண்பர்களாகவே தொடர்கிறோம்.

லிவிங் டுகெதர் உறவில் புரிதலுடன் கூடிய இணை கிடைப்பது கடினம். ஆனால், எனக்கு அப்படிப்பட்ட ஓர் இணையர் கிடைத்தார். என்னுடைய சுதந்திரம், சுய மரியாதை, அரசியல் சித்தாந்தம் ஆகியவை குறித்துப் புரிந்து கொண்டவராக இருக்கிறார்.

எனக்கான இயங்கு வெளியைத் தடை செய்யாதவராக அவர் உள்ளார். இதுவே எங்களுக்குள் ஆத்மார்த்தமான அன்பையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது. "We have to grow old together(நாம் ஒன்றாகவே இறுதிவரை வாழவேண்டும்)" என்று அவரிடம் நான் கூறினேன்.

இத்தகைய புரிதலை 10 ஆண்டு காதல் எனக்குத் தரவில்லை. ஆனால், லிவிங் டுகெதர்கல் சேர்ந்து வாழும்போது கிடைத்தது.

லிவிங் டுகெதர் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய என்ன செய்யவேண்டும்?

லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இணைந்து வாழும் ஆண்-பெண் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பது அவசியம். இருவருமே தனிப்பட்ட முறையில் பொருளாதார சுதந்திரத்துடன் இருக்க வேண்டியதும் அவசியம். குறிப்பாக, பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கண்டிப்பாகத் தேவை. யாரையும் நம்பியிருக்காமல் சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு அவர் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

இதனால்தான், லிவிங் டுகெதர் வாழ்க்கை என்பது நமது சமூகத்தில் மேல்தட்டு வர்க்கத்தினருக்கே உரித்தான ஒன்றாக இருந்து வந்தது. என்னைப் பொருத்தவரை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், என்னுடைய வேலை இப்படித்தான் இருக்கப் போகிறது.

நான் யாரையும் சார்ந்திருக்கவில்லை என்பதில் தெளிவாக இருந்தேன். அதுவே, என்னை நம்பிக்கையுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை முன்னெடுக்க உதவியது.

லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையை நம் சமூகம் மோசமான ஒன்றாகவே அணுகுகிறது. மேற்கத்திய கலாசாரம் என்று கூறி அதற்கு எதிராக கலாசார காவலர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் கிளம்பி இருக்கிறார்கள்.

ஆனால், குடும்பம் என்ற அமைப்பின் வாயிலாகவே சாதியும் மதமும் தங்களை நிறுவிக் கொள்கின்றன. அந்தக் குடும்பத்திற்கு பெண்ணே அடிப்படையாக இருக்கிறாள். அவளை கற்பு, கலாசாரம் என்று கட்டுப்படுத்துவதன் மூலம் குடும்பமும் அதன் வாயிலாக சாதி, மதம் ஆகியவையும் நிலைபெற்றிருக்க வேண்டும் என்று பிற்போக்குவாதிகள் விரும்புகிறார்கள்.

லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை அந்தக் குடும்ப அமைப்பே வேண்டாம் என்று ஒதுக்கி விடுவதால், எங்கே தங்களது இருப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் காரணமாகவே அவர்கள் இதை எதிர்க்கிறார்கள்.

என்னுடைய இளம் வயதில் காதலுக்காகவே நான் பெரிய அளவில் போராட வேண்டியிருந்தது. என் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நெருங்கிய உறவினர்கள் பலருமே பின்னாளில் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஒன்றிரண்டு துயர நிகழ்வுகள் நடந்தேறினாலும், ஒப்பீட்டளவில் காதல் திருமணம் இன்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே மாறி வருகிறது.

அதேபோல், லிவிங் டுகெதர் வாழ்க்கையும்கூட ஏற்றுக் கொள்ளப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை. லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்த என்னை இந்த சமூகம் அடங்காத ஆளாகவே பார்த்தது. கல்யாணம் செய்தவர்களை மட்டுமே பெண்ணாகப் பார்க்கும் பார்வை இருக்கிறது.

இன்று பிறந்ததுமே செல்போனை கையில் எடுத்துவிடும் குழந்தைகளுக்கு எல்லாமே வெகு சீக்கிரத்தில் கிடைக்கிறது. 20 வயதிற்குள்ளாகவே, உலகம் குறித்த புரிதலும், வாழ்க்கையைப் பற்றிய தெளிவும் அவர்களுக்கு வந்துவிடுகிறது. அதனால், லிவிங் டுகெதர் வாழ்க்கையை அவர்கள் தீண்டத்தகாத ஒன்றாகப் பார்க்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: