இளைஞர்களின் திடீர் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பா? டெல்லி எய்ம்ஸ் ஆய்வில் புதிய தகவல்

கோவிட் தடுப்பூசி மற்றும் மாரடைப்புக்கு இடையேயான 'தொடர்பு' குறித்த எய்ம்ஸ் ஆய்வைப் பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஷுப் ராணா
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக

இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கோடிக்கணக்கான மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கோவின் (CoWIN) இணையதள தகவல்படி, டிசம்பர் 2025 வரை, 220 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கும்.

கோவிட் தடுப்பூசி தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. அது, "இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கும் கோவிட் தடுப்பூசி அல்லது தொற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று கூறுகிறது.

இந்த ஆய்வு குறித்து பிபிசி நியூஸ் ஹிந்தி சுகாதார நிபுணர்களிடம் பேசியது.

உலக சுகாதார அமைப்பின்படி (WHO), "2024 இறுதி வரை உலகம் முழுவதும் 13.64 பில்லியனுக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன."

உலக சுகாதார அமைப்பு இன்றும் தடுப்பூசியைப் பரிந்துரைக்கிறது.

அதே நேரத்தில், எய்ம்ஸ் ஆய்வில் மாரடைப்புக்கு இதய நோய்களே மிகப்பெரிய காரணம் எனக் கருதப்படுகிறது.

தடுப்பூசி மற்றும் மரணங்களுக்கு இடையிலான தொடர்பு குறித்த ஆய்வு என்ன சொல்கிறது?

கோவிட் தடுப்பூசி மற்றும் மாரடைப்புக்கு இடையேயான 'தொடர்பு' குறித்த எய்ம்ஸ் ஆய்வைப் பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Images

டெல்லி எய்ம்ஸ் நோயியல் மற்றும் தடயவியல் மருத்துவத் துறை, மே 2023 முதல் ஏப்ரல் 2024 வரை ஒரு வருட காலத்திற்கு பிரேதப் பரிசோதனை அடிப்படையிலான ஆய்வை நடத்தியது.

"இளம் வயதினரிடையே திடீர் மரணங்களின் சுமை: இந்தியாவின் ஒரு பெரிய மருத்துவமனையில் ஓராண்டு ஆய்வு" (Burden of sudden death in young adults: A one-year study at a large hospital in India) என்று தலைப்பிடப்பட்ட இந்த ஆய்வு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முதன்மை இதழான 'இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்'-ல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் விபத்து, தற்கொலை, கொலை அல்லது போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்பட்ட மரணங்களைத் தவிர்த்துவிட்டு, பிற திடீர் மரணங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. மொத்தம் 94 இளைஞர்கள் (19-45 வயது) மற்றும் 68 மூத்தவர்கள் (46-65 வயது) தொடர்பான மரணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இளைஞர்களின் சராசரி வயது 33.6 ஆண்டுகளாக இருந்தது.

எய்ம்ஸ் ஆய்வின்படி இளைஞர்களின் மரணத்திற்கு இவை முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன:

  • இதய நோய்கள்: இதுவே மிகப்பெரிய காரணம் - இளைஞர்களின் மரணத்தில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு இதனாலேயே நிகழ்ந்துள்ளது.
  • இந்த மரணங்களில் 85% பேருக்கு 'ஏத்ரோஸ்க்ளெரோடிக் கரோனரி ஆர்டரி நோய்' (சிஏடி) கண்டறியப்பட்டது. அதாவது இதயத் தமனிகளில் 70%-க்கும் அதிகமான அடைப்பு இருந்தது.
  • அதிகம் பாதிக்கப்பட்ட தமனி - 'லெஃப்ட் ஆன்டீரியர் டிசென்டிங் ஆர்டரி' (எல்ஏடி), அதற்கு அடுத்ததாக வலது கரோனரி தமனி.
  • இளைஞர்கள் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மரணத்திற்கு இரண்டாவது காரணம் நிமோனியா, காசநோய் போன்ற சுவாச நோய்கள்.
  • இளைஞர்களிடம் காணப்படும் மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம்.

