காணொளி: காமனெயியை அமெரிக்கா, இஸ்ரேல் திட்டமிட்டு கொன்றது எப்படி?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டார். காமனெயி கொலைக்கு பின்னால் பல மாத திட்டமிடலும் காத்திருப்பும் இருந்ததாக பாதுகாப்பு ஆய்வாளர் கோர்டோன் கோரேரா குறிப்பிடுகிறார்.
இது பற்றி பிபிசியில் அவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவற்றை இந்த காணொளியில் பார்க்கலாம்.
இரான் அதி உயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்ட தாக்குதல் நள்ளிரவு நேரத்தில் அல்லாமல், காலை வேளை நடந்துள்ளது. ஏனெனில், அதற்கு சில மணிநேரத்திற்கு முன்பாக கிடைத்த முக்கியமான உளவுத்துறைத் தகவலை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவும் இஸ்ரேலும் முடிவு செய்திருந்தன.
இரானிய மூத்த அதிகாரிகள் சந்திக்க வாய்ப்புள்ள ஒரு சந்தர்ப்பத்திற்காக பல மாதங்களாக அவர்கள் காத்திருந்தனர். சனிக்கிழமை காலை காமனெயி மத்திய தெஹ்ரானில் உள்ள ஒரு வளாகத்திற்கு செல்லப் போகிறார் என்பது அவர்களுக்கு தெரிய வந்தது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடந்த பல மாதங்களாக அதி உயர் தலைவரின் நகர்வுகளை கண்காணித்து வந்தது. அதற்கு அவர்கள் பயன்படுத்திய முறைகள் ரகசியமானவை என்றாலும் அதிபர் டிரம்ப் சமூக ஊடகப் பதிவொன்றில் அதுகுறித்து சூசகமாக குறிப்பிட்டார்.
எங்களின் உளவுத்துறை மற்றும் அதி நவீனமான கண்காணிப்பு அமைப்பை அவரால் தடுக்க இயலவில்லை என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
நேரடியாக இது குறித்து உளவாளி ஒருவர் தகவல் கொடுத்திருக்கலாம். ஆனால், இரானிய தனிநபர்களை தொழில்நுட்ப முறையில் கண்காணித்ததன் மூலம் தகவல் கிடைத்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம் நடந்த 12 நாள் மோதலில் இரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளை இஸ்ரேல் குறிவைத்தது. அப்போது, தனி நபர்களின் நகர்வுகளை அறிய தொலைத்தொடர்பு மற்றும் மொபைல்போனுக்குள் ஊடுருவியதாக கூறப்பட்டது.
இதில், சில சமயங்களில் முக்கிய அதிகாரிகளுடைய மெய்க்காப்பாளர்களின் நகர்வுகளை கண்காணிப்பதும் அடங்கும்.
நீண்ட காலமாக இவ்வாறு தகவல்களைச் சேகரிக்கும் போது, வழக்கமான நடத்தை மற்றும் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். இதன்மூலம், அவர்களின் நடவடிக்கைகளை முன்கூட்டியே கணிக்கவும், பலவீனமான தருணங்களை கண்டறியவும் முடியும்.
தனது எதிரிகள் அதி உயர் தலைவரை பின்தொடர்வது இரானுக்கு தெரியும். ஆனால், அந்த பலவீனங்களை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்ய இரான் தவறியது பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவலை தடுப்பதில் இரானின் தோல்வி எனலாம் அல்லது புதிய கண்காணிப்பு வழிகளைக் கண்டறிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தங்கள் உத்திகளை மாற்றிக் கொள்ளும் திறனை இது குறிக்கிறது.
பகல் நேரத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்பு குறைவு என இரானியர்கள் கணித்திருக்கலாம்.
காமனெயி விவகாரத்தில் அமெரிக்காவின் முக்கிய உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் இருந்து உளவுத்தகவல் கிடைத்ததாகவும், தாக்குதல் நடத்த அந்த தகவல் இஸ்ரேலிடம் வழங்கப்பட்டதாகவும் நியூ யார்க் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
தலைவர்களின் இடங்களை தாக்குவதில் இஸ்ரேலும், ராணுவ இலக்குகளைத் தாக்குவதில் அமெரிக்காவும் கவனம் செலுத்தும் வகையில் தங்களுக்குள் பணிகளை பிரித்துக்கொண்டதாக அறிகுறிகள் தென்படுகின்றன.
முக்கியமாக, நீண்ட தூர ஏவுகணைகளை ஏவக் கூடிய போர் விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதலைத் திட்டமிடக்கூடிய வகையில், காமனெயி நகர்வுகள் மற்றும் பிற அதிகாரிகளின் நகர்வுகள் குறித்து போதுமான தகவல்களை உளவுத்துறை முன்கூட்டியே வழங்கியது.
ஒரே ஒருவரை குறிவைத்து நடத்தும் தாக்குதலாக அல்லாமல், இந்தத் தாக்குதல் விரிவான ஒரு பெரிய நடவடிக்கையின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. அதற்கான சாதகமான வாய்ப்பு கிடைத்ததால், அந்தத் திட்டம் முன்னதாகவே செயல்படுத்தப்பட்டது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் தெஹ்ரானை அடைய சுமார் இரண்டு மணி நேரம் எடுக்கும். அவை எவ்வளவு தூரத்தில் இருந்து தங்கள் ஆயுதங்களை செலுத்தின என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தாக்குதலுக்கான முடிவு எடுக்கப்பட்டதும், உள்ளூர் நேரப்படி காலை 9:40 மணியளவில் காமனெயி வளாகத்தைத் தாக்க இஸ்ரேலிய போர் விமானங்கள் 30 குண்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இரான் அதிஉயர் தலைவர் காமனெயி தன்னை பாதுகாத்துக் கொள்ள அந்த வளாகத்திற்கு கீழேயுள்ள பதுங்கு குழிகளை பயன்படுத்தலாம் என்பதால் இந்த அளவு குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம்.
காமனெயி தாக்கப்படுவதை உறுதிசெய்ய, பதுங்கு குழியை தகர்க்க பல குண்டுகள் தேவைப்பட்டிருக்கலாம்.
தெஹ்ரானில் உள்ள பிற இடங்களும் தாக்கப்பட்டன, அதில் அதிபர் மசூத் பெஷேஷ்கியனின் அலுவலகமும் அடங்கும். பின்னர் அவர், தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார்.
இரானில் போர் விமானங்கள் தாக்கிய போது, அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நள்ளிரவு நேரம். அதிபர் டிரம்ப் தனது உயர் அதிகாரிகள் சிலருடன் நிகழ்வுகளை கண்காணிக்கக் கூடியிருந்தார்.
காமனெயி கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்த பல மணிநேரம் ஆனது.
இருப்பினும், இரான் இந்த சாத்தியத்திற்கும் தயாராகவே இருந்தது. அதி உயர் தலைவருக்கு மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகளின் பொறுப்புக்கும் அடுத்து வரக்கூடிய நபர்கள் குறித்த திட்டங்கள் தயாராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, இந்த மோதலின் போக்கில் இந்தக் கொலை என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



