சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை உண்மையில் சந்தித்தாரா?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்தாரா, புகைப்படம் எடுக்கப்பட்டதா என்பது குறித்த விவாதங்கள் சமீப நாட்களாக தமிழக அரசியல் களத்தை ஆக்கிரமித்திருக்கின்றன.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில நாட்களாக பெரியார் மீது தொடர் விமர்சனங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பல வருடங்களுக்கு முன்பாக அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது தொடர்பான விவாதங்களும் எழ ஆரம்பித்திருக்கின்றன.
கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் என்பவர், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில், "இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்" என்று குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் ஊடகங்களுக்கும் இது தொடர்பாக பேட்டியளித்தார் ராஜ்குமார். அந்தப் பேட்டிகளில் சீமானுக்கு பரிசளிப்பதற்காக இதுபோன்ற ஒரு படத்தை உருவாக்கித் தரும்படி ஒருவர் கேட்டதாகவும் அதற்காகவே அப்படி ஒரு படம் உருவாக்கப்பட்டதாகவும், உண்மையில் அப்படி ஒரு படம் எடுக்கப்படவே இல்லையன்றும் அவர் தெரிவித்தார்.
அதற்கடுத்ததாக, பிரபாகரனின் அண்ணன் மகனான கார்த்திக் மனோகரன், சீமான் கூற்றுகளை மறுத்து தொலைக்காட்சி பேட்டி ஒன்றை அளித்தார்.
அந்தப் பேட்டியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்து சீமானிடம் பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, அவர் மிகுந்த கோபத்துடன் பதிலளித்தது, சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திரைப்பட ஒளிப்பதிவாளரான சந்தோஷ் என்பவர், இரு நாட்களுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மை என்று குறிப்பிட்ட அவர், அது தொடர்பாக சீமான் தெரிவிக்கும் பிற கருத்துகள், தகவல்கள் பொய்யானவை எனத் தெரிவித்தார்.
அதிநவீன துப்பாக்கியுடன் சீமான் இருக்கும் புகைப்படம், 'எல்லாளன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் நடுவே எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பேட்டி வெளியான பிறகு, சமூக வலைதளங்களில் சீமான் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் கடுமையாக மோதி வருகின்றனர்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