இந்த ஆய்வில் சுமார் 20% பேரின் மரணத்திற்கான தெளிவான காரணம் கண்டறியப்படவில்லை. அதாவது பிரேத பரிசோதனை செய்த பின்னரும் மரணம் விளைவித்தது எதுவென்று தெரியவில்லை.

தடுப்பூசி குறித்த தனது ஆய்வில் எய்ம்ஸ் கோவிட் தொற்று வரலாறு அல்லது தடுப்பூசி நிலைக்கும் திடீர் மரணங்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்கத் தொடர்பு எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.

ஆய்வு குறித்த கேள்விகள்

கோவிட் தடுப்பூசி மற்றும் மாரடைப்புக்கு இடையேயான 'தொடர்பு' குறித்த எய்ம்ஸ் ஆய்வைப் பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Images

புனே டி.ஒய். பாட்டீல் மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத் துறை பேராசிரியரான மருத்துவர் அமிதாப் பானர்ஜி, எய்ம்ஸ் ஆய்வின் மீது கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் கூறுகையில், "ஆய்வில் சுமார் 20% மரணங்களில் அதற்கான காரணம் தெரியவில்லை (மரணத்திற்கான காரணம் தெரியாத அல்லது முடிவு தெரியாத பிரேத பரிசோதனை). இந்த காரணம் அறியப்படாத மரணங்களில் கோவிட் தடுப்பூசிக்கு ஏதேனும் பங்கு இருக்காதா? எய்ம்ஸ் இவற்றை இன்னும் ஆழமாக ஆய்வு செய்திருக்க வேண்டும்" என்கிறார்.

இருப்பினும், இந்த மரணமடைந்த நபர்களின் சராசரி வயது 30.5 ஆக மட்டுமே இருந்தது என்று எய்ம்ஸ் ஆய்வு கூறுகிறது. இதில் 30-40 வயதுடையவர்கள் 50% மற்றும் 20-30 வயதுடையவர்கள் 40% ஆக இருந்தனர்.

மரணமடைந்த பாதி பேருக்கு இதய திசுக்கள் பரிசோதிக்கப்பட்டபோது, இதயத் தசை தடிமனாதல் அல்லது தமனிகளில் மெல்லிய கொழுப்புப் படிவம் போன்ற சிறிய மாற்றங்கள் காணப்பட்டன.

ஆனால், இவை மரணத்திற்கு நேரடி காரணமாகும் அளவுக்குத் தீவிரமானவை அல்ல என்று ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி குறித்து மருத்துவர் அமிதாப் பானர்ஜி கூறுகையில், "ஐரோப்பாவின் பல நாடுகள் ரத்த உறைவு போன்ற அரிய, ஆனால் தீவிரமான பக்கவிளைவுகள் காரணமாக, குறிப்பாக இளைஞர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் ஆபத்துகள் காரணமாக கோவிஷீல்டு தடுப்பூசியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தன, " என்றார்.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி உற்பத்தி நிறுத்தப்பட்டது குறித்தும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தனது தடுப்பூசியால் 'தீவிர பக்கவிளைவுகள்' ஏற்படக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டது.

பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில், தடுப்பூசியால் 'திராம்போசிஸ் வித் திராம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்' போன்ற நிலை ஏற்படலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து இந்தத் தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்தது அஸ்ட்ராஜெனெகா தான்.

"இதன் பக்கவிளைவுகள் மிகவும் அரிதானவை, அதாவது 'அரிதினும் அரிதானவை'; ஆனால் கோடிக்கணக்கான மக்கள் என பெரிய அளவில் பயன்படுத்தப்படும்போது, அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும்," என மருத்துவர் அமிதாப் பானர்ஜி மேலும் கூறினார்.

எய்ம்ஸ் நோயியல் பேராசிரியரும் ஆய்வின் இணை ஆசிரியருமான மருத்துவர் சுதிர் அராவா கூறுகையில், "இளைஞர்களின் திடீர் மரணங்களுக்குக் கோவிட் தடுப்பூசி காரணம் அல்ல என்பது எங்களது ஆரம்பக்கட்ட ஆய்வில் தெளிவாகியுள்ளது. இந்தியாவில் இளைஞர்களிடையே ஏற்படும் இத்தகைய மரணங்கள் குறித்த ஆய்வுகள் அதிகம் இல்லை. நாங்கள் இதுகுறித்து விசாரணை நடத்தினோம், இந்த மரணங்கள் கோவிட் தொற்றோடு தொடர்புடையவை அல்ல என்பதைக் கண்டறிந்தோம்." என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் மொஹ்சின் வலி கூறுகையில், "தடுப்பூசிக்கும் இளைஞர்களின் திடீர் மரணத்திற்கும் தொடர்பில்லை என்பதை எய்ம்ஸ் மற்றும் ஐசிஎம்ஆர் ஆய்வு நிரூபித்துள்ளது. ஆனால், நாம் கோவிட் காலத்தை ஏன் மறந்துவிடுகிறோம்? கோவிட் இன்றும் நம்மிடையே இருக்கிறது, தொடர்ந்து இருக்கும். மக்கள் எளிதான வழியைத் தேடி தடுப்பூசி மீது பழி போடுகிறார்கள்" என்றார்.

"நாம் பல நாடுகளுக்குத் தடுப்பூசிகளை இலவசமாகவும் தானமாகவும் வழங்கியுள்ளோம். அங்கெல்லாம் இத்தகைய புகார்கள் வரவில்லை. நம் நாட்டில் மட்டும் ஏன் இது நடக்கிறது? நாம் குழந்தைகளின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துவதில்லை. குழந்தைகளின் ரத்த அழுத்தத்தை சோதிப்பதில்லை மற்றும் துரித உணவு மற்றும் சீஸ் நுகர்வை கண்டுகொள்வதில்லை," என மருத்துவர் மொஹ்சின் வலி மேலும் கூறினார்.

மொஹ்சின் வலி மேலும் விளக்குகையில், "திடீர் மரணங்களுக்கும் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எய்ம்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தாலும், இளைஞர்கள் திடீரென மரணமடைவதற்கான காரணங்கள் என்ன என்பதையும் எய்ம்ஸ் தனது ஆய்வில் தெளிவாக விளக்கியிருக்க வேண்டும்," என்று கூறினார்.

இருப்பினும், இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்களுக்கு இதய நோய்களே முதன்மைக் காரணம் என்றும், அதற்கடுத்தபடியாக சுவாசப் பிரச்னைகள் இருப்பதாகவும் எய்ம்ஸ் ஆய்வு கண்டறிந்துள்ளது. இதய நோயால் ஏற்படும் மரணங்களில் 85% பேருக்கு தமனிகளில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்புக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.

மாரடைப்புக்கு அடிப்படை காரணங்களை வலியுறுத்திய அவர், இந்தியாவில் மாரடைப்பு இப்போது குறைந்த வயதிலேயே ஏற்படுகிறது என்றும், இதற்குப் பின்னால் மூன்று "S" காரணிகள் உள்ளன என்றும் கூறினார்: Stress (மன அழுத்தம்), Sleep (தூக்கமின்மை) மற்றும் Smoking (புகைப்பிடித்தல்) ஆகியவையே அந்த மூன்று 'S'கள்.

இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் மரணத்திற்கு வேலை செய்யும் முறை மற்றும் அதனுடன் தொடர்புடைய வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களே காரணம் எனக் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், "பல இளைஞர்கள் மது அருந்துவது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர், இவை நேரடியாக இதயத் தமனிகளில் அடைப்பு ஏற்படும் நோய்க்கு வழிவகுக்கின்றன. எனவே, வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்துகொள்வது அவசியமானது," என்று மருத்துவர் சுதிர் அராவா தெரிவித்தார்.

இளைஞர்கள் அறிவியல் ஆதாரங்களை நம்ப வேண்டும் என்றும் தவறான தகவல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர் சுதிர் அராவா கேட்டுக்கொண்டார்.

எய்ம்ஸ் ஆய்வின்படி, இந்தியாவில் இளைஞர்களிடையே இதய நோய்கள் வேகமாக அதிகரிப்பதற்கு மன அழுத்தம், மோசமான உணவு முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் வாழ்க்கை முறையே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. முறையான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகள் மூலம் இந்த மரணங்களைத் தடுக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு